எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


10 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -17

ஒரு நாள் தாங்கி பிடித்தேன்
மறு நாள் கை நழுவ விட்டேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா…..
என் உயிர் கை பேசியே!

படம்

 

உளுந்தை ஊற வைத்து
நன்கு அரைத்து
உப்பு, வெங்காயம், மிளகாய்,
கரிவேப்பிலையுடன் சிறிது
அன்பையும் சேர்த்து
துளி கூட எண்ணெய்
குடிக்காமல் சுட சுட மெது
வடை சுட்டு குடுத்து
விட்டு ஆசையுடன் கணவரின்
விமர்சனத்தை எதிர்பார்த்தால்
நன்கு ருசித்து புசித்து விட்டு 
சொல்வார் உளுந்து நல்ல
உயர்ந்த ரகம் போல என்று..
முடிவு செய்தாயிற்று
இனி அடுத்த வாரம் வடை 
சுடுவதற்கு பதில் ஒரு
கிண்ணத்தில் இதே உளுந்தை
கொஞ்சம் போட்டு ஸ்பூன்
போட்டு குடுத்து விட
வேண்டியது தான்!!

படம்

நான் எப்போ வருவேன்
எப்படி வருவேன்னு சொல்ல
முடியாது ஆனா மசாலா
நெடி மூக்குல ஏறுகிர ஒவ்வொரு
நொடியும் கண்டிப்பா வந்தே தீருவேன்
.
.
தும்மல்!

படம்

 

வைரசுக்கும் என் மூச்சு
குழாய்க்கும் இடையே
நடந்த ‘வைரஸ்ஸே வெளியேறு’
போராட்டத்தின்
உச்ச கட்டமாய் மூக்கடைத்து
தன் வேலை நிறுத்தத்தை
பகிரங்கமாய் உடம்புக்கு அறிவித்து
இருக்கிறது என் மூக்கு!!

படம்


4 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -5

படம்

அதிகாலையில் கரண்ட்
போய் விடுமோ என்ற பயத்தில்
முந்தய நாள் இரவிலேயே
சமையலுக்கு தேவையான
இஞ்சி,பூண்டு உரித்து
மிக்சியில் இட்டு அரைத்து
அரைத்த விழுதை ஒரு
டப்பாவில் அடைத்து 
ஃப்ரிட்ஜில் வைத்தால்
அதுவே
.
.
மிட் நைட் மசாலா!!!

படம்

கொண்டைகடலை குழம்பு வைப்பதற்கு
எண்ணையை காய விட்டு
பெருஞ்சீரகம், கிரம்பு போட்டு பொறிந்தவுடன்
வெங்காயத்தை ஒரே சீராக வதக்கி பொன்னிறமானவுடன்
தக்காளி சேர்த்து அது வதங்கியவுடன்
உப்பு, மசாலா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளறி
அந்த கலவையில் சிறிது தண்ணீர் விட்டு 
கொண்டைகடலையை அதில் கொட்டியவுடன்
கிளம்பும் நெடியில் நீங்கள் அச்சூ அச்சூ… என்று விடாமல் தும்மினால்
சூடு தாங்க முடியாமல் கொண்டைகடலை
உங்களை மனதார திட்டுகிரது என்று அர்த்தம்!!

படம்

வெள்ளரிக்கு
ஒன்னுவிட்ட 
சித்தப்பா பையனோ??
.
.
.
.
.
கோவக்காய்!!

படம்

கோவக்காய் வதக்கும் போது
அதை அருகிலேயே நின்று
கவனித்து கொள்ளுவது நலம்
இல்லையேல் கோபத்தில்
அதற்கு முகம் கறுத்து போவது
நிச்சயம்!!


15 பின்னூட்டங்கள்

சுவையான நான் ஸ்டிக் உப்புமா செய்வது எப்படி

படம்

உப்புமா என்ற பெயரை கேட்டாலே, பலருக்கு எரிச்சல் தான் வரும்! இதை எல்லாம் யாரு கண்டுபிடிச்சா என்று எரிச்சல் படாதவர்களே கிடையாது! நானும், சில வருடம் முன்பு வரை, இந்த உப்புமாவை விரும்பி உண்டதில்லை! ஆனால், இப்பொழுது, அது எனக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று!

