எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -41

13 பின்னூட்டங்கள்

ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்
பீஎம் பதவிக்கு பேர் இச்சை பலம்!

படம்

எனக்கு பிடிக்காதவற்றை யாரேனும்
என்னை வாங்க வற்புறுத்தும் போது
அவர்கள் மனது நோகாமல் நானும்
சாமர்த்தியமாக அந்த இக்கட்டில்
இருந்து தப்பித்து கொள்ள சொல்லும்
பொறுத்தமான பொய்களில் ஒன்று..
‘என் கணவரிடம் கேட்காமல் நான்
எந்த ஒரு முடிவும் எடுப்பதே இல்லை..’

படம்

இப்பவே மனதில் உள்ளதை
சொல்ல நினைத்து முதலில்
ஒரு ஆச்சரிய குறியோடு
ஆரம்பித்து பின் இமைகள்
படபடக்க மூச்சுவிட கூட
மறந்து அருவியாய் வார்த்தைகளை
கொட்டி இடை இடையே காற்புள்ளி
அரைபுள்ளி சேர்த்து ஆங்காங்கே
பொறுத்தமான முகபாவங்கள்
காட்டி கடைசியில் ஒரு கேள்வி
குறியோடு   முடித்து விட்டு
ஆர்வத்தோடு எதிரில் இருப்பவர்
சொல்ல போகும் பதிலுக்காக
அவர் முகத்தை ஏறிட்டு பார்க்க
அவரோ.. என்னது திருப்பி சொல்லு..
என்று சொல்லுவார் பாருங்க அது
தாங்க தாங்கவே முடியாத லொள்ளு!!

படம்

எதிரே இருந்த வீட்டுக்கு
புதிதாய் குடி வந்த பெண்
தன்னை சுய அறிமுகம்
செய்து கொள்ள வந்தார்..
அவருக்கு 5 குழந்தைகள்
என்று சொல்லி கொண்டு
இருக்கும் போதே மம்மி
என்று அவரது 2 வயது
குழந்தை துள்ளி குதித்து
ஓடி வந்தது..
மம்மியா… நான் டீவீயில் Santoor
சோப் Ad பார்த்த பொழுது
கூட இவ்வளவு அதிர்ச்சி
அடைந்ததில்லை ஏனெனில் என்
எதிரே நின்று பேசியது மம்மி
அல்லவே 55 வயது மாமி!!

படம்

பழைய பேப்பரை அடுக்கி
கட்டி வெளியேற்ற எத்தனிக்கும்
நேரம் தான் அதில் வந்த
பல சுவாரசியமான விஷயங்கள்
கண்ணுக்கு புலப்படும்!!

படம்

ஏதேனும் விபரீதம் நம்
வாழ்வில் நடைபெறும் வரை
அவை உலகத்தில் உள்ள யாருக்கோ
எவருக்கோ மூன்றாமவருக்கே
நடைபெறுபவை என்று நம்
மனது முழுமையாய் நம்புகிறது!!

படம்

அதிர்ச்சியான விஷயங்களை
யாருக்கேனும் சொல்ல முற்படும்
போதும் யாரேனும் நம்மிடம் சொல்லி
விட்ட போதும் ஏதோ உயரமான
மலை உச்சியில் பிராணவாயு
குறைவால் மூச்சடைத்து நிற்பது
போன்றதொரு பிரம்மையை
தவிர்க்க இயலாது!!

படம்

என்னதான் நமதே நமதாக
இருந்தும் உள்ளிருக்கும்
சந்து பொந்து மேடு பள்ளம்
லொட்டு லொசுக்கு என்று
அத்தனை அந்தரங்களை
அறிந்திருந்தும் வெளியில்
சென்று விட்டு வீட்டு வாசலை
அடைந்தவுடன் பொறுமையாக
சிறிது நேரம் மீன் பிடித்த
பிறகே அகப்படுகிறது
சாவி என் கைபையினுள்ளே!!

படம்

‘ஆ….’ எவ்வளவு பெரிய மாத்திரை
என்று வாயை பிளக்காதீர்கள்
ஜஸ்ட் இரண்டு மாத்திரைகள் தான்..
தமிழ் இலக்கணம் அறிந்தவர்களுக்கு
மட்டும்!!

