எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


7 பின்னூட்டங்கள்

நானா ஏறும்புகளா ஒரு கை பார்த்திடலாம்

header-antheader-ant

ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு வீடு மாறுகிர பொழுதும், ஏதாவது தொல்லை இருக்கும் அவ்விடத்தினுள்! ஒன்று பாச்சான் தொல்லை, இல்லை அணில்கள் தொல்லை, இல்லை குரங்குகள் தொல்லை, இல்லை புறாக்களின் தொல்லை, இல்லையேல் பக்கத்து வீட்டில் இருப்பவர்களாவது தொல்லை குடுப்பார்கள்! இப்போ குடி இருக்கும் வீட்டில் ஒரே ஒரு பிரச்சனை தான்! அதாங்க, எறும்புகள் தொல்லை!
எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் பரம் பொருள் போல், என் வீடு முழுவதும் நிறைந்து வழிந்தன எறும்புகள்! நான் என்றைக்குமே எறும்புகளின் எதிரி இல்லைதான், என்ன செய்வது, அத்து மீறி நுழையும் திருடன் போல அல்லவா எல்லா இடத்திலும் தன் கால் தடங்களை பதித்து வைத்து இருக்கிறது! எந்த நேரம் தான் தூங்க செல்லுமோ இந்த எறும்புகள், எப்போ பார்த்தாலும் சாரை, சாரையாக ஊர்ந்து செல்கிறது!
நண்பர்கள், உறவினர்கள் என்று அத்தனை பேரும் கூறிய முதன்மையான ஆலோசனை, எறும்புகள் வராமல் இருப்பதற்கு கீச்சப்படும் சாக்பீஸ் உபயோகப்படுத்துவது தான்! நானும் ஒன்றை வாங்கி, எறும்புகள் நடமாடும் இடங்களில் எல்லாம் கோடுகள் இட்டு வைத்தேன்!
கோடுகள் நன்றாகவே வேலை செய்தன! எறும்புகள் கோடு கீச்சிய இடங்களில் எல்லாம் தென் படவே இல்லை! ஆனால் கோடுகள் கீச்சப்படாத இடங்களில் எல்லாம், எறும்புகள் அத்தனையும் வெற்றி நடை போட்டு கொண்டுதான் இருந்தன! விடுவேனா நான், இன்னும் இரண்டு சாக்பீஸ் வாங்கி வந்து, எறும்புகள் உபயோகித்த மாற்று பாதைகளில் எல்லாம் கோட்டை கிளித்தேன்! நான் விடா கண்டன் என்றால் அத்தனை எறும்புகளும் கொடா கண்டன் கள், பல்பே மாட்டாத லைட் ஹோல்டர் வழியாகவெல்லாம் தன் பாதையை மாற்றி கொண்டு விட்டது!
எறும்புகளின் முதல் குறி என் பசங்க ஆசையாய் சாப்பிடும் திண்பண்டங்கள் தான்! எறும்புகளின் அத்து மீறல்களால் சிறிது வெறுத்து போய் தான் இருந்தனர் இருவரும்! எங்கே எறும்புகள் சாரை சாரையாய் ஊர்ந்து செல்வதை கண்டாலும் ஓடி வந்து புகார் செய்வார்கள்! நானும் அவர்கள் புகார் செய்த இடங்களில் எல்லாம் கோடுகளை கீச்சி கீச்சி வைத்து கொண்டே இருந்தேன்!
சின்ன வயதில் கூட, சுவற்றில் கிறுக்கியதில்லை, இப்போ அதற்கு எல்லாம் சேர்த்துவைத்தால் போல் கிறுக்கி கொண்டு இருக்கிறேன்! கிட்டதட்ட நிறைய சாக்பீஸை காலி செய்து விட்டேன்! அந்த சாக்பீஸை செய்து விற்பவர் மட்டும், ஒரு தடவை என் சமையலறை சுவற்றை ஒரு முறை பார்த்தால், ஆனந்த அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விடுவார்! என்னை வாழ வைக்கும் தெய்வமே என்று போஸ்டர் அடித்து ஒட்டினாலும் ஆச்சறியபடுவதற்கில்லை!
ஒவ்வொரு இடத்திலும் கோட்டை கிளிக்கும் போது தான் கவனித்தேன், சும்மா சொல்ல கூடாதுங்க, எறும்புகள் வீடு முழுவதும், தன் ராஜ்ஜியத்தையே நிறுவி இருந்தன! 15 வருட கால உழைப்பு போல, வீட்டு சுவற்றின் அடியில், மலையை குடைந்து, சுறங்க பாதை போட பட்டது போல, வீட்டு சுவற்றின் அடியில் ஒரு நீள சுறங்க பாதையை நிறுவி இருந்தது! பக்கத்தில் இருக்கும் மூன்று வீடு வரை அந்த சுறங்க பாதை சென்று முடிவு அடையும் போல!
ஒரே நாளில் அவ்வளவு பெரிய கூட்டணி கட்சியை உடைத்து, என் சுயேட்சை ஆட்சியை நிலை நிறுத்தி விட முடியுமா என்ன! ஒரு நல்ல விஷயமும், இந்த எறும்புகளால் நடந்தது, என்னவென்று கேட்கரீர்களா, என் சமையல் அறை அலமாரிகள், காற்று கூட புக முடியாத பாத்திரங்களால் நிறைந்து மிளிர்கிரது!
என் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், என் வீட்டு சமையல் அறை சுவற்றை பார்த்து விட்டு கேட்டார், என்ன விஷேசம், சமையல் அறைக்கு மட்டும் வெள்ளை அடித்து வைத்திருக்கிறீர்கள், இன்னும் தை கூட பிறக்க வில்லை! ஒரு புன்முறுவலோடு நிறுத்தி கொண்டேன், வேறு என்ன சொல்ல!


