ஒரு சாயுங்காலம் வழக்கம் போல் சப்பாத்தியை சுட்டு அடுக்கி விட்டு , அதில் ஒன்றை எடுத்து கொண்டு பக்கத்து வீட்டு குஜராத்தி பாபிஜீயிடம் காட்டி , அதற்கு ஐந்துக்கு மூணரை மதிப்பெண் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது பக்கத்து வீட்டு பெண் பார்த்து சிரித்தாள். நானும் சிநேகமாய் சிரித்து விட்டு என் சப்பாத்திக்கு கிடைத்த மார்க்கை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அவளும் ஒரு வாய் பிய்த்து சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என்று சர்டிபிகேட் கொடுத்தாள். அதன் பின்னே நடந்த சம்பாஷணைகள்…
பெண் : எங்க வீட்டில் இரவு எப்பொழுதும் சோறு தான். சப்பாத்தி எல்லாம் போட எங்கள் பாட்டி அனுமதிக்க
மாட்டார். ஆனால் நான் கல்யாணம் செய்து செல்லும் வீட்டில் இரவு எனக்கு பிடித்த மாதிரி எல்லா நாளும்
சப்பாத்தி தான்…
நான் : அதனால் தானோ என்னவோ அவர்கள் உன்னை தங்கள் வீட்டு மருமகள் ஆக்க பிரிய பட்டிருக்கிறார்கள்!
இன்னும் ஆறு நாள் தானே பாக்கி இருக்கிறது கல்யாணத்திற்கு, வேலைகள் எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது ??
பெண் : எல்லாம் நல்லா தான் போய் கொண்டிருக்கிறது.. எனக்கு தான் நாள் நெருங்க நெருங்க பயம் கூடி கொண்டே போகிறது . எனக்கு வரப்போகும் கணவரிலிருந்து, அவருடைய வீட்டுகாரர்கள் வரை எல்லோரும் புதியவர்கள். கூட்டு குடும்பம் வேறு. எப்படி தான் சமாளிக்க போகிறேனோ தெரியவில்லை. நினைத்தாலே பதை பதைப்பாக இருக்கிறது. எனக்கு கோபம் வேறு அதிகமாக வரும் . பிறந்த வீட்டில் கோபத்தை நினைத்த மாத்திரத்தில் வெளி காட்டுவது போல், புகுந்த வீட்டில் காட்டி விடாதே என்று ஒரு மாதமாக ஒவ்வொருவராய் அழைத்து உபதேசம் கொடுக்கின்றனர்!
நான்: ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும் . கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பாதை தெரியாது மனது குழம்பும். அதற்காக முகமூடி அணிந்து கொள்ள மட்டும் நினைக்காதே. நீ நீயாக இரு .. ஒரு தடவை முகமூடி அணிய தொடங்கி விட்டால், நீ உன் வாழ்நாள் முழுக்க அதை கழட்ட இயலாது. உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை முதலிருந்தே சொல்லி விடு. உன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருடனும் மனம் விட்டு பேச கற்று கொள். அவர்கள் உன்னை பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சி எடு. அவர்கள் உன்னை முழுதாய் புரிந்து கொள்ளும் வரை நீயும் பரஸ்பரம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்!!
பெண் : கூட்டு குடும்பமாக இல்லாமல் தனிக்குடித்தனம் செய்தால் நன்றாக இருக்குமா??
நான் : கண்டிப்பாக இல்லை! இவ்விரண்டும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போன்ற விஷயம்! தனிக்குடித்தனம் செய்யும் பொழுது நாம் தான் ராணி.. நாம் இயற்றுவது தான் சட்டம். பிரச்சனை என்று ஒன்று வரும் வரை எல்லாம் நன்றாக தான் இருக்கும்.. வீட்டில் யாருக்கேனும் உடம்பு சரி இல்லை என்றால் கூட உதவி செய்ய ஆள் இருக்காது.. தனித்தே எல்லா சிரமங்களையும் சமாளிக்க வேண்டும். வீட்டு நிர்வாகத்தை எடுத்து நடத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.. எது அவசியம், எது அவசியமில்லை என்று ஒவ்வொரு விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.. அதற்கு சிறிது காலம் பிடிக்கும். கூட்டு குடும்பத்தில் இருக்கும் பொழுது இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நீ கற்று கொண்டு விடலாம்!
