எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


16 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -36

நம் வாழ்க்கையோ வாழைக்காயோ
யாரொருவர் வாயிலும்
பச்சையாய் விழாதவரையில் நலம்..
விழுந்து விட்டால் நீங்காத கறை
ஏற்பட்டு விடுவது நிச்சயம்!!

images (5)
எல்லோரும் ஒன்று கூடி குழையட்டும்
அன்பு நெய்யாய் உருகி ஓடட்டும்
உள்ளத்தில் மகிழ்ச்சி வெல்லமாய் கல்கண்டாய் இனிக்கட்டும்
முந்திரி திராட்சையாய் குதூகூலம் நிறையட்டும்
அழகாய் பொங்கட்டும் தங்கள் வீட்டு பொங்கல்

1010404_586413751451538_49336745_n

ஆலமரத்தடி இல்ல தான்
தோளில் வெள்ளை துண்டு போடல தான்
வாயில் வெத்தலையை குதப்பி குதப்பி
புளிச் புளிச் என்று துப்பலை தான்
ஆனாலும் என் பசங்க வீட்டில் இருக்கும்
விடுமுறை தினங்களில் காலை எழுந்ததில் இருந்து
இரவு கண் அயரும் வரை 1008 பஞ்சாயத்து
செய்து தீர்ப்பு சொல்லிட்டு தானுங்க இருக்கேன்!!

579087_350795664981287_1356424568_n

டேய் டேய்..
ப்ளீஸ் சொல்லுடா..
இன்னிக்கு குறுமா எப்படி இருக்கு..
கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன்..

.
.
ஓ! இது குறுமாவா அம்மா!

images (6)
டேய் ரிமோட் எங்கடா வச்சு தொலைச்ச..
ஒரு கால் பண்ணி பாருமா..
???

download (3)

ஒரு ஆறு ஏழு மணி நேரம்
தூங்கி எழுவதற்குள் திரும்பவும்
புறப்பட்ட இடத்திலேயே வந்து
நிற்பது போல் ஒரு பிரமை..
வீட்டு வேலைகள்!!

download (4)

நாக்கில தேன் தடவி
பேசறதெல்லாம் பெரிய
விஷயமே இல்ல..
அந்த தேன் ஆனது
எறும்பு கூட விரும்பாத
கலப்படம் சிறிதும் இல்லாத
உண்மையானதாய் இருப்பது
தான் மிக பெரியதொரு விஷயம்!

images (7)
கிளி பொம்மை விற்பவனிடம்
பேரம் பேசி வாங்குவதற்கு
முன் ‘சொத்தை’ எதுவும் இல்லையே
என்று கேட்டறிந்து தன் ஐயம்
முழுதும் தீர்ந்த பின்னரே
அதை வாங்கி தன் கூடையில்
போட்டு கொண்டாள் காய்கறிகாரி!!

1386609320_575671610_1-Pictures-of--Talking-Parrot-Musical-Toy-Talk-Back-Parrot-Fun

பசி தாங்க மாட்டாமல்
வீல் என்று அலறிய
குழந்தையை கண்டு
மனம் பொறுக்கமாட்டாமல்
அப்பொழுது தான் வடித்த
சோற்றை ஒரு கரண்டி
எடுத்து பருப்பும் நெய்யும்
விட்டு பிசைய முற்படும்
போது சூடு தாங்கமாட்டாமல்
ஆ வென்று அலறிய அம்மாவை
பார்த்து அழுகை நிறுத்தி
விட்டு புரியாமல் வேடிக்கை
பார்த்தது குழந்தை!!

images (8)


