எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


33 பின்னூட்டங்கள்

என்னடா இப்புடி பண்ணுறியேடா..

 

சில மாதங்களுக்கு முன்னால் , எனக்கும், என் இரு பசங்களுக்கும், திடீரென்று ஒரு ஆசை.. நாம ஏன் ஒரு வளர்ப்பு பிராணி வளர்க்க கூடாது! இது வளர்க்கவா இல்லை அது வளர்க்கவா என்று ஆளுக்கு ஒரு பிராணியை சொல்லி , கடைசியில் பூனை வளர்ப்பது என்று முடிவாயிற்று! பூனை வளர்க்கலாம் தான்….. ஆனா என்று நான் ஒரு பெரிய இழு இழுத்தேன்! எதுக்கு?? காரணம் இருக்கு. பூனை வளர்த்தால், அப்பூனையின் முடி நம் மூக்குக்குள் சென்று விட வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே , அலர்ஜி , ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உண்டு! அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பெரிய பையன் ஒரு யோசனை சொன்னான்!talk1

அவன் சொன்னான், நாம ஏன் ஒரு டாக்கிங் டாம்(Talking Tom ) வளர்க்ககூடாது! எனக்கும் அது ஒரு நல்ல முடிவாகத்தான் பட்டுது. ஏன் என்றால், அது ஒரு மெய்நிகர் பூனை (Virtual Cat ) . டாக்கிங் டாம் என்பது ஒரு Android App. அதை நாம் நமது Android போனிலோ இல்லை டேப்லட்டிலொ (Tablet ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாம ஏதாவது பேசினால் , அது சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் திரும்ப பேசும்! நம் காலை உரசி கொண்டு நிற்காது. நம் வீட்டு பாலை தெரியாமல் குடிக்காது. நம் மடியில் சொகுசாக வந்து படுக்காது.எலியை தூக்கி கொண்டு வந்து நம் வீட்டில் போடாது. காலுறைகளை கடித்து வைக்காது . முக்கியமாக மியாவ்.. மியாவ் என்று கத்தி நம் உசுர வாங்காது! டபுள் ஓகே சொன்னேன் நான்! அன்றைய தினமே எங்கள் வீட்டிற்கு டாக்கிங் டாம் வந்து சேர்ந்தது!

talk6

பெரிய பையனுக்கு, ரொம்பவே மகிழ்ச்சி! கண்ணை இமை காப்பது போல் அதை நன்கு பார்த்து கொண்டான்! அதற்கு பசித்த போது , அதற்கு தேவையான உணவை வாங்கி அதன் வாயில் கொடுத்து சாப்பிட வைத்தான்! நேரத்துக்கு தூங்க வைத்தான்! சிறிது நேரம் அதன் கூட விளையாடினான்! அதற்கு உச்சா , கக்கா வந்தால் உடனே அப்பூனையை கழிப்பறை செல்ல பழக்கினான்! அதனால் நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக பூனை வளர்ந்து வந்தது! அவ்வாறு பொறுப்பாக வளர்க்கும் போது அதற்கு ஏற்றாற் போல் நாணயங்கள் பரிசாக கிடைக்கும்! பூனையுடன் விளையாடும் போதும் , ஊக்க பரிசாக நாணயங்கள் கிடைக்கும். அவ்வாறு சேகரித்த நாணயங்களை கொண்டு , பூனைக்கு தேவையான உணவுகளை வாங்கி கையிருப்பில் வைத்து கொள்ளலாம். அதற்கு பசிக்கும் போது ஊட்டி கொள்ளலாம்!

