எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


21 பின்னூட்டங்கள்

கட்டிய சீலை போதும் போகலாம் வா..

கட்டிய சீலை போதும் போகலாம் வா

இப்படியெல்லாம் யாராவது கூப்பிட்டால் நான் கண்டிப்பா கிளம்புற ஆள் இல்ல.. கொஞ்சமாவது யோசிப்பேன். ஆனால் என்ன செய்வது அழைத்தவர் என் மரியாதைக்கு உரியவர், மனதிற்கு இனியவர், ஆம் என் கணவர் தான் இப்படி அழைத்தார். அது ஒரு சனிக்கிழமை மாலை நேரம். தப்பு தப்பு இரவு நேரம். எப்பவும் சனிக்கிழமை சொல்லுவார் நான் சீக்கிரம் மாலை வந்து விடுகிறேன் தயாராக இருங்கள் என்று.. ஆனால் ஒரு நாளும் வர மாட்டார்! நாங்களும் காத்து காத்து கண்கள் பூத்து போவது தான் மிச்சம். இப்பொழுது எல்லாம் சரியாக சொன்னால் கிளம்புவதே இல்லை. விஜய் டீவியில் அது இது எது முடிந்த மறு நிமிடம் தரிசனம் குடுத்தார் என் கணவர்.

வந்ததும் வராததுமாய் கிளம்பு கிளம்பு வாஷிங் மிஷின் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்றார். சிறிது டச் அப் செய்ய கூட விட வில்லை.. அப்படியே கட்டிய சீலையோடு அழைத்து சென்றார். கிளம்புவதற்கு முன் சிறிது தயக்கம் எனக்கு, இன்று நாள், நியூமராலஜி படி தேதியின் நம்பரும் சரி இல்லை, போய் தான் ஆகனுமா?? அப்படியே ஆனது ஆகட்டும் என்று கிளம்பினால் வீண் விவாதம் மட்டுமே வந்து தீரும். இப்படி யோசித்து கொண்டே அவர் பின்னே சென்று விட்டேன் கடை வரை..

அங்கே போனதும் எதை தேர்ந்தெடுக்க என்பதில் ஆரம்பித்தது குழப்பம். ஏற்கனவே எங்கள் நண்பர் ஒருவர் பத்து நாள் முன்பு தான் எல்ஜீ வாஷிங்மிஷின் வாங்கி இருந்தார். அவர் டாப் லோடிங் வாங்குங்கள், சிரமம் இருக்காது என்று சொல்லி இருந்தார். நானும் நேரே போய் எல்ஜீ முன்பு சென்று நின்றேன். என் கணவர் ஆரம்பித்தார், ஹ்ம்ம் சொல்லு என்ன மாடல் நம்பர்.. இது என்ன, அது என்ன என்று கேள்வி கணைகள் தொடுக்க ஆரம்பித்தார்.. அவர் ஏற்கனவே என்னை கூகிளில் மாடல்கள் பார்த்து வைக்க சொன்னது நியாபகம் வந்தது. நானும் தேடி பார்த்தேன், ஒன்னு ரெண்டு மாடல் காட்டி இருந்தால் நானும் பொறுமையா எல்லா விவரத்தையும் சேகரித்து இருப்பேன்.. அது 100 200 மாடல் இல்ல காண்பித்தது. மாயி படத்துல பொண்ணு பார்க்க வந்த இடத்தில் அந்த மின்னல் பொண்ணு மாப்பிள்ளை வடிவேலுவை விட்டு விட்டு கூட வந்த சரத்குமாரை பார்த்து ‘இம்புட்டு நேரம் நான் மச்சானை தான பார்த்தேன்’ என்று சொன்ன மாதிரி நானும் தேடி தேடி வெறும் வாஷிங்க் மிஷின் படத்தை தானே பார்த்தேன்னு சொல்ல வந்து நாவை அடக்கி கொண்டேன்!!