2 பின்னூட்டங்கள்

நினைவுகள்-1

படம்

எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை, நினைவு தெரிஞ்ச நாள், அது எந்த நாள், சரியாக நியாபகம் இல்லை! அப்பா அம்மா உறவினர்கள் சொல்ல கேட்டதுண்டு, நீ இது செய்வாய் , அது செய்வாய் என்று, என் நியாபகத்தில் அழியாமல் இருப்பது மட்டும் இங்கே காலத்தால் அழியாத சுவடாய் பதித்து விடுகிரேன். மழலை பேசும் வயதில் சொட்ட சொட்ட நான் நனைந்த மழை தான் முட்டி மோதி கொண்டு முதல் நியாபகமாய் கண் முன் வருகிறது. ஸ்கூலில் முதல் தடவையாய் தண்டனை வாங்கியதும் அதற்காகதான்! எல்.கே.ஜி படித்து கொண்டிருந்த நேரம். மழையில் நனைந்ததை கூட அவர்கள் குற்றமாக சொல்லவில்லை, தூரத்தில் ஆசிரியை வருவதை கண்டவுடன், கமுக்கமாக உள்ளே ஓடி சென்று சமர்த்து பிள்ளையாய், ஈரமாய் உட்கார்ந்து இருந்ததை தான் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை!