2 பின்னூட்டங்கள்

அறிந்தும் அறியாமலும்

sleep

நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம் அறிந்தும், சில விஷயங்கள் நாம் அறியாமலும் நடந்து விடுகின்றன! அவற்றில் ஒன்று தூக்கம்! தூக்கம் வருகிறது என்று தூங்க செல்பவர்களை விட, ஏதாவது வேலையில் தன் முழு கவனத்தை செலுத்தி கொண்டு இருக்கும் போது தூங்கி விடுபவர்கள் தான் அதிகம்! அந்த வகையில் தூங்குபவரில் நானும் ஒருத்தி!
எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம், தூங்க செல்வதற்கு முன், ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்பது! கண் அயறும் வரை வாசித்து விட்டு,அப்படியே படுத்து உறங்கியும் விடுவேன்! சொல்லுவார்களே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும், அது உண்மைதான் போல! அதுவும் , குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கும் போது, இப்படி தூங்கி வழிந்தால் எப்படி சரியாக வரும்! சத்தியமாக சொல்லுகிறேன், பாடம் சொல்லி குடுக்க ஆரம்பிக்கும் போது, ரொம்பவும் உற்சாகமாக தான் ஆரம்பிப்பேன், திடீறென்று என்ன நடக்கும் என்றே தெரியாது, கண்கள் சொறுகி கொண்டு தூக்கம் வரும்! என்னால் கொஞ்சம் கூட தூக்கத்தை அடக்க இயலாது! என் பெரிய மகனுக்கு, இப்படி அம்மா தூங்குவதை பார்த்து பார்த்து பழக்கம்தான், அப்ப அப்ப எழுப்பி விட்டு கொண்டே இருப்பான், அவன் ஒன்றை மட்டும் திருப்பி திருப்பி கூறுவான், ‘அம்மா ஸ்கூல் டைரியில் மட்டும், என் மகன் வீட்டு பாடங்களை ஒழுங்காக படித்து விட்டான், என்று எழுதி , உங்கள் கைய்யொப்பம் இட்டு விட்டு, பிறகு உறங்குங்கள்’ என்று!! அவன் கவலை அவனுக்கு! சில நேரம், என் பெரிய மகனிடம், ‘டேய் பிளீஸ் டா! ஒரு பத்து நிமிடத்தில் எழுப்பி விட்டு விடு ‘ என்று சொல்லி விட்டு உறங்கிய நாட்களும் உண்டு!