கணவருக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. போன் போடு நம் நண்பர் என்ன மாடல் வாங்கி இருக்கார் என்று கேட்போம் என்று கூறினார். நானும் எங்கள் சென்னை நண்பரின் மனைவியின் நம்பருக்கு கால் செய்தேன். அநியாயத்துக்கு பேலன்ஸ் மிக குறைவாக இருந்தது.. ரெண்டு ரூபாய்க்கு பரவாயில்லை ரெகார்டட் வாய்ஸ் திட்டி கொண்டே கால் கனெக்ட் செய்தது. அவர் எடுத்தவுடன் அவசர அவசரமாய் மாடல் நம்பர், விலை விவரம் எல்லாம் கேட்டு முடித்தேன் பேலன்ஸ் தீர்ந்து விட்டிருந்தது. நல்ல வேளை தப்பிச்சேன்! பிறகு என் கணவரை அழைத்து விட்டு அதே மாடலை காட்டி இதன் விலை 15000 என்று சொன்னார்கள் என்று சொன்னது தான் தாமதம்.. கணவர் கத்தினார் ஹ்ம்ம் இன்னும் நல்லா கத்தி சொல்லு கடைகாரன் காதில் விழுற மாதிரி! தமிழில் விலை சொல்ல வேண்டிய தான.. நல்ல மாட்டிண்டோம் இன்னிக்கு வந்திருக்கவே கூடாது மனம் உள்ளுக்குள் அழுதது. நண்பரின் மனைவி போன் கால் கட் ஆவதற்கு முன்னால் வேறு கம்பெனி மிஷினுக்கு எல்லாம் 10 வருட மோட்டார் வாரண்டி இருக்கிறது அதையும் விசாரித்து கொள்ளுங்கள் என்று சொன்னது நியாபகத்துக்கு வந்தது. அதை கணவரிடம் சொன்னவுடன் அவர் படாரென்று எல்ஜீயிலிருந்து சாம்சங்குக்கு தாவி விட்டார்!

சாம்சங்கில் ஏதோ வாபில் டெக்னாலஜி என்று போட்டிருந்தது.. அதை என்ன என்று விசாரித்து வை என்று கடை பையனை விவரம் சொல்ல அழைத்து விட்டு கணவர் அவருக்கு வந்த போனை எடுத்து பேச சென்று விட்டார். வந்த கடை பையன் என்னமோ கடகடவென்று தெலுங்கிலே கேட்டு தொலைத்தான். நான் இருந்த எரிச்சலில் What come again? என்று அலறி விட்டேன்! இந்த ரோஜா படத்தில் அரவிந்தசாமி வைஷ்ணவியை பொண்ணு பாக்க வந்த இடத்தில் அவரிடம் தனியே பேசும் போது வைஷ்ணவி என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள் என்று சொன்னவுடன் அரவிந்தசாமி அலறுவாரே அது மாதிரி! பிறகு அந்த கடை பையன் சுதாரித்து விட்டு ஹிந்தி தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன்.. ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டான்.. தெரியும் என்றேன்.. உடனே அவன் சொன்னான் ஹே ஹே.. எனக்கு ரெண்டுமே தெரியாது என்றான் அந்த பையன். நான் உடனே ஜெயம் படத்தின் கதாநாயகி சதா போல் கையை என் கணவர் இருந்த திசை நோக்கி நீட்டி அவரிடமே பேசிக்கோ என்று சொல்லி விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டேன். எரிச்சல் மண்டி கொண்டு வந்தது.