 
வாழ்க்கையில் அந்த குட்டி வயதில் என் லட்சியம் என்ன தெரியுமா, எங்கள் வகுப்பின் முன் அமைந்த சிறு விளையாட்டு திடலில் இருந்த ஊஞ்சலில் வேகமாய் ஆடி, அதன் பக்கத்தில் இருந்த வேப்ப மர உச்சியில் உள்ள பேய் இல்லை, இலையை காலால் தொட்டு விட வேண்டும் என்பது தான் அந்த தணியாத ஆசை! அந்த ஆசையும் ஒரு நாள் நிறைவேறியது. நான் பிற்காலத்தில் பற்பல சுவர்களையும் அசால்டாக ஏறி இறங்க இந்த சிறு விளையாட்டு திடலே எனக்கு பாலமாக இருந்தது. அந்தவயதில் பிடிக்காத ஒரே ஒரு விளையாட்டு குடைராட்டினம், பூமி என்னை சுற்றுவதை நான் ஒரு போதும் விரும்பியதே இல்லை.
எல்.கே.ஜி முடித்து, லீவு விட்டு ஸ்கூல் ஆரம்பித்தவுடன், யு.கே.ஜி செல்ல மனமின்றி திரும்பவும் எல்.கே.ஜி யிலேயே சென்று அமர்ந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. பிறகு வலுக்கட்டாயமாக யு.கே.ஜி அனுப்பியது வேறு கதை. அந்த வயதில் எனக்கு ஸ்கூல் ரசித்ததே இல்லை. ஏதோ கடனுக்கு போய் விட்டு வருவேன். அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு. என்னதான் மருந்து, டாக்டர் ஊசி என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்கூல் போக வேண்டாம் என்ற நினைவு சந்தோஷத்தையே தரும். நான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் முதல் செல்ல மகள் என்பதால் சிறிது செல்லம் உண்டு. இந்த மாதிரி உடம்பு சரி இல்லாமல் போகும் சமயங்களில் எல்லாம், என் வீட்டு பாடத்தை அம்மாவே எழுதி குடுத்து விடுவார். ருசி கண்ட பூனை சும்மாவா இருக்கும், வீட்டு பாடங்களை எல்லாம், எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது என்று அம்மாவையே செய்ய வைத்து விடுவதுண்டு. ஒரு நாள் அம்மா என் வீட்டு பாடத்தை செய்ய மறந்து போனார். காலையில் தான் அம்மாவுக்கு நியாபகம் வர, அன்று வீட்டு பாடத்தை அப்பாவை எழுதி வைக்க சொல்லி விட்டார்.
அன்று பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாய்,மாறி இருந்த கையெழுத்தால் அன்று நான் பிடிபட்டேன். இத்தனை நாள் ஏமாற்றிய கை வலி கால் வலிகள் அன்று நிஜமாகின. முதன் முறையாய் வகுப்புக்கு வெளியே முட்டி போட வைத்தனர். அதுக்கப்புறம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நானே என் வேலைகளை செய்து கொள்ள ஆரம்பித்தேன். அன்று நான் கூடுதலாக கற்று கொண்ட இன்னொரு பாடம், வலிக்காமல் முட்டி போடுவது எப்படி என்பதை! பின்னாளில் அவசிய படும் இல்லையா!
என் முதலாம் வகுப்பு ஆசிரியை மிகவும் கண்டிப்பானவர். எப்பவும் உம் என்று முகத்தை தூக்கி வைத்திருப்பார். அவரை பார்த்தாலே எனக்கே குலை நடுங்கும். எப்பொழுதும் அவருடைய கோபத்துக்கு இரையாவது என் காது மடலின் நுனிகள். அவருடைய கூர்மையான நகங்களை வைத்து நன்கு கிள்ளி வைத்து விடுவார். ஒரு நாள், என் பெயரை சொல்லி அழைத்தார், ரொம்பவே பயந்து போனேன், அய்யையோ போச்சுடா என்று காதை கைகளால் மறைத்து கொண்டே அருகில் சென்றேன், ரிபோர்ட் கார்டை கையில் குடுத்து, நீ முதல் ரேங்க், வாழ்த்துக்கள் என்று முறைத்து கொண்டே சொன்னார். இது கனவா, நிஜமா என்று அவர் கிள்ளாத குறைக்கு, நானே என்னை கிள்ளி பார்த்து கொண்டேன். நான் வாழ்க்கையில் வாங்கிய முதல் ரேங்க், அதுவே முதலும் கடைசியும்!
இன்னும் நியபகத்தில் இருக்கும் ஒரு விஷயம், எனக்கு அடிக்கடி ஆகஸ்ட் 15 1947(சுதந்திர தினமும்), ஜனவரி 26 குடியரசு தினமும் குழப்போ, குழப்பென்று குழப்பி தள்ளி விடும். அதனால் ஈசியாக படிக்க நான் செய்தது, விடைகளை எல்லாம், கட்டிலுக்கு அடியில், அம்மாவுக்கு தெரியாமல் எழுதி வைத்து விட்டு, அம்மா கேள்வி கேட்க கேட்க டான் டான் என்று, பார்த்து பார்த்து சொல்லி விடுவேன். பரிட்சைக்கு முந்தய தினம் ஒருவாறு சமாளித்தாலும், எவ்ளோ நாள் சோற்றுக்குள் முழு பூசணியை மறைத்து வைக்க முடியும்! பரிட்சை தாள் திருத்தி வந்தவுடன், அம்மா ஸ்கூலுக்கு வந்து மிஸ்ஸோடு சண்டையிட்டு கொண்டிருப்பார். வீட்டில் நன்கு படிக்கும் பிள்ளைக்கு ஏன் பரிட்சையில் சோபிக்க முடியவில்லை, அம்மா ஆராய்ந்து பார்த்து என்னை கையும் களவுமாய் பிடித்து விட்டார் ஒரு நாள்.அப்புறம் என்ன அடி, படி படி என்று உயிரை வாங்கி என்னை படிக்க வைத்த பெருமை என் அம்மாவையே சாரும்!

 

—-நினைவுகள் தொடரும்


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -12

வாழ்க்கையில் சூடு பட்ட நெஞ்சமும்
டீயால் சூடு பட்ட நாக்கும்
சுவைகளை அறிய முற்படுவதில்லை!!

படம்

 

ஆவின் கண்கள் இவ்வளவு அழகா என்று
ஆவென்று வாயை பிளந்து வியந்தால்
அது Bulls Eye!!

