எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சமையலில் சொதப்புவது எப்படி

12 பின்னூட்டங்கள்

விருந்து என்றாலே அமர்களம் பண்ணி விட வேண்டாமா, ஆனால் நான் என் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு கொடுத்ததோ சொதப்பலோ சொதப்பல் விருந்து!

அன்று வினாயகர் சதுர்த்தி தினம், என்னை தவிர, என் வீட்டில் யாருக்கும் விடியவே இல்லை! நான் ரொம்ப உற்சாகமாக, கொலுக்கட்டை தயாரிப்பில் மூழ்கி இருந்தேன்! பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் கொலுக்கட்டையும், என் கணவருக்கு பிடித்த கோதுமை கொலுக்கட்டையும் ரெடியாகி கொண்டிருந்தது!

அந்தா, இந்தா என்று இழுத்தடித்து , என் வீட்டில் அனைவரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாமி கும்பிட்டு, கொலுக்கட்டை சாப்பிட்டு முடித்த போது பத்தரை மணி ஆகி இருந்தது!
திடிரென்று ஒரு போன் கால், என் கணவருடைய மேல் அதிகாரியும், அவரது துணைவியாரும், இங்கே ஒரு வேலையாக வருகிரார்கள் என்று! மதியம் ஒரு மணிக்குள் வந்து விடுவார்கள், அதற்குள் மதிய சாப்பாடு ரெடி செய்து விடு என்று ஆர்டர் போட்டு விட்டு, என் கணவர் சிட்டாக பறந்து விட்டார்!

ஒரே டென்ஷன், விடுமுறை தினமாக இருந்ததால் , வீடு சிறிது பப்பரப என்று இருந்தது! எல்லவற்றையும் சரி செய்து, வீட்டை சுத்தம் செய்து, ஒரு பக்கம் சமையலையும் ஆரம்பித்து வைத்தேன்! ஒரு மணிக்குள் சமையலை முடித்து ஆக வேண்டிய கட்டாயம்! நான் இருந்த பரபரப்பில், அன்றைக்கு எனக்கு சமையலே மறந்து போயிற்று!

சாம்பாரில் உப்பு குறைந்து, புளி கூடி இருந்தது! கை வலிக்க, வலிக்க சீவிய முட்டை கோஸ், சிறிது குழைந்து போய் இருந்தது! வெண்டைக்காய், ஒவராக வதங்கி இருந்தது! எப்பொழுதுமே அருமையாக வரும் காளிப்ளவர் பக்கோடா, அன்று சவுக், சவுக் என்று பஜ்ஜி போல், அய்யோ பாவமே என்று காட்சி அளித்தது! என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, கடலை மாவுடன், பச்சரிசி மாவை கலப்பதற்கு பதிலாக, மைதா மாவை கலந்து இருந்தது தெரிய வந்தது! விக்கி விக்கி அழ வேண்டும் போல் இருந்தது!

எப்படி கணக்கு தேர்வில், ஒரு வினாவில் ஸ்டக் ஆகி , விடை வராமல் நின்று விட்டால், அன்னைக்கு அந்த தேர்வே, ஒய்ந்து போவது போல, எனக்கும் அன்று சமையலறை தேர்வில் ஊத்திகிச்சு! ஒன்று மாத்தி ஒன்று ஒரே சொதப்பல்!

ஒரு வழியாக , ஒரு மணிக்குள் மதிய சாப்பாடு ரெடி ஆகி விட்டது! விருந்தினர்களும் வந்து விட்டனர்! அவர்களை சாப்பிட அழைத்த போது, எங்களுக்கு இப்போதைக்கு பசி இல்லை என்று சொல்லி, என் கணவருடய மேலதிகாரி தன் துணைவியாரை எங்கள் வீட்டில் விட்டு விட்டு, என் கணவருடன், வேலையாக வெளியே கிளம்பினர்! வர மூன்று மணி ஆகும் என்று கூறினர்!
இப்படி தெரிந்திருந்தால் நான் மெதுவாகவே சமையல் செய்திருப்பேனே என்று உள் மனம் புலம்பியது! மேலதிகாரியின் துணைவியார் நன்றாக பழகுவார்கள், அவருடன் பேசி கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது, அவரை ஒரு வழியாக சாப்பிட வைத்து விட்டு, ஒரு 2:30 மணிக்கு, திரும்பவும், சூடாக, என் சிறிய குக்கரில் சாதம் ஆக்கினேன்!
3:00 மணி அளவில், என் கணவரும், அவருடைய மேலதிகாரியும் சாப்பிட அமர்ந்தனர்! சொதப்பல் பொறியல், வதக்கல் அனைத்தையும் பரிமாறி விட்டு, சூடாக சாதம் பரிமாற , என் சிறிய குக்கரை, அப்படியே தூக்கி சென்றேன்! ஒரு ஹாட் பாஃஸ் இல், சாதம் எடுத்து வைத்து பரிமாறி இருந்திருக்கலாம்! ஒரே அவசரம், கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை!
சாதம் பரிமாறி முடிக்கவில்லை, அதற்குள், மேலதிகாரி ஒரு குண்டை தூக்கி போட்டார்! அவர் சொன்னார்,’எங்க வீட்டில் எல்லாம்,சாதம் நேரடியாக வைக்க மாட்டார்கள்’ , என்று சொல்லி, சிறிது மௌனம் காத்தார்!

