எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


2 பின்னூட்டங்கள்

நினைவுகள்-1

படம்

எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை, நினைவு தெரிஞ்ச நாள், அது எந்த நாள், சரியாக நியாபகம் இல்லை! அப்பா அம்மா உறவினர்கள் சொல்ல கேட்டதுண்டு, நீ இது செய்வாய் , அது செய்வாய் என்று, என் நியாபகத்தில் அழியாமல் இருப்பது மட்டும் இங்கே காலத்தால் அழியாத சுவடாய் பதித்து விடுகிரேன். மழலை பேசும் வயதில் சொட்ட சொட்ட நான் நனைந்த மழை தான் முட்டி மோதி கொண்டு முதல் நியாபகமாய் கண் முன் வருகிறது. ஸ்கூலில் முதல் தடவையாய் தண்டனை வாங்கியதும் அதற்காகதான்! எல்.கே.ஜி படித்து கொண்டிருந்த நேரம். மழையில் நனைந்ததை கூட அவர்கள் குற்றமாக சொல்லவில்லை, தூரத்தில் ஆசிரியை வருவதை கண்டவுடன், கமுக்கமாக உள்ளே ஓடி சென்று சமர்த்து பிள்ளையாய், ஈரமாய் உட்கார்ந்து இருந்ததை தான் அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை!

 
வாழ்க்கையில் அந்த குட்டி வயதில் என் லட்சியம் என்ன தெரியுமா, எங்கள் வகுப்பின் முன் அமைந்த சிறு விளையாட்டு திடலில் இருந்த ஊஞ்சலில் வேகமாய் ஆடி, அதன் பக்கத்தில் இருந்த வேப்ப மர உச்சியில் உள்ள பேய் இல்லை, இலையை காலால் தொட்டு விட வேண்டும் என்பது தான் அந்த தணியாத ஆசை! அந்த ஆசையும் ஒரு நாள் நிறைவேறியது. நான் பிற்காலத்தில் பற்பல சுவர்களையும் அசால்டாக ஏறி இறங்க இந்த சிறு விளையாட்டு திடலே எனக்கு பாலமாக இருந்தது. அந்தவயதில் பிடிக்காத ஒரே ஒரு விளையாட்டு குடைராட்டினம், பூமி என்னை சுற்றுவதை நான் ஒரு போதும் விரும்பியதே இல்லை.
எல்.கே.ஜி முடித்து, லீவு விட்டு ஸ்கூல் ஆரம்பித்தவுடன், யு.கே.ஜி செல்ல மனமின்றி திரும்பவும் எல்.கே.ஜி யிலேயே சென்று அமர்ந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. பிறகு வலுக்கட்டாயமாக யு.கே.ஜி அனுப்பியது வேறு கதை. அந்த வயதில் எனக்கு ஸ்கூல் ரசித்ததே இல்லை. ஏதோ கடனுக்கு போய் விட்டு வருவேன். அடிக்கடி நோய்வாய்ப்படுவதுண்டு. என்னதான் மருந்து, டாக்டர் ஊசி என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்கூல் போக வேண்டாம் என்ற நினைவு சந்தோஷத்தையே தரும். நான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் முதல் செல்ல மகள் என்பதால் சிறிது செல்லம் உண்டு. இந்த மாதிரி உடம்பு சரி இல்லாமல் போகும் சமயங்களில் எல்லாம், என் வீட்டு பாடத்தை அம்மாவே எழுதி குடுத்து விடுவார். ருசி கண்ட பூனை சும்மாவா இருக்கும், வீட்டு பாடங்களை எல்லாம், எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது என்று அம்மாவையே செய்ய வைத்து விடுவதுண்டு. ஒரு நாள் அம்மா என் வீட்டு பாடத்தை செய்ய மறந்து போனார். காலையில் தான் அம்மாவுக்கு நியாபகம் வர, அன்று வீட்டு பாடத்தை அப்பாவை எழுதி வைக்க சொல்லி விட்டார்.
அன்று பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாய்,மாறி இருந்த கையெழுத்தால் அன்று நான் பிடிபட்டேன். இத்தனை நாள் ஏமாற்றிய கை வலி கால் வலிகள் அன்று நிஜமாகின. முதன் முறையாய் வகுப்புக்கு வெளியே முட்டி போட வைத்தனர். அதுக்கப்புறம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நானே என் வேலைகளை செய்து கொள்ள ஆரம்பித்தேன். அன்று நான் கூடுதலாக கற்று கொண்ட இன்னொரு பாடம், வலிக்காமல் முட்டி போடுவது எப்படி என்பதை! பின்னாளில் அவசிய படும் இல்லையா!
என் முதலாம் வகுப்பு ஆசிரியை மிகவும் கண்டிப்பானவர். எப்பவும் உம் என்று முகத்தை தூக்கி வைத்திருப்பார். அவரை பார்த்தாலே எனக்கே குலை நடுங்கும். எப்பொழுதும் அவருடைய கோபத்துக்கு இரையாவது என் காது மடலின் நுனிகள். அவருடைய கூர்மையான நகங்களை வைத்து நன்கு கிள்ளி வைத்து விடுவார். ஒரு நாள், என் பெயரை சொல்லி அழைத்தார், ரொம்பவே பயந்து போனேன், அய்யையோ போச்சுடா என்று காதை கைகளால் மறைத்து கொண்டே அருகில் சென்றேன், ரிபோர்ட் கார்டை கையில் குடுத்து, நீ முதல் ரேங்க், வாழ்த்துக்கள் என்று முறைத்து கொண்டே சொன்னார். இது கனவா, நிஜமா என்று அவர் கிள்ளாத குறைக்கு, நானே என்னை கிள்ளி பார்த்து கொண்டேன். நான் வாழ்க்கையில் வாங்கிய முதல் ரேங்க், அதுவே முதலும் கடைசியும்!
இன்னும் நியபகத்தில் இருக்கும் ஒரு விஷயம், எனக்கு அடிக்கடி ஆகஸ்ட் 15 1947(சுதந்திர தினமும்), ஜனவரி 26 குடியரசு தினமும் குழப்போ, குழப்பென்று குழப்பி தள்ளி விடும். அதனால் ஈசியாக படிக்க நான் செய்தது, விடைகளை எல்லாம், கட்டிலுக்கு அடியில், அம்மாவுக்கு தெரியாமல் எழுதி வைத்து விட்டு, அம்மா கேள்வி கேட்க கேட்க டான் டான் என்று, பார்த்து பார்த்து சொல்லி விடுவேன். பரிட்சைக்கு முந்தய தினம் ஒருவாறு சமாளித்தாலும், எவ்ளோ நாள் சோற்றுக்குள் முழு பூசணியை மறைத்து வைக்க முடியும்! பரிட்சை தாள் திருத்தி வந்தவுடன், அம்மா ஸ்கூலுக்கு வந்து மிஸ்ஸோடு சண்டையிட்டு கொண்டிருப்பார். வீட்டில் நன்கு படிக்கும் பிள்ளைக்கு ஏன் பரிட்சையில் சோபிக்க முடியவில்லை, அம்மா ஆராய்ந்து பார்த்து என்னை கையும் களவுமாய் பிடித்து விட்டார் ஒரு நாள்.அப்புறம் என்ன அடி, படி படி என்று உயிரை வாங்கி என்னை படிக்க வைத்த பெருமை என் அம்மாவையே சாரும்!

 

—-நினைவுகள் தொடரும்