படம்

 

பருப்பு வெந்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாக மசித்து விட்டு
விடுதல் நலம் இல்லையேல்
எவ்வளவு திறமையாக சாம்பார்
வைத்தாலும் பருப்பு தனித்தனியாக
முழித்து கொண்டு தான் நிற்கும்…
படம் எடுத்து முடிந்த கையோடு
சூட்டோடு சூடாய் ரீலீஸ் ஆக
முடியாமல் தடை செய்யபட்டு பின்பு
வெளி வருகின்ற திரைபடங்கள் போல!!

படம்

 

இளமை கொப்பளிக்கும்
முகப்பருக்களுக்கு
பாதுகாவலாய்
கருப்பு பூனை படைகள்
.
.
.
.
.
.
Black Heads!!

 

நம்ம ஆசை ஆசையா
திருப்பி திருப்பி 
எத்தனவாட்டி
கால் செய்தாலும் 
ஃபோனை கையில 
எடுப்பேனா என்று
அடம் பிடிப்பவர்
.
.
.
.
.
கேஸ் புக் செய்பவர்!!

படம்

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் 
ஒரு காலம் இருக்குது என்று
சொன்னால் புரியவா போகுது
.
.
.
.
.

பகலிலும் என்னை சுற்றி சுற்றி
கடிக்கும் மரமண்டை கொசுக்கள்!!

படம்

 

 


6 பின்னூட்டங்கள்

முன்னெச்சரிக்கை

படம்புயல் கரையை கடப்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வகம் அவ்வப்பொழுது எச்சரிக்கை விடுவதுண்டு!

இப்படி முன்னெச்சரிக்கை கொடுப்பதால், ஏராளமான மீனவர்களுடைய உயிர் காப்பற்றப்படுகிறது!

அதே போல் நம்முடைய வாழ்க்கைப்பாதையில் நடை பெற போகும் துரதிருஷ்டமான சம்பவங்கள் பற்றி ஒருவருக்கு முன்னெச்சரிக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்…….

இது தான் ‘FINAL DESTINATION’ ஆங்கில படத்தின் ஒரு வரி கதை!!

சிறு வயதில் இருந்தே, திரில்லர் படங்களின் மீது ஒரு ஆர்வம் உண்டு, இப்படி ஒரு படம் எப்பொழுது வந்தது என்று இப்படத்தை பார்க்கும் வரை சத்தியமாக தெரியாது! அன்று ஒரு நாள் ஏதேச்சையாக இப்படத்தை சில நிமிடங்கள் பார்க்க நேர்ந்தது!

படத்தின் ஹீரோ, தன் அலுவலக பேருந்தில் பயணம் செய்கிறான், அப்பேருந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக, நட்ட நடு பாலத்தில் நின்று விடுகிறது!

நல்ல உயரமான, பழமையான பாலம் அது! பாலத்தின் ஒரு ஒரமாக, அதை செப்பனிடும் பணி வேறு நடை பெறுகிரது! இதை பேருந்தின் ஜன்னல் வழியாக கவனித்து கொண்டிருந்த நம் ஹீரோவுக்கு ஒரு PREMONITION, அதாவது ஒரு முன்னெச்சரிக்கை ஒரு கனவு போல ஒரு நொடியில் அவன் கண் முன்னே வந்து செல்கிறது!

அந்த பாலம் உடைய போவதாகவும், அதில் அவனுடன் பயணம் செய்தவர்கள், அனைவரும் மிக குரூரமாக மரணத்தை எதிர் கொள்வது போலவும் வந்தது அந்த PREMONITION!!

ஹீரோவும் உடனே எல்லோரையும் எச்சரிக்கை செய்கிரான்! அவன் வார்த்தைகளை நம்பியோர் பேருந்தை விட்டு இறங்கி, பாலத்தை கடந்து உயிர் தப்பி விடுகின்றனர்! அவனுடைய வார்த்தையை நம்பாதவர்கள் தத்தம் சாவை எதிர் கொள்கின்றனர்!!