என்னது உப்புமா உன்னோட Favourite aah nu மயங்கி விழுந்துடீங்களா, Relax, அது ஒரு பெரிய கதை இல்லை, ஒரு சின்ன Flashback கதைதான்! எனக்கு கல்யாணம் ஆன புதிதில், எனக்கும், என் கணவருக்கும், முதன்முதலில் சண்டை வர காரணமாக இருந்தது இந்த உப்புமா! எனக்கு சமையல், அந்த சமயத்தில் அவ்வளவாக தெரியாது! என் கணவருக்கு, புதிது புதிதாக சமையல் செய்து, செய்து என்னை நானே பழக்கி கொண்டிருந்தேன்! எவ்வளவு நாள்தான் என் சமையலை பிடித்த மாதிரியே நடிப்பது, என்னை பழி வாங்க அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் இந்த உப்புமா!

ஒரு நாள் என்னை அழைத்து கேட்டார், ‘ உப்புமா செய்ய தெரியுமா?’ ‘ஓ! நல்லா தெரியும்’, ‘அப்போ இன்னிக்கு அதையே செஞ்சிடு’னு சொன்னார்! ‘OK , அது என்ன பிரமாதம்’ நு, நானும் ரவையை சிறிது வறுத்து, அதை தனியாக எடுத்து வைத்தேன்! பின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நன்கு வதக்கி, ரவைக்கு இரண்டு பாகம் தண்ணீர் விட்டு, அது கொதித்த உடன், சிறிது உப்பு போட்டு,ரவையை சிறிது சிறிதாக போட்டு, மிதமான தீயில், ரவையில் கட்டி விழாமல், கிளறி முடித்தேன்! அதற்கு பொருத்தமாக சாம்பாரையும் செய்து, ஆசையோடு, என் கணவரிடம் தட்டை நீட்டினால், ‘இது என்ன உப்புமா கேட்டா களி குடுக்கர’, என்று முறைத்தார்!

‘நீயே சாப்பிடு’ நு சொல்லிட்டு அவர் வேலையில் மூழ்கினார்! என் கணவரின், முதல் கோப முகம், நான் முதன் முதலில் செஞ்ச உப்புமாவை களி என்று சொன்னது, நான் ஆசையொடு செய்த உப்புமாவை அவர் சாப்பிடாமல் தவிர்த்தது என்று எல்லாம் சேர்த்து என்னை அழ, அழ செய்தது! அழுகையோட சேர்த்து கோபமும் பொத்து கொண்டு வந்தது!

‘Afterall ஒரு உப்புமா, இதுக்காக ஒரு சண்டையா! எங்க ஊரில் எல்லாம் உப்புமா இப்படிதான் செய்வார்கள்’, என்று கூறினேன்! என் கணவரும் விட வில்லை, ‘நான் என்ன உங்க அப்பாவா, நீ என்ன சமைத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல’, என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்! ‘நல்லா உப்புமா செய்யிர பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிங்கோங்க’,னு என் பங்குக்கு நானும் வார்த்தைகளை வீசினேன்! ‘இந்த வில்லனை எங்கப்பா பிடிச்சீங்கனு’ என் அப்பாவை மனதினுள் திட்டினேன்!

என்ன இருந்தாலும், புது பெண் இல்லையா, சண்டையை பெரிது படுத்த விரும்பாமல், எள்ளும் கொள்ளும், முகத்தில் வெடிக்க, எரிச்சலோடு உப்புமாவை விழுங்கி முடித்தார்! ‘அடுத்த தடவை உப்புமாவை நான் செய்யரேன், வெங்காயம் மட்டும் வெட்டி வை ‘,நு சொன்னார்! அந்த நாளும் வந்தது, எனக்கோ, பயங்கர ஆவல், எப்படி உப்புமா செய்யரார்னு பாத்துடலாம்! யார் செஞ்சா என்ன, உப்புமா, உப்புமா மாதிரி தான வரும்! அவருக்கு மட்டும் என்ன ஸ்பெசலாவா வந்துடபோது!!