 

எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது! ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் என்று சும்மாவா சொன்னாங்க! ஒரு நாள் எங்க பெரிய பையனுக்கு டாக்கிங் டாம் போரடித்து போயிற்று. அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். அதற்கு பதிலாக, டாக்கிங் ஜிஞ்சர், பென் , டாக்கிங் ஏஞ்செலா என்று நிறைய பதிவிறக்கம் செய்து அவற்றோடு விளையாட ஆரம்பித்து விட்டான். இந்த ஜிஞ்சர் பூனை , நம்ம டாக்கிங் டாமுக்கு கசின், அதாங்க உடன் பிறவா சகோதரன்! பென் என்பது ஒரு சோம்பேறி பேசும் நாய், அப்புறம் , இந்த ஏஞ்செலா இருக்கே, அது அசின்! பெரிய அழகினு நினைப்பு அதுக்கு சாப்பாடு ஊட்டினது பத்தாது என்று , அதன் பல் இடுக்கில் சிக்கி இருக்கும் உணவு துகள்களை பிரஷ் வைத்து சுத்தம் வேறு செய்து விட வேண்டும்! அசப்புல பாக்க , டார்லிங் படத்து பேய் மாதிரி ஒரு மூஞ்சி! ஆனாலும் எங்க வீட்டு பசங்களுக்கு இவுங்க எல்லாத்தையும் பிடிக்க தான் செய்யுது!!talk3 talk9 talk10 talk14

இப்படியாக, அசின் , கசின் என்று பெரிய பையன் திசை மாறி போக, டாக்கிங் டாமை கண்டு கொள்ள ஆள் இல்லாமல் போயிற்று! அப்போ தான் நுழைந்தான் எங்க வீட்டு குட்டி பையன்! டாக்கிங் டாம்மோடு ஆசையாக விளையாட ஆரம்பித்தான்! அவன் ரொம்பவே சேட்டைக்காரன்! கிளி மாதிரி வளர்த்த டாக்கிங் டாமை குரங்கு கையில குடுத்த மாதிரி! நாணயங்களை தண்ணீராக செலவழிப்பான்! எது தேவை , எது தேவை இல்லை என்பதை பற்றி கவலை கொள்ளாமல் , டாக்கிங் டாமுக்கு , வித விதமாய் உணவு வகைகளை வாங்கி ஊட்டி தள்ளினான்! அதுவும் காணாததை கண்டதை போல தின்று தீர்த்தது! அதற்கு சாப்பாடு குடுக்க வேண்டியது , கழிப்பறையில் விட வேண்டியது , அரை குறையாய் தூங்க விடுவது என்று அவன் இஷ்டத்திற்கு டாம் வளர்ந்து வந்தது! மருந்துக்கு கூட , டாமோடு விளையாடுவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாய் நாணயங்கள் குறைந்து ஒரு கட்டத்தில் நாணயங்கள் சுத்தமாக இல்லாமல் போயிற்று.. அன்றைக்கு ஆரம்பித்தது தலை வலி எனக்கு!

talk2       talk13

நாணயங்கள் காலி ஆனதால் உணவு சுத்தமாக தீர்ந்து போனது! என்ன செய்வதென்று தெரியாமல் , எங்க குட்டி பையன் திரு திருவென்று முழித்தபடி என்னிடம் வந்து சேர்ந்தான். அவனுக்கு கவலை , பூனைக்கு ஆப்பிள் வாங்க முடியவில்லையே, ஆரஞ்சு வாங்க முடியவில்லையே என்று! சரி, பூனையோடு விளையாடினால் நாணயங்கள் கிடைக்கும் என்று விளையாட நினைத்தால் , பூனை பசி மயக்கத்தில் இருந்தது! என்ன செய்வது என்று தெரியாது , பெரிய பையனை கூப்பிட்டு கேட்டால் , அவன் சொல்லுகிறான்… நீங்க , அப்பப்ப அது கூட விளையாடி விளையாடி நாணயங்களை சேர்த்திருக்கணும் என்று!