தப்பித்த எல்லோரும் ஹீரோவை பாராட்டிவிட்டு செல்கின்றனர்! இதோடு படம் முடிந்து விட்டதா என்ன, அது தான் இல்லை, இப்போதான் படமே ஆரம்பிக்கின்றது!!

விபத்தில் தப்பித்தவர்கள், ஒருவர் பின் ஒருவராய், ஒரு ‘CHAIN OF DEATH’ போல, ஏதாவது ஒரு விபத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர்! பாலம் உடைந்த விபத்தில், சாவில் இருந்து தப்பித்தவர்கள், உண்மையாக பாக்கியசாலிகள் இல்லை, அவர்களுக்காக சாவு சிகப்பு கம்பளம் விரித்து, காத்து கொண்டிருக்கிறது என்பதை தாமதமாக தான் புரிந்து கொள்கின்றனர்!

ஒரே ஒரு option தான் அவர்களுக்கு, ஒன்று அந்த CHAIN OF DEATH ஐ break up செய்ய வேண்டும், இல்லை தனக்கு வரவிருக்கும் சாவை, வேறு யார் மீதாவது திருப்பி விட வேண்டும்!

அந்த பாலம் உடைந்த அப்பவே, இவர்கள் எல்லாம் தங்கள் உயிரை விட்டிருக்கலாம் என்று ஒரு உணர்வு எனக்கு தோணாமல் இல்லை! அவ்வளவு கொடுமையான சாவு அவர்கள் எல்லோருக்கும்! நான் தொலைகாட்சியில் இப்படத்தை, முதல் 15 நிமிடங்கள் தான் பார்த்தேன், பிறகு ஆர்வ கோளாறில், அப்படத்தை internet  இல்  download செய்து பார்த்தேன்!

நான் செய்த பெரிய தவறு  அது தான்! யாரவது எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்து இருந்திருக்கலாம்! இந்த படம் 5 பாகங்களாய் வெளி வந்திருக்கிறது ! ஐந்துமே BOX OFFICE HIT!

ஒவ்வொரு பாகங்களிலும், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஒரு PREMONITION வருகிறது, அந்த நொடியில், ஹீரோவை சுற்றி இருக்கும் அனைவரும் காப்பாற்ற பட்டு, பிறகு எப்படி எப்படி எல்லாமோ, ஒருவர் மாற்றி ஒருவராய் தங்கள் உயிரை கொடுமையாக விடுகின்றனர் என்பதே இப்படத்தின் கதை! கடைசியாய் நம்ம ஹீரோவும் உயிரை விட, படம் முடிவடைந்து நன்றி, வணக்கம் போடுகின்றனர்!!!

நான் இவை ஐந்தில், ஒரு பாகத்தை, சில மணி நேரம், பார்ப்பதற்குள்ளாகவே, எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது! எங்க படம் பார்க்கும், நம்மையும் போட்டு தள்ளீருவாங்களோனு ஒரு பயமே வந்திருச்சு!!

இந்த மாதிரி படங்கள் எப்படி தான் சக்கை போடு போட்டதோ, ஆறாவது பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடை பெற்று கொண்டிருக்கிரதாம், ஹ்ம்ம் கலிகாலமப்பா……