அந்த கடை பையனும் வாபில் டெக்னாலஜி பத்தி வாய் வோயாமல் எதேதோ கதறி கொண்டிருந்தான் தெலுங்கில். எனக்கு மண்டையே சுற்றி கொண்டு வந்தது போல் இருந்தது.. அதற்குள் ஏதோ ஐ சென்சார் என்று ஏதோ ஒரு மிஷினில் எழுதி இருக்க அதற்கு தாவலாமா என்று கணவர் யோசித்து கொண்டிருப்பதற்குள் நல்ல வேளை நேரமாயிற்று. எங்களை வெளியே தள்ளி கடையை மூடுவதற்குள் நாங்களே வெளியில் வந்து விட்டோம். வெளியில் வந்தவுடன் என் கணவர் யாருக்கோ போன் செய்தார். செய்து சாம்சங் வாஷிங்மிஷின் மாடல் நம்பரை கொடுத்து விலை விசாரித்தார். அவர் சொன்ன விலை கடையில் சொன்ன விலையை விட 1500 ரூபாய் கம்மியாக இருந்தது. பார்த்தியா என் சாமர்த்தியத்தை என்று சுய தம்பட்டம் அடித்து கொண்டார். இப்போ எனக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது. ஏற்கனவே ஒரு ஹோல் சேல் டீலரிடம் பேசி விட்டு இங்கு வந்து விட்டு என்னை வேறு போட்டு பார்த்திருக்கிரார்.. இருக்கட்டும் இருக்கட்டும் வீட்டுக்கு தான வருவாரு வெச்சுக்கிறேன் என்று மனதில் கறுவி கொண்டேன்.

வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் மனது பொறுமுவது தாங்க முடியாமல் கேட்டேன் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள் என்று.. அவர் சொன்னார் நீ எல்ஜீ எல்ஜீ என்று அதை பிடித்து தொங்கி கொண்டிருந்தாய் அல்லவா அதை விட சாம்சங்க் தான் பெஸ்ட் என்று உனக்கு புரிய வைக்க தான் என்று கடுப்படித்தார்.. அந்த ஹோல் சேல் டீலரை கூப்பிட்டு அவர் ஏற்கனவே ப்ளான் செய்தது போல் அவருக்கு பிடித்த மாடலுக்கு ஆர்டர் குடுத்து விட்டு என்னை ஏதோ சாதித்து விட்டது போல் பெருமையாக பார்த்தார்.. நான் முகத்தை கோபமாக வைத்து கொண்டு சொன்னேன் என்னை வீட்டுல கொண்டு போய் விடுங்கோ எனக்கு பசிக்குது என்று!!

 


12 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -40

என் ஒருத்திக்கு மட்டும்
தனியே தேனிர் தயாரித்து
அருந்த நான் விருப்பம்
கொள்ளுவதே இல்லை
ஏனெனில் எனக்கு
கறுத்து அடி பிடித்த
பாத்திரங்களை காணவோ
அதனை தேய்த்து தேய்த்து
கைகளை புண்ணாக்கவோ
நெடி தாங்க முடியாமல்
மயங்கி விழவோ
அட கடவுளே.. என்று
மனது தாங்காமல்
அலறவோ நான் ஒரு
போதும் விரும்பியதே இல்லை..
நியாபகமறதி!!

படம்

சிங்கம் போல் கர்ஜிக்கும்
எங்க ப்ரெஸ்டீஜ் குக்கர்
நேற்று பூனை போல்
கொஞ்சியது சகிக்காமல்
என்ன ஏது என்று பதறி
அருகில் சென்று கவனித்த
போது உண்மை விளங்கிற்று..p
பின்னே ப்ரீமியர் வெயிட் இல்ல
தவறுதலாய் போட பட்டிருந்தது!

images (6)

பரத் என்று நான்
என் குட்டி பையனை
விளிக்க அவன் எனக்கு
பதில் அளித்த விதம்
அவன் என்னை முதன்
முதல் அம்மா என்று
அழைத்த தருணத்தை
விட ரொம்பவே இனித்தது..
அவன் சொன்னான்..
‘என்ன செல்லம்..’

mother-kissing-son-clipart

பொய் என்று இருவருக்குமே தெரிந்தும்
மெய்யாய் ஒருவருக்கொருவர் கொஞ்சி
உருகி கொள்ளும் தருணம்..
எப்போதோ அடி பட்டு காயமடைந்து
பின்னர் நன்கு ஆறி தழும்பு கூட
ஏதும் இன்றி இருந்த சுண்டு விரலை
என் முன்னே நீட்டி அம்மா.. வலிக்குது..
என்று ஒவ்வொரு தடவையும்
சிணுங்கி கொஞ்சும் என் குட்டி பையன்!!

mom

ரொம்பவே திரில்லான திகில் படம்
தனியே அமர்ந்து பார்ப்பதும்
பாழுங்கல்லை தனியே நின்று
அகற்றி அதன் அடியில் நோட்டமிடுவது
எல்லாம் ஒன்று தான்..
துணிந்து செயலை ஆரம்பித்து விட்ட
பின்னர் அய்யயோ… இங்கே நெளியுது

அங்கே வளையுது என்று அலறுவது

சுத்த அபத்தம்!

stock-vector-cartoon-animal-eyes-under-big-stone-illustration-of-funny-cartoon-creature-or-animal-character-s-131268710


7 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -39

காத்திருப்பதும் சுகம் தான்
காதலில் மட்டும் அல்ல 
கதை படிக்கும் போதும் தான்..
ஆர்வக்கோளாறில் பாதி படிக்கும்
போதே அவசரப்பட்டு 
கடைசி அத்தியாயத்தை படித்து
விடும் போது என்னதான் நீங்கள் 
ஆர்வமுடன் எதிர்பார்த்த முடிவு
தெரிந்து போனாலும் அதன் பின்னே
த்ரில் இல்லாமல் போய் விடும்!!

படம்

அம்மா மதியம் சாதத்தோடு
தொட்டு சாப்பிட ஒரு நாள்
காளிப்ளவர் ப்ரை ஒரு நாள்
உருளை ஒரு நாள் வெண்டக்காய்
செய்து குடுக்கரீங்களா..
என்ன ஆச்சு என் பையனுக்கு
திடீர் ஞானோதயம்…
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா
கார்த்திகை மைந்தா இப்படி பல
பெயர் சொல்லி ஒரே கடவுளை
அழைத்து நன்றி சொல்லுவதற்கு
முன் தோண்டி துறுவி விசாரித்ததில்
உண்மை வெளியே வந்தது…
அவன் மிஸ்ஸு வெறும் தயிர் சாதம்
மட்டும் எப்பவும் கொண்டு வராங்களாம்!!

படம்

 

வீட்டுக்குள் ஒன்றை அனுமதித்ததே பெரிய
விஷயம் இதிலே இப்போ ஜோடி வேறு..
ஒரு இங்கிதம் வேண்டாம்
பட்ட பகல் என்றும் பாராமல்
இவுக ஓடறதும் அவுக துரத்துறதும்
இவுக குதிக்கறதும் என் குட்டி பையன்
பாடம் படிக்காம அவுகளையே எட்டி எட்டி
பாக்குறதும் சீ சீ.. இதென்ன வீடா 
அமியூஸ்மன்ட் பார்க்கா..
டியூப்லைட் பின்னே குடித்தனம் செய்யும்
ஒரு ஜோடி புதுமண மரபல்லிகள்!!

படம்

 

இதற்கு சிரிக்கவா அழுது விடவா தருணம்..
ஆர்தோ டாக்டரிடம் கையில் அடிபட்ட என் முதல்
பையனை காண்பித்து வர எண்ணி அவர் முன்
உட்கார்ந்திருந்த பொழுது அவர் என் முதல் 
பையனையும் இரண்டாவது துறு துறு பையனையும்
மாறி மாறி பார்த்து விட்டு… ‘நியாயமா பார்த்தா 
இந்த பையனுக்கு தான் கையில் அடி பட்டிருக்க
வேண்டும்..’ என்று இங்கேயும் அங்கேயும் குதித்து
கொண்டிருந்த எங்கள் குட்டி பையனை பார்த்து
கையை நீட்டி சுட்டி காட்டிய போது!!

படம்

 

சொன்னா புரியாது
சொல்லாவிட்டால் தெரியாது
கன்னா பின்னாவென வளர்ந்தும்
ஒரு போதும் மரியாது ஏனெனில்
இது ஒரு தலை காதல்!!

படம்