நான் சிறு வயதில் படித்த காலத்திலும், இதே கதைதான், என் அம்மாவிடம், பாடம் படித்து கொண்டிருக்கும் போதே, ‘அம்மா, என்னை ஒரு அரை மணி நேரம் உறங்க அனுமதியுங்கள்’, என்று கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது ! நான் படித்த பள்ளியிலும், ஒரு முறை, ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, இதே போல் தூங்கி வழிந்திருந்தால் கூடபரவாயில்லை, நான் அன்று தூக்கத்தில் எழுந்து பேசவே செய்தேன்! அந்த ஆசிரியை, ரொம்ப கண்டிப்பானவர், ஆனால் அன்று நான் உளறியதை பார்த்து சிரித்தே விட்டார்!அப்பவே அப்படீனா, இப்ப சொல்லவா வேணும்!
என் கடை குட்டி மகனும், இப்போ ஸ்கூல் செல்ல ஆரம்பித்துவிட்டான்! அவனுக்கு படிப்பது என்றாலே, பாகற்க்காய் சாப்பிடுவது போல! அவன் கவனிக்கிரானோ இல்லையோ, நான் அனைத்து பாடங்களையும் அவன் காதுக்குள் ஓதிக் கொண்டே இருப்பேன்! ஒரு நாள் அதே மாதிரி ஓதி கொண்டு இருக்கும் போது, திடீறென்று விழித்து பார்த்தேன், என் கடைகுட்டி பையன், ஓட்ட பந்தயகாரர்கள் ஓடுவதற்காக ரெடியாக தன் காலை மடக்கி இருப்பது போல், அவனும், அம்மா நன்கு தூங்க ஆரம்பித்தவுடன் ஓட ரெடியாக காத்து கொண்டிருந்தான்!! எனக்கு, அந்த காட்சியை பார்த்தாவுடன் அழவா, சிரிக்கவா என்றே புரியவில்லை!
இப்போது எல்லாம் நான் ரொம்ப உஷார், தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பதில்லை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கும் நேரங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கிறேன்! ரொம்பவும் முக்கியமாக எனது கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்கின்றேன்! அறியாமல் நடந்த இந்த விஷயத்தை , ஆராய்ந்து, அறிந்து, சிறிது, சிறிதாக முழுதாக களைந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, பார்க்கலாம்!!!!!