3 பின்னூட்டங்கள்

ஓட்டை வடை

vadai

நடுவில் ஓட்டையோடு சுட்டு எடுக்கும் உளுந்த வடையை, என் பசங்க ஓட்டை வடைனுதான் குறிப்பிடுவாங்க! எல்லா விஷேச தினங்களிலும், இந்த வடையை சுடாமல் இருக்க மாட்டார்கள், நம் தமிழக மக்கள்! நானும், நன்கு பக்குவம் பார்த்து ஆட்டி, ஒவ்வொரு விஷேச தினத்திலும், சிறிது கூட எண்ணை குடிக்காத வண்ணம், சுட்டு எடுத்து விடுவேன், ஆனால் ஒரே ஒரு குறையோடு! ஆமாங்க எனக்கு வடையின் நடுவில் ஓட்டையே விழாது!
யாரெல்லாம் ஒட்டையோடு, இந்த வடையை சுடுகிரார்களோ, அவர்கள் எல்லாருமே எனக்கு சமையலில் பெரிய ஆட்கள்தான்! எத்தனையோ பேரு எனக்கு வடையில் ஓட்டை போட கற்றுகுடுக்க முயன்று தோற்று போயிருக்கிரார்கள்! எத்தனை பேர் எவ்வளவு அழகாக, சடக் சடக் என்று ஒரு விரலை வைத்தே, மாவினுள் ஒட்டை போட்டு வடையை சுட்டு எடுக்கிரார்கள்! செமையான விரல் வித்தை காரர்கள்!
என்னுடைய வடை போண்டா விலும் சேராமல், பஜ்ஜியிலும் சேராமல், ஒரு மாதிரியாகதான் இருக்கும்! சுவையில், ஓட்டை வடையை போலவே இருந்தாலும், ஓட்டை இல்லாத காரணத்தினால், என்னுடைய பசங்க இரண்டு பேரும், வடையை நிராகரித்து விடுவார்கள்! என் கணவர் ஒருவர்தான் எனக்காக அந்த ஓட்டை இல்லா வடையை சாப்பிட்டு காலி செய்வார்! அவரும் எத்தனையோ முறை, ஒட்டை போட்டு சுடு என்று சொல்லி சொல்லி அலுத்து போய், இவளுக்கு சுட்டாலும், வடையில் ஓட்டை போட வராது என்று மனதை மாற்றி கொண்டு விட்டார்! ஏதோ இதாவது கிடைக்குதே என்று நினைப்பார் போல!
இந்த வடையை முதன்முதலில் கண்டு பிடித்தவர், நூறு முறைகளிள் வடையின் நடுவில் ஓட்டை போடுவது எப்படி என்று ஒரு சிறு குறிப்பு புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கலாம்! என்னை மாதிரி விரல் வித்தை தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! நிஜமாகவே பெரிய சூத்திரம்தான் இந்த வடையை ஓட்டையோடு சுட்டு எடுப்பது!
ஆதி காலத்தில் இருந்தே எனக்கும் இந்த வடைக்கும், ஆகவே ஆகாது! எப்பொழுது எல்லாம் என் அம்மா இந்த வடையை சுடுவதற்க்காக தேங்காய் எண்ணையை காய வைக்கிரார்களோ, அந்த நேரம் எல்லாம், நான் தலை தெறிக்க வீட்டை விட்டு வெளியில் ஓடி விடுவேன்! அந்த வடை சுட்ட வாசனை, வீட்டை காலி செய்யும் வரை, மறந்து போய் கூட வீட்டினுள் வந்து விட மாட்டேன்! அந்த நேரங்களில் நான் என் அம்மாவிடம் சொல்வதுண்டு,’நான் வரும் காலத்தில் இந்த வடைகளை சுடவே மட்டேன்’என்று! அம்மா சொல்லுவாங்க, ‘பார்க்கலாம் பார்க்கலாம், உனக்கு கல்யாணம் ஆகி, ஒரு பெண் குழந்தை பிறந்து, அது வளர்ந்து, உன் வீட்டுக்கு மருமகன் வரும் பொழுது, நீ இந்த வடையை சுட்டுதானே ஆக வேண்டும்’ ,என்று! நான் இந்த ஓட்டை உளுந்தவடை தேர்வில் தேறவே மாட்டேன் என்று நினைத்து தான் கடவுள் எனக்கு இரண்டு பசங்களை குடுத்து இருக்கிரார் போல!! என்னைக்காவது ஒரு நாள் ஒட்டை உளுந்த வடையை சுட்டு விட மாட்டேனா என்ன, நம்பிக்கை தான் வாழ்க்கை!