படம்

13 thoughts on “சில எண்ணங்கள் -41

  1. லொள்ளு, கண்ணுக்கு புலப்படுவது – உண்மைகள்… மற்றவை கலகல…

    தொடர வாழ்த்துக்கள்…

  2. லொள்ளு, மீன் பிடிப்பது இது நானும் அவ்வபோது அனுபவித்திருக்கிறேன். பழைய பேப்பர் நேற்று தான் போட்டேன், போட்டு விட்ட பேப்பரில் இருந்த ஆர்டிகளை நெட்டில் தேடுதேடு என்று தேடி , ஒருவழியாய் கண்டுபிடித்தது ( கணவரிடம் திட்டு வாங்கியது ) நினைவில் வந்ததோடு இல்லாமல், நம்மைப் போன்று நிறைய பேர் உண்டு என்கிற நிம்மதி உங்கள் பழைய பேப்பர் தந்தது.

    இரண்டு மாத்திரை ம்ஹஊம்…. புரியவில்லையே!

    • “கண்ணிமைக்கும் நேரம் அல்லது கைநொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை எனப்படும்” _________ என்னன்னு இப்போ ஞாபகம் வந்துடுச்சா பாருங்க.

    • எல்லோரும் நம்மை போல் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணமே நம் மனதுக்கு அலாதி இன்பம் தான்! அதனால் தான் என்னமோ உங்களை நானும் என்னை நீங்களும் கண்டு கொண்டோம் 🙂 உங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்! சித்ரா அக்கா சூப்பர் க்ளூ குடுத்திருக்காங்க கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்ய தவறினால் உங்கள் அடுத்த கனவில் உங்க தமிழ் மிஸ் குச்சியை எடுத்து கொண்டு வருவார் உங்களை நாலு சாத்து சாத்த 🙂 🙂 🙂

  3. ‘என் கணவரிடம் கேட்காமல் நான் எந்த ஒரு முடிவும் எடுப்பதே இல்லை’ ___ சொன்னா நம்ப மாட்டீங்களாங்களே !

    திட்டி, தலையில் கொஞ்சம் தட்டி, பிறகுதான் ‘அந்த பேப்பரையும் கொடு’ என்று அம்மா சொல்வது காதில் ஏறும்.

    இங்கு மீன் பிடிப்பது மட்டுமில்லாமல் பிடித்த மீன்களில் எந்த மீன் சரியான மீன் எனவும் பார்க்க வேண்டியுள்ளது.

    பிஎம் பதவி, லொள்ளு என எல்லாமும் சூப்பர் மஹா !

    • வாங்க வாங்க சித்ரா அக்கா..
      ஒரே மாதிரி எண்ணம் உடையவர்களை சந்திப்பது அபூர்வம்! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான் உங்களை போன்றோரை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது!! நான் எதையோ கிறுக்கி கொண்டிருக்கிறேன், அதையும் ரசித்து விமர்சனம் செய்ய உங்களை போன்ற நண்பர்களால் மட்டுமே முடியும். வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂

  4. வணக்கம்,

    அருமையான பதிவு 🙂
    ரசித்தேன்..

    நன்றி,
    தோழி

    • வணக்கம் தோழி,
      உங்களை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி! உங்கள் பக்கத்தில் அருமையான கவிதைகளை கண்டேன்! அவ்வப்பொழுது இனி படிக்க வருகிறேன்! என் பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂

  5. தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்.

  6. சாவியை தேடுவது எல்லா பெண்களும் செய்யும் வேலை என்பதை அறிந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு! ‘கைப்பையில் இருக்கும் அத்தனை ஜிப்களையும் திறந்து மூடி ஒருவழியாக சாவி எடுப்பது உண்மையில் மீன் பிடிப்பது போலத்தான்!
    பழைய பேப்பர் விஷயத்தில் நானும் உங்கள் தோழி தான்!

    நான் கூட அவ்வப்போது ‘கணவரிடம் கேட்டுத்தான் வாங்குவேன்!’

    இனிய எண்ணங்கள்!

பின்னூட்டமொன்றை இடுக