3 பின்னூட்டங்கள்

ஓட்டை வடை

vadai

நடுவில் ஓட்டையோடு சுட்டு எடுக்கும் உளுந்த வடையை, என் பசங்க ஓட்டை வடைனுதான் குறிப்பிடுவாங்க! எல்லா விஷேச தினங்களிலும், இந்த வடையை சுடாமல் இருக்க மாட்டார்கள், நம் தமிழக மக்கள்! நானும், நன்கு பக்குவம் பார்த்து ஆட்டி, ஒவ்வொரு விஷேச தினத்திலும், சிறிது கூட எண்ணை குடிக்காத வண்ணம், சுட்டு எடுத்து விடுவேன், ஆனால் ஒரே ஒரு குறையோடு! ஆமாங்க எனக்கு வடையின் நடுவில் ஓட்டையே விழாது!
யாரெல்லாம் ஒட்டையோடு, இந்த வடையை சுடுகிரார்களோ, அவர்கள் எல்லாருமே எனக்கு சமையலில் பெரிய ஆட்கள்தான்! எத்தனையோ பேரு எனக்கு வடையில் ஓட்டை போட கற்றுகுடுக்க முயன்று தோற்று போயிருக்கிரார்கள்! எத்தனை பேர் எவ்வளவு அழகாக, சடக் சடக் என்று ஒரு விரலை வைத்தே, மாவினுள் ஒட்டை போட்டு வடையை சுட்டு எடுக்கிரார்கள்! செமையான விரல் வித்தை காரர்கள்!
என்னுடைய வடை போண்டா விலும் சேராமல், பஜ்ஜியிலும் சேராமல், ஒரு மாதிரியாகதான் இருக்கும்! சுவையில், ஓட்டை வடையை போலவே இருந்தாலும், ஓட்டை இல்லாத காரணத்தினால், என்னுடைய பசங்க இரண்டு பேரும், வடையை நிராகரித்து விடுவார்கள்! என் கணவர் ஒருவர்தான் எனக்காக அந்த ஓட்டை இல்லா வடையை சாப்பிட்டு காலி செய்வார்! அவரும் எத்தனையோ முறை, ஒட்டை போட்டு சுடு என்று சொல்லி சொல்லி அலுத்து போய், இவளுக்கு சுட்டாலும், வடையில் ஓட்டை போட வராது என்று மனதை மாற்றி கொண்டு விட்டார்! ஏதோ இதாவது கிடைக்குதே என்று நினைப்பார் போல!
இந்த வடையை முதன்முதலில் கண்டு பிடித்தவர், நூறு முறைகளிள் வடையின் நடுவில் ஓட்டை போடுவது எப்படி என்று ஒரு சிறு குறிப்பு புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கலாம்! என்னை மாதிரி விரல் வித்தை தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! நிஜமாகவே பெரிய சூத்திரம்தான் இந்த வடையை ஓட்டையோடு சுட்டு எடுப்பது!
ஆதி காலத்தில் இருந்தே எனக்கும் இந்த வடைக்கும், ஆகவே ஆகாது! எப்பொழுது எல்லாம் என் அம்மா இந்த வடையை சுடுவதற்க்காக தேங்காய் எண்ணையை காய வைக்கிரார்களோ, அந்த நேரம் எல்லாம், நான் தலை தெறிக்க வீட்டை விட்டு வெளியில் ஓடி விடுவேன்! அந்த வடை சுட்ட வாசனை, வீட்டை காலி செய்யும் வரை, மறந்து போய் கூட வீட்டினுள் வந்து விட மாட்டேன்! அந்த நேரங்களில் நான் என் அம்மாவிடம் சொல்வதுண்டு,’நான் வரும் காலத்தில் இந்த வடைகளை சுடவே மட்டேன்’என்று! அம்மா சொல்லுவாங்க, ‘பார்க்கலாம் பார்க்கலாம், உனக்கு கல்யாணம் ஆகி, ஒரு பெண் குழந்தை பிறந்து, அது வளர்ந்து, உன் வீட்டுக்கு மருமகன் வரும் பொழுது, நீ இந்த வடையை சுட்டுதானே ஆக வேண்டும்’ ,என்று! நான் இந்த ஓட்டை உளுந்தவடை தேர்வில் தேறவே மாட்டேன் என்று நினைத்து தான் கடவுள் எனக்கு இரண்டு பசங்களை குடுத்து இருக்கிரார் போல!! என்னைக்காவது ஒரு நாள் ஒட்டை உளுந்த வடையை சுட்டு விட மாட்டேனா என்ன, நம்பிக்கை தான் வாழ்க்கை!

 

 