ஏற்கனவே நான் ஒரு நிலையில் இல்லை, இதில் அவர் பேசியது, எனக்கு சத்தியமாக புரியவே இல்லை! என் கணவரை, ‘என்னைய்யா சொல்லுகிரார் உங்க ஆளு’, என்பது போல் ஒரு பரிதாப பார்வை பார்த்தேன்! அவர் எனக்கு மேல் பரிதவித்து, திரு திருவென விழித்தார்!

இதுவா இருக்குமோ, அதுவா இருக்குமோ என்று அந்த சில நிமிடங்களில் புயல் மனதினுள் அடித்து ஓய்ந்தது! மேலதிகாரி, அவர் போட்ட புதிருக்கு, அவரே விடையும் அளித்தார்! அவர் சொன்னார்,’ எங்க வீட்டில் எல்லாம், சாதம் நேரடியாக குக்கரில் வைக்க மாட்டார்கள், ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு, குக்கரில் வைத்து சமைப்பார்கள்’ என்று எனக்கு பொல பொலவென சாதம் ஆக்குவதற்க்கு டிப்ஸ் கொடுத்தார்!

‘பூ’ இவ்வளவு தானா, நான் என்னமோ, ஏதோ என்று பயந்தே போய் விட்டேன்! இன்னும் நீங்கள் என் சொதப்பல் சமையலையே சாப்பிட ஆரம்பிக்கவில்லையே, என்று மனதினுள் நினைத்து கொண்டேன்!

‘எப்பவும் நல்லா வரும், யாராவது விருந்தாளிகள் வந்தால் மட்டும், ஏந்தான் இந்த சமையல் இந்த சொதப்பு சொதப்புகிரதோ’ என்று நான் சிறுமியாக இருக்கும் போது என் அம்மா அடிக்கடி புலம்பியது, மனதில் வந்து ஓடியது!

12 thoughts on “சமையலில் சொதப்புவது எப்படி

  1. சூப்பர் சொதப்பல் அனுபவம் மஹா!

    அது சரி, சமைக்கும்போதும் கணக்கு பரீட்சை நினைவா?

    சொதப்பல் அனுபவத்தை சொதப்பாமல் எழுதியதற்குப் பாராட்டுக்கள்!

    கொழுக்கட்டை தான் கொலுக்கட்டை ஆகிவிட்டதோ?

    • நன்றி அம்மா! அன்று அருமையாக வந்த ஒரே விஷயம் கொழுக்கட்டை மட்டும்தான்! அதையும் வார்த்தை பிழையால் சொதப்பிட்டேன் பாருங்க 🙂 சொதப்பல் என்றாலே நினைவுக்கு முதலில் வருவது கணக்கு பரிட்சை தான் 🙂

  2. I finished reading this entirely Maha.. 🙂 So is this saying to your “guests” not to come for lunch/dinner ?? 🙂

  3. ;சொதப்பல்கூட சில ஸமயம் புதிய ருசியைக் கொடுத்து எப்படி செய்தீர்கள், என்ற கேள்வியைக் கேட்க வைக்கும். நல்ல சொதப்பல். நன்றாகவும் இருக்கு.

    • மிகவும் நன்றி காமாட்சி அம்மா! நீங்கள் சமையல் கலையில் வல்லவர் என்று உங்கள் வலை பூவை பார்த்து தெரிந்து கொண்டேன்! நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளை பார்த்து உங்கள் சமையல் கை வண்ணங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது! 78 வயதில் கணினியின் துணையோடு இவ்வளவு பதிவுகளை பதித்த நீங்கள் ,எங்களை போன்றவர்களுக்கு ஒரு முன்னோடி!

  4. உங்கள் நாய் நன்றாக இருக்கிறது மஹா! அன்றைக்கே எழுத வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன். வயசாச்சு!

    • அம்மா எல்லாம் உங்க மீன பார்த்து ஆசை பட்டு நான் நாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் 🙂 அம்மா உங்களுக்கு வயது ஆகி இருக்கலாம், ஆனால் உங்கள் எழுத்துக்கு வயதாகவில்லை!

  5. awesome maha….. nice experience…it always happens like that…sometimes the quantity confuses us i feel..specially in making rice…veetuku saadam seiya sonna, oorukke senju veppom…..

  6. Ha ha.. Rightly said Sis 🙂 Everything would be perfect if we plan & work! Otherwise it would be just Sodhappal 😀

  7. அன்று அருமையாக வந்த ஒரே விஷயம் கொழுக்கட்டை மட்டும்தான்!

    நிதானமாக செய்ததால் அருமையாக வந்திருக்கும் ..

    அவசரமாக மற்றவை சொதப்பியிருக்கும் ..அவசரத்தில் அண்டாவுக்குள்ளும் கை போகாதே ..!

    • வணக்கம்! உங்கள் வருகைக்கு நன்றி! உங்களுடைய கருத்து நூற்றுக்கு நூறு உண்மை! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

mahalakshmivijayan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி