எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

கட்டிய சீலை போதும் போகலாம் வா..

21 பின்னூட்டங்கள்

கட்டிய சீலை போதும் போகலாம் வா

இப்படியெல்லாம் யாராவது கூப்பிட்டால் நான் கண்டிப்பா கிளம்புற ஆள் இல்ல.. கொஞ்சமாவது யோசிப்பேன். ஆனால் என்ன செய்வது அழைத்தவர் என் மரியாதைக்கு உரியவர், மனதிற்கு இனியவர், ஆம் என் கணவர் தான் இப்படி அழைத்தார். அது ஒரு சனிக்கிழமை மாலை நேரம். தப்பு தப்பு இரவு நேரம். எப்பவும் சனிக்கிழமை சொல்லுவார் நான் சீக்கிரம் மாலை வந்து விடுகிறேன் தயாராக இருங்கள் என்று.. ஆனால் ஒரு நாளும் வர மாட்டார்! நாங்களும் காத்து காத்து கண்கள் பூத்து போவது தான் மிச்சம். இப்பொழுது எல்லாம் சரியாக சொன்னால் கிளம்புவதே இல்லை. விஜய் டீவியில் அது இது எது முடிந்த மறு நிமிடம் தரிசனம் குடுத்தார் என் கணவர்.

வந்ததும் வராததுமாய் கிளம்பு கிளம்பு வாஷிங் மிஷின் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்றார். சிறிது டச் அப் செய்ய கூட விட வில்லை.. அப்படியே கட்டிய சீலையோடு அழைத்து சென்றார். கிளம்புவதற்கு முன் சிறிது தயக்கம் எனக்கு, இன்று நாள், நியூமராலஜி படி தேதியின் நம்பரும் சரி இல்லை, போய் தான் ஆகனுமா?? அப்படியே ஆனது ஆகட்டும் என்று கிளம்பினால் வீண் விவாதம் மட்டுமே வந்து தீரும். இப்படி யோசித்து கொண்டே அவர் பின்னே சென்று விட்டேன் கடை வரை..

அங்கே போனதும் எதை தேர்ந்தெடுக்க என்பதில் ஆரம்பித்தது குழப்பம். ஏற்கனவே எங்கள் நண்பர் ஒருவர் பத்து நாள் முன்பு தான் எல்ஜீ வாஷிங்மிஷின் வாங்கி இருந்தார். அவர் டாப் லோடிங் வாங்குங்கள், சிரமம் இருக்காது என்று சொல்லி இருந்தார். நானும் நேரே போய் எல்ஜீ முன்பு சென்று நின்றேன். என் கணவர் ஆரம்பித்தார், ஹ்ம்ம் சொல்லு என்ன மாடல் நம்பர்.. இது என்ன, அது என்ன என்று கேள்வி கணைகள் தொடுக்க ஆரம்பித்தார்.. அவர் ஏற்கனவே என்னை கூகிளில் மாடல்கள் பார்த்து வைக்க சொன்னது நியாபகம் வந்தது. நானும் தேடி பார்த்தேன், ஒன்னு ரெண்டு மாடல் காட்டி இருந்தால் நானும் பொறுமையா எல்லா விவரத்தையும் சேகரித்து இருப்பேன்.. அது 100 200 மாடல் இல்ல காண்பித்தது. மாயி படத்துல பொண்ணு பார்க்க வந்த இடத்தில் அந்த மின்னல் பொண்ணு மாப்பிள்ளை வடிவேலுவை விட்டு விட்டு கூட வந்த சரத்குமாரை பார்த்து ‘இம்புட்டு நேரம் நான் மச்சானை தான பார்த்தேன்’ என்று சொன்ன மாதிரி நானும் தேடி தேடி வெறும் வாஷிங்க் மிஷின் படத்தை தானே பார்த்தேன்னு சொல்ல வந்து நாவை அடக்கி கொண்டேன்!!

கணவருக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. போன் போடு நம் நண்பர் என்ன மாடல் வாங்கி இருக்கார் என்று கேட்போம் என்று கூறினார். நானும் எங்கள் சென்னை நண்பரின் மனைவியின் நம்பருக்கு கால் செய்தேன். அநியாயத்துக்கு பேலன்ஸ் மிக குறைவாக இருந்தது.. ரெண்டு ரூபாய்க்கு பரவாயில்லை ரெகார்டட் வாய்ஸ் திட்டி கொண்டே கால் கனெக்ட் செய்தது. அவர் எடுத்தவுடன் அவசர அவசரமாய் மாடல் நம்பர், விலை விவரம் எல்லாம் கேட்டு முடித்தேன் பேலன்ஸ் தீர்ந்து விட்டிருந்தது. நல்ல வேளை தப்பிச்சேன்! பிறகு என் கணவரை அழைத்து விட்டு அதே மாடலை காட்டி இதன் விலை 15000 என்று சொன்னார்கள் என்று சொன்னது தான் தாமதம்.. கணவர் கத்தினார் ஹ்ம்ம் இன்னும் நல்லா கத்தி சொல்லு கடைகாரன் காதில் விழுற மாதிரி! தமிழில் விலை சொல்ல வேண்டிய தான.. நல்ல மாட்டிண்டோம் இன்னிக்கு வந்திருக்கவே கூடாது மனம் உள்ளுக்குள் அழுதது. நண்பரின் மனைவி போன் கால் கட் ஆவதற்கு முன்னால் வேறு கம்பெனி மிஷினுக்கு எல்லாம் 10 வருட மோட்டார் வாரண்டி இருக்கிறது அதையும் விசாரித்து கொள்ளுங்கள் என்று சொன்னது நியாபகத்துக்கு வந்தது. அதை கணவரிடம் சொன்னவுடன் அவர் படாரென்று எல்ஜீயிலிருந்து சாம்சங்குக்கு தாவி விட்டார்!