2 பின்னூட்டங்கள்

நான் பிறந்த அழகிய கிராமம்

village

நான் பிறந்த ஊர், சிறுமலை அடிவாரத்தில் அமைய பெற்ற அழகிய ஒரு கிராமம்! ஊரின் பெயர் சாணார்பட்டி! திண்டுக்கலுக்கும், நத்தத்துக்கும் இடை யே அமையப்பெற்ற ஒரு ஊர்! எனது பள்ளி விடுமுறைகளை இந்த கிராமத்தில் தான் மிகுந்த மகிழ்ச்சியோடு களித்திருக்கிறேன்! ஓரு மாரியம்மன் கோவில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், ஒரு தபால் நிலையம், ஒரு வங்கி, ஒரு காவல் நிலையம், ஒரு ஹோட்டல், மூன்று பல சரக்கு கடைகள், ஒரு காய்கறி கடை, சில மட்டன் கடைகள், ஒரு சலூன்,ஒரு சைக்கிள் கடை, ஒரு கம்பௌண்டர்(டாக்டர் எல்லாம் கிடையாது), ஒரு ஆரம்ப பள்ளி கூடம், சில வீடுகள், தோட்டம், துரவு, இவைதான் சாணார்பட்டி! எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் ஊர்!
எனது தாத்தா இந்த ஊரில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார்! ஊர் மக்கள் அனைவரும் அதை மிகுந்த பிரியத்தோடு அண்ணாச்சி கடை என்றே அழைப்பார்கள்! எனது அம்மாவுடன் கூட பிறந்தவர்கள் நான்கு பேர்! அதனால் எப்பொழுதுமே, கொண்டாட்டத்திற்கு குறைச்சல் இருந்தது இல்லை! அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, மாமா பசங்க என்று பெரிய பட்டாளமே இருக்கும்! சாப்பாடு நேரம் தவிர, மற்ற நேரம் ஊர் சுற்றுவதிலேயே காலம் ஒடிவிடும்! எங்கள் தாத்தாவுக்கு சொந்தமாக ஒரு பெரிய தோட்டம் இருந்தது! அதில், ஒரு பெரிய கிணறு, நிறைய தென்னை மரங்கள் , ஒரு பெரிய பலா மரம், ஒரு அரை நெல்லிக்காய் மரம், ஒரு பிள்ளையார் கோவில், ஒரு முருகன் கோவில், ஒரு செம்பருத்தி பூ செடி, ஒரு செவ்வரளி மரம்! இந்த தோட்டத்தை கவனித்து கொள்ள மாணிக்கம் என்பவரை எங்கள் தாத்தா நியமித்து இருந்தார்கள்!
தோட்டத்தின் நடுவே அமையப்பெற்ற பெரிய கிணற்றில், ஊர் மக்கள் அனைவரும் தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதி கொடுத்து இருந்தார்கள்! நீரை இரைக்க ஒரு பம்ப் செட்டும், கிணற்றை ஒட்டினால் போல், ஒரு பெரிய தொட்டியும் இருக்கும்! எனக்கு அந்த கிணற்றை எட்டி பார்த்தாலே, தலை கிறுகிறுத்துவிடும்! நான் ஒரு பத்து அடி தள்ளி நின்றே எல்லாவற்றையும் கவனிப்பேன்! தண்ணீர் பாய்ச்சும் நேரம், ஓடம் போல இருக்கும் தென்னை மட்டையை, ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை ஏந்தி கொண்டு, தண்ணீர் பாய்ந்து ஓடும் வரப்புக்குள் நாங்களும் பாய்ந்து ஓடுவோம்! யாருடய ஓடம், கடைசி வரை சிக்காமல் ஓடுகிறது என்று பந்தயம் வைப்போம்! சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில சமயம் சண்டையிலும் முடியும்! இருந்தாலும் அடுத்த நாளும், அதே பந்தயம் நடக்காமல் இருந்ததில்லை!
தோட்டத்தின் உள்ளே, ஒரு கூரை வேயப்பட்ட ஒரு வீடு இருக்கும்! அதனுள்ளே சில சமயம், பட்டு பூச்சிகள் வளர்ப்பார்கள்! ஒன்றின் மேல் ஒன்று நெளிந்து கொண்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கும்! எனது உள்ளங் கையில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, இறக்கி விடுவேன்!
தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் காவல் நிலையம் மிக பிரம்மாண்டமாக, ஊரின் நடுவில் அமைந்திருக்கும்! அதை கடந்து செல்லும் போது நெஞ்சம் திக் திக் என்று அடித்து கொள்ளும்! அதற்கு பக்கத்தில் ஒரு மிக பெரிய புளிய மரம் இருக்கும்! காலையில் அந்த வழியாக சென்றால் பயம் இல்லாமல் புளி பறித்து உண்போம்! காயாக இருக்கும் புளி மிக சுவையாக இருக்கும்! உச்சி வெயில் பொழுதில் அந்த வழியாக வந்தால், மரத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒடியே வந்து விடுவேன்! காரணம் புளிய மரத்தில் அந்த நெரங்களில் பேய் அமர்ந்திருக்கும் என்று என் தோழி ரூபா கூறுவாள்! அந்த ஊரில் என் ஒரே பெண் தோழி அவள்தான்! அவளை போல் பொறுமைசாலியை நான் பார்த்ததே இல்லை!
மதியம் அவ்வளவாக வெளியே செல்வதில்லை, வீட்டின் பின்னே இருக்கும் சூடு போட்டான் காயை பறித்து, அதை கட்டாந்தரையில் போட்டு நற நற வென்று தேய்த்து, யார் அகப்படுகிரார்களோ அவர்களுக்கு சூடு வைப்போம்! அந்த விளையாட்டு போரடித்தவுடன், மாடிக்கு சென்று விடுவோம்! மொட்டை மாடியில் கூரை வேய்ந்த்திருப்பார்கள்! நல்ல குளு குளுவென்று இருக்கும்! அதில் ஒரு குதிரையை, அதாங்க, உயரத்தில் ஏறுவதற்கு பயன் படுத்துவார்களே, அதுவே தான்! அதை பஸ் ஆக பாவித்து விளையாடுவோம்! அதில் எதாவது ஒரு மூலையில் தேனி கூடு கட்டி இருக்கும்! ஒரு நாளைக்கு ஒன்று,இரண்டு பேராவது அதனிடம் கடி வாங்காமல் இருந்ததில்லை! கடி வாங்கியவர் அழுது கொண்டே, வீட்டினுல் சென்று அதற்காகவே ஸ்பெசலாக வாங்கி வைக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பை எடுத்து போட்டு விட்டு திரும்பவும் விளையாட வந்து விடுவார்கள்!
மாடி விளையாட்டும் போரடித்தால் இருக்கவே இருக்கிறது, தாத்தாவின் கடை, உள்ளே சென்று விட்டால் அது தனி உலகம்! சிறிய ஏணி ஒன்று மேலே அழைத்து செல்லும், நிறைய கதை புத்தகங்கள் நிறைந்து இருக்கும்! அவற்றின் ஒவ்வொரு பக்கங்களும் பொட்டலம் போடுவதற்காக காத்து கொண்டிருக்கும்! பசித்தால் தின்பதற்கு ஒரு டின் நிறைய வறுத்த கடலை பருப்பு ரெடியாக இருக்கும்! ஒரு சின்ன இடைவெளி வழியாக வெளிச்சமும், சிறிது காற்றும் வரும், முடிந்த வரை அங்கே நேரத்தை ஓட்டி விட்டு, சாயுங்காலமாய் வீடு வந்து சேர்வோம்!
அதன் பின்பும் எங்கள் கூத்து அடங்கிவிடாது, அடுத்து இரவு சிற்றுண்டியை முடித்து விட்டு, எங்கள் மாமாவின் திரை அரங்குக்கு கிளம்பி விடுவோம்! இது எங்கள் ஊருக்கு அடுத்த ஊரான கொசவபட்டியில் அமைந்திருந்தது! என்ன படம் ஓடினாலும் எங்கள் மாமாவுடன் கிளம்பி விடுவோம்! போனவுடன் அங்கே உள்ள கடையில், கிடைக்கும் அத்தனையையும் ருசி பார்த்து விட்டு, படம் பார்க்க ஆரம்பிக்கும் போது 7 மணி ஆகிவிடும்! படம் ஆரம்பித்த அரை மணி நேரத்துக்குள் எங்களுடன் வந்த பாதி பேர் படுத்து உறங்கி விடுவர்! பின்பு படம் முடிந்தவுடன், எல்லாரையும் எழுப்பி விட்டு, வீட்டுக்கு நடக்க ஆரம்பிப்போம்! ஊராரோடு சேர்ந்து நடந்தால் தான் உண்டு, இல்லையேல் சிறிது பயமாகதான் இருக்கும் அவ்வழி! மின்னல் வேறு அப்ப அப்ப வெட்டி சிறிது வெளிச்சத்தை காட்டும்! இடை இடையே பூச்சிகளின் சத்தம் வேறு! எப்படியாவது தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்து விடுவோம்!
ஓவ்வொரு நாளும் இதே கதைதான்! ஊருக்கு திரும்பும் நாளில் அழாமல் கிளம்பியதே இல்லை! இப்பொழுது அங்கே செல்லும் பொழுது, எனது கண்கள் எனது பழைய ஊரை தேடி தேடி ஏமாறுகிறது! நான் ரசித்த இடங்கள் அத்தனையும் மாறி போய் இருக்கிறது! மாறாமல் இருப்பது என் மனதினுள் பதிந்த என் நியாபகங்கள் மட்டுமே!