ஆரம்பித்தார், தன் நள பாகத்தை, எனக்கோ உள்ளுக்குள் ஒரு நமுட்டு சிரிப்பு! ரவையை வறுக்கவே இல்லை அவர்! ஒரு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி நெய் விட்டு, அவை காய்ந்த உடன், வெங்காயம், பச்சை மிளகாய், வெட்டி வைத்த ஒரு தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, நல்ல தீயில் மின்னல் வேகத்தில் வதக்கினார்! நொடியில் தக்காளி மறைந்து போயிற்று! பின்பு, ரவையின் பங்குக்கு, ஒரு மடங்குக்கும், சற்றே குறைவான தண்ணீரை ஊற்றி, அது கொதிக்க ஆரம்பித்தவுடன்,சிறிது உப்பு போட்டு, முழு தீயில், ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அவசர கதியில் கிளறி முடித்தார்! ஒரு கரண்டி சீனியும் கொதிக்கும் தண்ணீரில் வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம்!

ரவை உப்புமா, பார்க்கவே அழகாக இருந்தது! தக்காளி தன் நிறத்தை சற்றே உப்புமாவுக்கு கொடுத்திருந்தது! ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், மணல் போல அழகாக வெந்து இருந்தது! ஒன்றும் தொட்டு கொள்ளாமலே, சாப்பிட மிக அருமையாக இருந்தது! உப்புமா கூட இவ்வளவு சூப்பரா செய்ய முடியுமா, என்னோட வில்லன் இப்போ ஹீரோவா தெரிந்தார்!!!


12 பின்னூட்டங்கள்

சமையலில் சொதப்புவது எப்படி

விருந்து என்றாலே அமர்களம் பண்ணி விட வேண்டாமா, ஆனால் நான் என் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு கொடுத்ததோ சொதப்பலோ சொதப்பல் விருந்து!

அன்று வினாயகர் சதுர்த்தி தினம், என்னை தவிர, என் வீட்டில் யாருக்கும் விடியவே இல்லை! நான் ரொம்ப உற்சாகமாக, கொலுக்கட்டை தயாரிப்பில் மூழ்கி இருந்தேன்! பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் கொலுக்கட்டையும், என் கணவருக்கு பிடித்த கோதுமை கொலுக்கட்டையும் ரெடியாகி கொண்டிருந்தது!

அந்தா, இந்தா என்று இழுத்தடித்து , என் வீட்டில் அனைவரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாமி கும்பிட்டு, கொலுக்கட்டை சாப்பிட்டு முடித்த போது பத்தரை மணி ஆகி இருந்தது!
திடிரென்று ஒரு போன் கால், என் கணவருடைய மேல் அதிகாரியும், அவரது துணைவியாரும், இங்கே ஒரு வேலையாக வருகிரார்கள் என்று! மதியம் ஒரு மணிக்குள் வந்து விடுவார்கள், அதற்குள் மதிய சாப்பாடு ரெடி செய்து விடு என்று ஆர்டர் போட்டு விட்டு, என் கணவர் சிட்டாக பறந்து விட்டார்!

ஒரே டென்ஷன், விடுமுறை தினமாக இருந்ததால் , வீடு சிறிது பப்பரப என்று இருந்தது! எல்லவற்றையும் சரி செய்து, வீட்டை சுத்தம் செய்து, ஒரு பக்கம் சமையலையும் ஆரம்பித்து வைத்தேன்! ஒரு மணிக்குள் சமையலை முடித்து ஆக வேண்டிய கட்டாயம்! நான் இருந்த பரபரப்பில், அன்றைக்கு எனக்கு சமையலே மறந்து போயிற்று!

சாம்பாரில் உப்பு குறைந்து, புளி கூடி இருந்தது! கை வலிக்க, வலிக்க சீவிய முட்டை கோஸ், சிறிது குழைந்து போய் இருந்தது! வெண்டைக்காய், ஒவராக வதங்கி இருந்தது! எப்பொழுதுமே அருமையாக வரும் காளிப்ளவர் பக்கோடா, அன்று சவுக், சவுக் என்று பஜ்ஜி போல், அய்யோ பாவமே என்று காட்சி அளித்தது! என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, கடலை மாவுடன், பச்சரிசி மாவை கலப்பதற்கு பதிலாக, மைதா மாவை கலந்து இருந்தது தெரிய வந்தது! விக்கி விக்கி அழ வேண்டும் போல் இருந்தது!

எப்படி கணக்கு தேர்வில், ஒரு வினாவில் ஸ்டக் ஆகி , விடை வராமல் நின்று விட்டால், அன்னைக்கு அந்த தேர்வே, ஒய்ந்து போவது போல, எனக்கும் அன்று சமையலறை தேர்வில் ஊத்திகிச்சு! ஒன்று மாத்தி ஒன்று ஒரே சொதப்பல்!

ஒரு வழியாக , ஒரு மணிக்குள் மதிய சாப்பாடு ரெடி ஆகி விட்டது! விருந்தினர்களும் வந்து விட்டனர்! அவர்களை சாப்பிட அழைத்த போது, எங்களுக்கு இப்போதைக்கு பசி இல்லை என்று சொல்லி, என் கணவருடய மேலதிகாரி தன் துணைவியாரை எங்கள் வீட்டில் விட்டு விட்டு, என் கணவருடன், வேலையாக வெளியே கிளம்பினர்! வர மூன்று மணி ஆகும் என்று கூறினர்!
இப்படி தெரிந்திருந்தால் நான் மெதுவாகவே சமையல் செய்திருப்பேனே என்று உள் மனம் புலம்பியது! மேலதிகாரியின் துணைவியார் நன்றாக பழகுவார்கள், அவருடன் பேசி கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது, அவரை ஒரு வழியாக சாப்பிட வைத்து விட்டு, ஒரு 2:30 மணிக்கு, திரும்பவும், சூடாக, என் சிறிய குக்கரில் சாதம் ஆக்கினேன்!
3:00 மணி அளவில், என் கணவரும், அவருடைய மேலதிகாரியும் சாப்பிட அமர்ந்தனர்! சொதப்பல் பொறியல், வதக்கல் அனைத்தையும் பரிமாறி விட்டு, சூடாக சாதம் பரிமாற , என் சிறிய குக்கரை, அப்படியே தூக்கி சென்றேன்! ஒரு ஹாட் பாஃஸ் இல், சாதம் எடுத்து வைத்து பரிமாறி இருந்திருக்கலாம்! ஒரே அவசரம், கையும் ஓட வில்லை, காலும் ஓடவில்லை!
சாதம் பரிமாறி முடிக்கவில்லை, அதற்குள், மேலதிகாரி ஒரு குண்டை தூக்கி போட்டார்! அவர் சொன்னார்,’எங்க வீட்டில் எல்லாம்,சாதம் நேரடியாக வைக்க மாட்டார்கள்’ , என்று சொல்லி, சிறிது மௌனம் காத்தார்!

ஏற்கனவே நான் ஒரு நிலையில் இல்லை, இதில் அவர் பேசியது, எனக்கு சத்தியமாக புரியவே இல்லை! என் கணவரை, ‘என்னைய்யா சொல்லுகிரார் உங்க ஆளு’, என்பது போல் ஒரு பரிதாப பார்வை பார்த்தேன்! அவர் எனக்கு மேல் பரிதவித்து, திரு திருவென விழித்தார்!

இதுவா இருக்குமோ, அதுவா இருக்குமோ என்று அந்த சில நிமிடங்களில் புயல் மனதினுள் அடித்து ஓய்ந்தது! மேலதிகாரி, அவர் போட்ட புதிருக்கு, அவரே விடையும் அளித்தார்! அவர் சொன்னார்,’ எங்க வீட்டில் எல்லாம், சாதம் நேரடியாக குக்கரில் வைக்க மாட்டார்கள், ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு, குக்கரில் வைத்து சமைப்பார்கள்’ என்று எனக்கு பொல பொலவென சாதம் ஆக்குவதற்க்கு டிப்ஸ் கொடுத்தார்!

‘பூ’ இவ்வளவு தானா, நான் என்னமோ, ஏதோ என்று பயந்தே போய் விட்டேன்! இன்னும் நீங்கள் என் சொதப்பல் சமையலையே சாப்பிட ஆரம்பிக்கவில்லையே, என்று மனதினுள் நினைத்து கொண்டேன்!

‘எப்பவும் நல்லா வரும், யாராவது விருந்தாளிகள் வந்தால் மட்டும், ஏந்தான் இந்த சமையல் இந்த சொதப்பு சொதப்புகிரதோ’ என்று நான் சிறுமியாக இருக்கும் போது என் அம்மா அடிக்கடி புலம்பியது, மனதில் வந்து ஓடியது!