எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


6 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -43

அதை பார்த்த முதல் நொடி
கண்களுக்கு நம்ப முடியாத
ஆச்சரியம் கலந்த இன்பம்..
ஒரு ஐந்து நிமிடம் கழிந்த
பின்னே அதை பார்க்கும் பொழுது
பேரதிர்ச்சி கலந்த துன்பம்..
சொல்லாமல் நின்று போய்
விட்ட சுவர் கடிகாரம்!!

படம்

எங்கள் பக்கத்து தெருவில்
நடந்த சண்டையை எட்டி
நின்று வேடிக்கை பார்க்கவோ
அவர்கள் எதற்காக சண்டை
இடுகிறார்கள் என்பதை அறியவோ
என்ன பேசி கொள்கிறார்கள் என்பதை
காதை தீட்டி கவனிக்கவோ எனக்கு
துளியும் விருப்பம் இல்லை..
அவ்வளவு நல்லவளா நீ… என்றால்
கண்டிப்பாக இல்லை தான் பின்னே
அவர்கள் தெலுங்கிலே அல்லவா
சண்டை இட்டு கொள்கிறார்கள்!!

படம்

ஒரு பெண் தன்னை தயார்
செய்து வெளியே கிளம்ப
எடுத்து கொள்ளும் நேரம்
அவள் வீட்டில் எத்தனை
முகம் பார்க்கும் கண்ணாடிகள்
இருக்கிறது என்பதை பொறுத்தது!!

படம்

நடுநிசியில் திடுக்கிட்டு விழித்தேன்
பசியில் வீறிட்ட பக்கத்து வீட்டு
குழந்தையின் அழுகுரல் கேட்டு…..
தாய்மை!!

படம்

கண்ட கனவு நிஜமாகும் போது
நான் காண்பது என்ன கனவா.. என்று
வியப்படைந்து சொல்லுவர் சிலர்..
நிஜமாகவே நடந்தாற் போல்
இருந்தது என்று வந்த கனவை
ஆச்சரியமுடன் விவரிப்பர் சிலர்..
இவ்விருவருக்கும் இடையே தோன்றும்
ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே
நிஜமாகவே கனவு கண்டிருக்கிறார்கள்!!

படம்


14 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -42

இரண்டுக்கும் இடையே 
ஒரு ஒற்றுமை உண்டு..
இரண்டுமே குளிரை விரட்டி
சூட்டை வரவேற்பவை..
ஹோலி Vs கோழி!!

படம்

கிண்டிய அல்வா வாயில்
கோந்து ஆன கதைகள்
நிறைய கேட்டதுண்டு
வாய் விட்டு சிரித்ததுண்டு
ஆனால் நானே என் கையால்
முதன் முறையாய் சிரமப்பட்டு 
செய்த பீட் ரூட் அல்வாவை
வாயில் வைத்த போது என்னால் 
சிரிக்க முடியவில்லை ஏனெனில்
வாயை திறக்க முடிந்தால் தானே
வாய் விட்டு சிரிப்பதற்கு!!

படம்

டீவீ விளம்பரத்தில் ஒரு
பெண் கையில் வயர் மெஷ்ஷை
பிடித்தபடி சப்பாத்தியை
துளி கூட எண்ணெய் இல்லாமல் 
கும்முனு பூரி போல் எழும்ப செய்து
தட்டில் இடுவதை மிகுந்த
ஏக்கத்துடன் பார்த்த என் கணவர்
சந்தடி சாக்கில் என்னையும்
ஸ்க்ரீனையும் மாறி மாறி நோக்க
அவரை முழுதும் புரிந்தவளாய்
பதில் அளித்தேன்…
கவலைபடாதீர்கள்..
சீக்கிரமே பெண்ணை பேசி 
முடித்து விடலாம்!!