சாம்சங்கில் ஏதோ வாபில் டெக்னாலஜி என்று போட்டிருந்தது.. அதை என்ன என்று விசாரித்து வை என்று கடை பையனை விவரம் சொல்ல அழைத்து விட்டு கணவர் அவருக்கு வந்த போனை எடுத்து பேச சென்று விட்டார். வந்த கடை பையன் என்னமோ கடகடவென்று தெலுங்கிலே கேட்டு தொலைத்தான். நான் இருந்த எரிச்சலில் What come again? என்று அலறி விட்டேன்! இந்த ரோஜா படத்தில் அரவிந்தசாமி வைஷ்ணவியை பொண்ணு பாக்க வந்த இடத்தில் அவரிடம் தனியே பேசும் போது வைஷ்ணவி என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள் என்று சொன்னவுடன் அரவிந்தசாமி அலறுவாரே அது மாதிரி! பிறகு அந்த கடை பையன் சுதாரித்து விட்டு ஹிந்தி தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன்.. ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டான்.. தெரியும் என்றேன்.. உடனே அவன் சொன்னான் ஹே ஹே.. எனக்கு ரெண்டுமே தெரியாது என்றான் அந்த பையன். நான் உடனே ஜெயம் படத்தின் கதாநாயகி சதா போல் கையை என் கணவர் இருந்த திசை நோக்கி நீட்டி அவரிடமே பேசிக்கோ என்று சொல்லி விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டேன். எரிச்சல் மண்டி கொண்டு வந்தது.

அந்த கடை பையனும் வாபில் டெக்னாலஜி பத்தி வாய் வோயாமல் எதேதோ கதறி கொண்டிருந்தான் தெலுங்கில். எனக்கு மண்டையே சுற்றி கொண்டு வந்தது போல் இருந்தது.. அதற்குள் ஏதோ ஐ சென்சார் என்று ஏதோ ஒரு மிஷினில் எழுதி இருக்க அதற்கு தாவலாமா என்று கணவர் யோசித்து கொண்டிருப்பதற்குள் நல்ல வேளை நேரமாயிற்று. எங்களை வெளியே தள்ளி கடையை மூடுவதற்குள் நாங்களே வெளியில் வந்து விட்டோம். வெளியில் வந்தவுடன் என் கணவர் யாருக்கோ போன் செய்தார். செய்து சாம்சங் வாஷிங்மிஷின் மாடல் நம்பரை கொடுத்து விலை விசாரித்தார். அவர் சொன்ன விலை கடையில் சொன்ன விலையை விட 1500 ரூபாய் கம்மியாக இருந்தது. பார்த்தியா என் சாமர்த்தியத்தை என்று சுய தம்பட்டம் அடித்து கொண்டார். இப்போ எனக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது. ஏற்கனவே ஒரு ஹோல் சேல் டீலரிடம் பேசி விட்டு இங்கு வந்து விட்டு என்னை வேறு போட்டு பார்த்திருக்கிரார்.. இருக்கட்டும் இருக்கட்டும் வீட்டுக்கு தான வருவாரு வெச்சுக்கிறேன் என்று மனதில் கறுவி கொண்டேன்.

வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் மனது பொறுமுவது தாங்க முடியாமல் கேட்டேன் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள் என்று.. அவர் சொன்னார் நீ எல்ஜீ எல்ஜீ என்று அதை பிடித்து தொங்கி கொண்டிருந்தாய் அல்லவா அதை விட சாம்சங்க் தான் பெஸ்ட் என்று உனக்கு புரிய வைக்க தான் என்று கடுப்படித்தார்.. அந்த ஹோல் சேல் டீலரை கூப்பிட்டு அவர் ஏற்கனவே ப்ளான் செய்தது போல் அவருக்கு பிடித்த மாடலுக்கு ஆர்டர் குடுத்து விட்டு என்னை ஏதோ சாதித்து விட்டது போல் பெருமையாக பார்த்தார்.. நான் முகத்தை கோபமாக வைத்து கொண்டு சொன்னேன் என்னை வீட்டுல கொண்டு போய் விடுங்கோ எனக்கு பசிக்குது என்று!!

 

21 thoughts on “கட்டிய சீலை போதும் போகலாம் வா..