 

talk15     talk17       talk11

விட்டால்… என்னை கழைக்கூத்தாடி ஆக்கிடுவானுங்க போல ! இந்த பூனையின் பசியை தீர்ப்பதற்காக டாக்கிங் டாம் App நியூஸ் லெட்டெருக்கு subscribe செய்தேன். ஒரு 1500 நாணயங்கள் அதற்காக கொடுத்தார்கள்! அப்பாடா.. என்று சொல்லி முடிப்பதற்குள் , எங்க குட்டி பையன் அதை மொத்தமாக காலி செய்திருந்தான்! அதன் பின்னே டாக்கிங் டாம் Youtube videos உக்கு subscribe செய்தேன்! அதுவும் அதே வழியில் காலி ஆகியது! பூனை பசி எடுக்க ஆரம்பித்தவுடன் கையில் ஒரு கோழி ரோஸ்ட் படத்தை வரைந்த அட்டையை தூக்கி காண்பித்து ஆ.. ஆ… ஆ என்றுஅதன் கையை வாயில் சுட்டி காட்டி எதையாவது சாப்பிட ஊட்டி விட மாட்டாயா என்று என் குட்டி பையனை பார்த்து கேட்டு கொண்டிருந்தது !

பூனை மியாவ் என்று உயிரை வாங்கினால் கூட பரவாயில்லை போல.. இது ஆ.. ஆ.. ஆ .. என்று கத்துவது எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது. நிஜ பூனையாக இருந்தால் கூட ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்து அதன் வாயை அடைத்து விடலாம்! இந்த மெய் நிகர் பூனையை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தோம்! உடனே , பெரிய பையன் சொன்னான் , கொஞ்ச நாள் அந்த பூனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள் , அது ஓடி போனாலும் போயிடும் என்று! வேறு வழி , இரண்டு வாரத்துக்கு எட்டி கூட பார்க்காமல் இருந்தோம். இரு வாரங்கள் கழிந்த பின்னே , மனது கேட்காமல் சென்று பார்த்தேன்! பார்த்தவுடன் அழுகையே வந்து விட்டது! பூனை இரு வாரமாய் கழிப்பறை செல்லாமல் , பூச்சிகள் தலையை வட்டமடிக்க எங்களுக்காக காத்து கொண்டிருந்தது!

இப்பொழுதும் இந்த நிலைமையை சமாளிக்க, பெரிய பையன் தான் ஆபத்பாந்தவனாய் வந்தான்! தன் நண்பனிடம் கேட்டு Hacked டாக்கிங் டாம்மை போட்டு கொடுத்தான்! அதில் நாணயங்களுக்கு பஞ்சம் இல்லாது நிறைய இருந்தது! சின்ன பையனுக்கோ கொண்டாட்டம்! கொஞ்ச நாட்களிலேயே எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்பது போல் , இராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது டாக்கிங் டாம்! அதன் உடை , உணவு , தாங்கும் இடத்திலிருந்து எல்லாவற்றிலும் செல்வச்செழிப்பு தாண்டவமாடியது! சரி , இத்தோடு பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்தால், அது முடியவே முடியாது போல!

talk7

 

 

talk5

 

அப்படி என்ன பிரச்சனை?? அது ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து என்ன பிரயோஜனம், எங்க குட்டி பையன் , அதை நேரத்துக்கு தூங்க விட மாட்டிகிறான்! அது கொட்டாவி விட்டு கொண்டே சாப்பிடுகிறது.. அதாவது பரவாயில்லை, அது உச்சா , கக்கா போவதற்கு கூட விட மாட்டிகிறான்! அது அடக்க முடியாது காலை காலை ஆட்டி கொண்டு நாட்டியமாட , இங்கே இவன் வெடி சிரிப்பு , சிரித்து கொண்டிருக்கிறான்!

talk12                 talk16

டேய்.. பாவம்டா… அதுக்கு வயிறு வலிக்க போகுது டா… அத கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுடா… இவை எல்லாம் என் புலம்பல்கள்!! என்னடா இப்புடி பண்ணுறியேடா!!


8 பின்னூட்டங்கள்

2014 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.

Here's an excerpt:

A New York City subway train holds 1,200 people. This blog was viewed about 7,300 times in 2014. If it were a NYC subway train, it would take about 6 trips to carry that many people.

Click here to see the complete report.