படம்

காத்திருக்கும் அறைகளில்
போடப்படும் ஒன்றோடு ஒன்று
இணைந்த இருக்கைகளில்
ஓரமான இருக்கையில் 
அமர்வதும் இலவசமாக
மானத்தை தண்டோரா 
போட்டு கப்பலில் ஏற்றுவதும்
ஏறக்குறைய ஒன்று தான்!!

படம்

நடு இரவு 2:30 மணிக்கு
விழிப்பு தட்டும் போது
முழுதாய் உறங்காமல்
பாதியில் எழுந்து விட்டோமே
என்ற மனக்குறையை விட
ஆஹா.. இன்னும் ரொம்ப 
நேரம் இருக்கிறது விடிய
என்ற சந்தோஷ எண்ணமே
மேலோங்குகிறது!!

படம்

யாரேனும் ஒருவர்
ஆரஞ்சு பந்து வாங்கி
வருகிறேன் என்று
ஆரஞ்சு பழம் வாங்கி
வந்தால் அவங்கதான்
ஆந்திராகாரர் தெரிஞ்சிகோ!!

படம்

 

நாங்க குடி இருக்கிற
வீட்டுக்கும் ராம்லீலா படத்தில்
வரும் தீபிகா படுகோனுக்கும்
நேற்று மதியத்தில் இருந்து
சரியாக இன்னும் இரண்டரை
மாதம் வரை ஒரு தவிர்க்க
முடியாத ஒற்றுமை உண்டு..

உஸ்………. அப்பா………
இரண்டுமே ரொம்ப ஹாட்!!

 படம்


13 பின்னூட்டங்கள்

சில எண்ணங்கள் -41

ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்
பீஎம் பதவிக்கு பேர் இச்சை பலம்!

படம்

எனக்கு பிடிக்காதவற்றை யாரேனும்
என்னை வாங்க வற்புறுத்தும் போது
அவர்கள் மனது நோகாமல் நானும்
சாமர்த்தியமாக அந்த இக்கட்டில்
இருந்து தப்பித்து கொள்ள சொல்லும்
பொறுத்தமான பொய்களில் ஒன்று..
‘என் கணவரிடம் கேட்காமல் நான்
எந்த ஒரு முடிவும் எடுப்பதே இல்லை..’

படம்

இப்பவே மனதில் உள்ளதை
சொல்ல நினைத்து முதலில்
ஒரு ஆச்சரிய குறியோடு
ஆரம்பித்து பின் இமைகள்
படபடக்க மூச்சுவிட கூட
மறந்து அருவியாய் வார்த்தைகளை
கொட்டி இடை இடையே காற்புள்ளி
அரைபுள்ளி சேர்த்து ஆங்காங்கே
பொறுத்தமான முகபாவங்கள்
காட்டி கடைசியில் ஒரு கேள்வி
குறியோடு   முடித்து விட்டு
ஆர்வத்தோடு எதிரில் இருப்பவர்
சொல்ல போகும் பதிலுக்காக
அவர் முகத்தை ஏறிட்டு பார்க்க
அவரோ.. என்னது திருப்பி சொல்லு..
என்று சொல்லுவார் பாருங்க அது
தாங்க தாங்கவே முடியாத லொள்ளு!!

படம்

எதிரே இருந்த வீட்டுக்கு
புதிதாய் குடி வந்த பெண்
தன்னை சுய அறிமுகம்
செய்து கொள்ள வந்தார்..
அவருக்கு 5 குழந்தைகள்
என்று சொல்லி கொண்டு
இருக்கும் போதே மம்மி
என்று அவரது 2 வயது
குழந்தை துள்ளி குதித்து
ஓடி வந்தது..
மம்மியா… நான் டீவீயில் Santoor
சோப் Ad பார்த்த பொழுது
கூட இவ்வளவு அதிர்ச்சி
அடைந்ததில்லை ஏனெனில் என்
எதிரே நின்று பேசியது மம்மி
அல்லவே 55 வயது மாமி!!