 1. அலறும் போது கூட “ரோஜா” ஞாபகம்…! பிறகு “ஜெயம்” – நல்ல ரசனை…

  சாம்சங்க் நல்லாத்தான் இருக்கும்.. ஆனால் ரிப்பேர் என்று வந்தால், சரி செய்ய இன்னொரு எல்ஜீ வாங்கி விடலாம்…!

  • வாங்க தனபாலன் சார்..
   உங்கள் அனுபவம் பேசுகிறது இல்லையா.. நீங்கள் சொல்வதை பார்த்தால் எல் ஜீ வாங்கினால் தேவலை என்று தோன்றுகிறது.. ஆனால் விதி யாரை விட்டது என்னவர் அனுபவித்து அறியட்டும் 🙂

 2. ஏதோ காதல் கதை என்று நினைத்தால், வாஷிங் மெஷின் வாங்கிய கதை!
  உங்களைக் கேட்காமலேயே தீர்மானம் செய்துவிட்டு, வாங்கியும் விட்டாரா, அவருக்குப் பிடித்த சாம்சங்கை? அநியாயம், அக்கிரமம்! வாபஸ் லோ! வாபஸ் லோ! (தெலுங்கான பில் நமது லோக்சபாவில் பார்த்ததனால் வந்த பலன்!)
  புது வாஷிங் மெஷினில் தோய்க்கவே தோய்க்காதீர்கள், மஹா! கட்டின துணியுடன் இருக்கட்டும், என்ன சொல்றீங்க?

  • நீங்கள் சொல்வது சரி தான் அம்மா.. ஆனால் அம்மா எனக்கு எப்பவும் ஆச்சரியப்படுத்துவது ஒன்றே ஒன்று தான்! எதை வாங்க செல்லும் போதும் அதில் நூற்றி எட்டு குறை கண்டுபிடித்து பின் நாலாவது கடையில் தான் அவர் மனதுக்கு பிடித்தது அமையும்! ஆனால் என்னை மட்டும் போட்டோ கூட பார்க்காமல் தன் பெற்றோர் பார்த்தால் போதும் என்று கை பிடித்தார்.. எப்போதாவது சண்டை வரும் போது நான் சொல்வது உண்டு ஒரு எட்டு நேரில் கல்யாணத்துக்கு முன் வந்து பார்த்திருக்கலாம் என்று 🙂

 3. ஹா….ஹா… ஹா….. வாசிங் மெஷினி வாங்க அடித்த லூட்டியைப் படித்ததில் சாம்சங் வாஷிங் மெஷினில் நான் போட்ட துணி இப்ப தான் நினைவிற்கு வருகிறது.உங்களைக் கேட்காமல் எடுத்த முடிவிற்கு நீங்கள் கட்டுப் பட வேண்டியதில்லை. அதனால் ஒரு நல்ல ஐடியா இனிமேல் அவரையே அதனுள் துணையைப் போட்டு எடுத்து காய வைக்க சொல்லுங்கள் மஹா…….

  • வாங்க ராஜி மேடம்..
   நீங்கள் சொல்வதும் சரி தான்! உங்க மிஷின் உங்க பாடு என்று அதில் என்ன பிரச்சனை வந்தாலும் அவரையே குறை சொல்லி விட்டு நாம் ஒன்றும் அறியாதது போல் நின்று கொள்ளலாம் 🙂

 4. உங்கள் அனுபவங்களை இரசித்தேன்

 5. சிறந்த தொழில்நுட்பக் கருத்துப் பகிர்வு

 6. கடைசில ராக்கெட் விட்டீங்களா இல்லையா? ஐ மீன், மெசின் வந்திச்சா இல்லையா?

 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

  வாழ்த்துக்கள்…

 8. அருமையான கணவர்.பல தடவைகள் நான் சிரித்து விட்டேன்.ஒரு உண்மை தெரியுமா?நான் சலவை இயந்திரத்தை முதன் முதலாக 2004ம் ஆண்டு தான் பார்த்தேன்.
  டைட்டானிக் படம் தான் நான் பார்த்த முதல் படம்.அது வரைக்கும் திரைப்படம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது.யாழ்ப்பாணம் அவ்வாறு தான் இருந்தது. ஆப்பிள்{ (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளிப்பழம் (ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம்) } பழம் எப்படி இருக்கும் என்று 2010ம் ஆண்டு தான் பெரும்பாலான யாழ்ப்பாண மக்களுக்குத் தெரியும்.
  தொடரூந்தை 2014ம் ஆண்டு தான் புதிய தலைமுறை யாழ்ப்பாண மக்கள் பார்த்தார்கள்.
  நன்றி மஹா மேடம்.

  • உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி பிரபு சார்! இன்று உங்கள் பின்னூட்டம் பார்த்து விட்டு நானும் ஒரு முறை என் பதிவை நானே படித்து சிரித்து விட்டேன் 🙂 யாழ்ப்பாண மக்களுக்கு இன்னும் பல பல வசதிகள் பெருகட்டும் என்று இந்த தை திருநாளில் மனதார வேண்டி கொள்கிறேன். நன்றி!

 9. சூப்பர் அக்கா, எப்படித்தான் இப்படி சுவாரசியமாக நடந்த சம்பவங்களை எழுதுகின்றீர்களோ!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s