பெண் : எனக்கு வரப்போகும் கணவர் இது வரை ரொம்பவே நல்லவராக தான் தெரிகிறார்! இதுவரை நீ இப்படி தான் இருக்க வேண்டும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த கோட்பாடுகளும் எனக்கு விதிக்கவில்லை ….. ..
நான் : அவசரப்படாதே… ஆரம்பத்தில் எல்லோரும் இனிக்க இனிக்க தான் பேசுவார்கள்! ஓரிரு மாதங்கள் சென்ற பிறகே உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும்… என் மனைவி என் வீட்டுக்காரி என்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன் ஒவ்வொன்றாக கோட்பாடுகளை நம் மேல் திணிக்க ஆரம்பிப்பர்.. இந்த தருணத்தில் தான் சண்டைகள் முளைவிட ஆரம்பிக்கும். இவ்வாறாக ஆரம்பிக்கும் சண்டைகளே உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பலப்படுத்தும்… அதனால் சண்டைகள் வந்தால் உடைந்து போய் விட வேண்டாம்.. அத்தகைய நேரங்களில் நீங்கள் இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்த தருணங்களை நினைவில் கொள்ளவும். சண்டைகள் வர வர அந்த சண்டைகள் ஏன் எதனால் எப்படி வந்தது என்று ஆராய்ந்து அவற்றை களைய முற்பட வேண்டும்.. அவ்வாறு செய்ய முற்படும் போது சண்டைகள் தீர்ந்து நாளடைவில் சந்தோஷம் பூத்து குலுங்கும். இவ்வாறு தவறுகள் திருந்தப்படும் போது ஒரு 7 அல்லது 8 வருடங்கள் கழித்து நீ அவருக்காகவும் அவர் உனக்காகவும் நிறையவே மாறி இருப்பது கண்கூடாக தெரிய வரும். நீயே அம்மாற்றங்கள் கண்டு ஆச்சரியப்படுவாய்!
பெண் : மிக்க நன்றி! கல்யாணத்திற்கு முந்தைய நாள் இரவே வந்து விடுங்கள்!
நான் : கண்டிப்பாக! எங்களுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்பொழுதும் உண்டு!
2:59 பிப இல் திசெம்பர் 11, 2014
மஹா உங்கள் அட்வைஸ் மிக மிக அழகு . உங்கள் அனுபவங்கள் , உங்களின் பொறுப்புகள் எல்லாமே வெளிப்படுத்துகின்றன. நேற்று நான் வெளியிட்டப் பதிவு உங்கள் அட்வைசிற்குத் தொடர்புடையது தான் மஹா. நேரமிருக்கும் போது வந்துப் படித்துக் கருத்தளியுங்கள்.
11:39 முப இல் திசெம்பர் 12, 2014
வாங்க ராஜி மேடம் ! உறவுகள் பற்றி நீங்கள் எழுதிய பதிவை படித்து ரசித்தேன். ஜானகி போன்ற குடும்ப பெண்கள் தத்தம் குடும்ப பொறுப்பை உணர்ந்து முகம் கோணாது நடந்து கொள்வார்களாயின் எந்த வீட்டிலும் எந்த பிரச்சனையும் இராது! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி 🙂
5:43 முப இல் பிப்ரவரி 17, 2015
பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.நான் ஒரு திருமண வீட்டுக்கு சென்றேன்.எல்லாம் அமர்க்களமாக சிறப்பாக நடந்தது.அடுத்த நாள் வரவேற்பு என்று அழைத்தார்கள்.போனேன்.அந்தக் காட்சி என்னை அதிர வைத்தது. மாப்பிள்ளை,மாப்பிள்ளையின் தாய் எல்லோரும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். மணப்பெண்ணைக் காணவில்லை.அந்த மணப் பெண் வந்த விருந்தினர்களுக்கு பரிமாற தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.நான்கு மணி நேரமாக யாருடைய உதவியும் இல்லாமல் தொடர்ச்சியாக தோசை சுட்டார்.எனக்கு தோசை வாய்க்குள் போகவில்லை.மீண்டும் வீடு வந்து விட்டேன்.
5:56 முப இல் பிப்ரவரி 17, 2015
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு சார்! நிறைய வீடுகளில் இது தான் உண்மை கதை!