6 பின்னூட்டங்கள்

டிசம்பர் 21, 2012 என்ன நடக்கும், என்னுடைய பார்வையில்

 

2012உலகத்தில் உள்ள கோடானு கோடி மக்களுக்கு இருக்கும் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று, ‘டிசம்பர் 21, 2012 அன்று என்ன நடக்கும்??’ நிறைய திகிலோடும், சின்ன பயத்தோடும், பன்மடங்கு ஆவலோடும், மக்கள் அந்த தினத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கிரார்கள், ரொம்ப ஆவலோடு வெளிவரும் திரைபடத்தை போல! சில நேரங்களில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தால், ஒன்றுமே நடக்காமல் கூட போய் விடும்!!
என்னங்க பெரியதாய் நடக்க போகிறது, வழக்கம் போல, காலையில் சந்திரன் மறைந்து, சூரியன் உதயமாகும்! நானும் வழக்கம் போல் பாலை சுட வைத்து, டீ போடுவேன்! வழக்கம் போல் என் கணவரும், டீ கிளாஸ்சை கையில் எடுக்கும் போது, இது டீ யா இல்லை கஷாயமா என்று கேட்டு கொண்டே எடுப்பார்! அன்றும் என் குக்கர் வெய்ட் காணாமல் போய் கடைசி நிமிடத்தில் கிடைக்கும், பதற்றதில் என் கேஸ் ஸ்டவ் லைட்டர், நூறாவது தடவையாய், என் கால் பெருவிரல் நகத்தின் மேல் விழுந்து, நான் இங்கே தான் இருக்கேனு தெரிய படுத்தும்!
அனேகமாக, அன்று விடுமுறை விட பட்டிருக்கும்! இன்னிக்கு ‘உலகம் அழியுமா, அழியாதா’ என்று சூடாக பட்டிமன்றம் தொலைகாட்சியில் நடந்து கொண்டிருக்கும்! மாயன் கேலண்டரில் கணித்து சொன்ன 11:11 ஆம், மணிக்கு, உலகம் அழிந்து கொண்டிருப்பதை தொலைகாட்சியில் காட்டி கொண்டிருப்பார்கள், அதாங்க 2012 திரைபடத்தை சொன்னேன், அதை ஒரு மூன்று அல்லது நான்கு சேனலில் போட்டி போட்டு கொண்டு காண்பிப்பார்கள்!
‘நாளை என்று ஒன்று இருந்தால் மீண்டும் சந்திப்போம்’ என்று முக புத்தகத்தில் உருகி உருகி நிறைய பேர் ஸ்டேட்டஸ் போடுவார்கள்! முந்தய தடவை, சுனாமி எச்சரிக்கை கொடுத்த நேரம் எப்படி சில ஆர்வ கோளாறுகள், கடற்கரையில் நின்று, சுனாமி வருமா, எப்படி வரும் என்று ஆசையாக பார்த்து கொண்டிருந்ததை போல, டிசம்பர் 21 அன்றும், பலர் வானத்தையே பார்த்தவாறு வலம் வருவர்!
அன்றைக்கு பீதியை கிளப்பி விடுவார்கள் என்று, முன்னெச்சரிக்கையாக நம் அரசு, குறுந்தகவல் சேவையை அன்று முழுவதும் தடை செய்து விடுவார்கள்!
ஈ.பீ வழக்கம் போல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கரண்ட்டை கொடுத்த வண்ணமும், எடுத்த வண்ணமுமாக இருப்பர்!
கடைசியாக, இரவு நேரம் , ஒளி பரப்பாகும் சிறப்பு நீயா நானா வில் , கண்டிப்பாக இப்போதைக்குள் உலகம் அழியாது என்று ஓங்கி கூறி அன்றைய எபிசோடை மகிழ்ச்சிகரமாக முடித்து வைப்பார்கள்! அதை கேட்ட நம் மக்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகளை கொழுத்தி போட்டு அன்றைய தினத்தை பண்டிகை நாள் போல் கொண்டாடுவார்கள்! எனக்கு ஒரே ஒரு ஆசைதான், அன்று இதை சாக்கு வைத்து விடுமுறை அளித்தால், அதிகாலையில் ஒரு ஒரு மணி நேரம் கூடுதலாக உறங்கலாம், பார்க்கலாம் என் கூற்று நிஜமாகுமா என்று!!