படம்

பழைய பேப்பரை அடுக்கி
கட்டி வெளியேற்ற எத்தனிக்கும்
நேரம் தான் அதில் வந்த
பல சுவாரசியமான விஷயங்கள்
கண்ணுக்கு புலப்படும்!!

படம்

ஏதேனும் விபரீதம் நம்
வாழ்வில் நடைபெறும் வரை
அவை உலகத்தில் உள்ள யாருக்கோ
எவருக்கோ மூன்றாமவருக்கே
நடைபெறுபவை என்று நம்
மனது முழுமையாய் நம்புகிறது!!

படம்

அதிர்ச்சியான விஷயங்களை
யாருக்கேனும் சொல்ல முற்படும்
போதும் யாரேனும் நம்மிடம் சொல்லி
விட்ட போதும் ஏதோ உயரமான
மலை உச்சியில் பிராணவாயு
குறைவால் மூச்சடைத்து நிற்பது
போன்றதொரு பிரம்மையை
தவிர்க்க இயலாது!!

படம்

என்னதான் நமதே நமதாக
இருந்தும் உள்ளிருக்கும்
சந்து பொந்து மேடு பள்ளம்
லொட்டு லொசுக்கு என்று
அத்தனை அந்தரங்களை
அறிந்திருந்தும் வெளியில்
சென்று விட்டு வீட்டு வாசலை
அடைந்தவுடன் பொறுமையாக
சிறிது நேரம் மீன் பிடித்த
பிறகே அகப்படுகிறது
சாவி என் கைபையினுள்ளே!!

படம்

‘ஆ….’ எவ்வளவு பெரிய மாத்திரை
என்று வாயை பிளக்காதீர்கள்
ஜஸ்ட் இரண்டு மாத்திரைகள் தான்..
தமிழ் இலக்கணம் அறிந்தவர்களுக்கு
மட்டும்!!

படம்


17 பின்னூட்டங்கள்

உஷ்!! இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..

படம்

கண்டிப்பா இது ரகசியம் இல்லை.. யாரை பற்றிய கிசுகிசுவும் இல்லை.. எப்படி முதல் காதல், முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் இதெல்லாம் எப்படி நீங்காமல் மனதில் இருக்குமோ அப்படி தான் இந்த முதல் ஹிஸ்ஸும்.

அப்போ எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன்! எப்பவும் போல் ஸ்கூல் விட்டு வந்து முகம் கழுவி விட்டு, உடை மாற்றி விட்டு வழக்கம் போல் விளையாட கிளம்பினேன். வாசலை விட்டு இறங்கி ஒரு 10 அடி எடுத்து வைப்பதற்குள் ஏதோ ஒரு மெல்லிய கயிறு கண்ணில் தென் பட்டது. அதை தாண்டி செல்ல முற்பட்ட போது தான் முதன் முதலில் அந்த ஹிஸ் சத்தம் காதில் விழுந்தது. விருட்டென்று கயிறு தன் தலையை தூக்கிற்று! எனக்கோ தூக்கி வாரி போட்டது பின்னே கயிறு எங்கேயாவது தலையை தூக்குமா?? ஆமாம் அது பாம்பு தான்.. இப்போ நினைத்தாலும் அடி வயிறு கலங்கும் எனக்கு. நான் வீல் என்று அலறிய அலறலில் ஒரு நான்கைந்து பேர் ஓடி வந்து அந்த பாம்பை அடித்து கொன்று போட்டனர். நான் வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால் என்னை கண்டதற்கு அந்த பாம்பு தான் அழுதிருக்கனும் தேவை இல்லாமல் நான் அழுது கொண்டிருந்தேன். பாவம் என்னால் அது தன் உயிரை விட்டது!

அதன் பிறகு நெடுநாள் எந்த ஒரு பாம்பும் என் கண்ணில் சிக்க வில்லை! பிறகு புது வீடு கட்டி குடி ஏறினோம். வீடு இருந்த இடம் ஒரு குளத்தாங்கரை. நின்னா பாம்பு, நடந்த பாம்பு.. ஒரே பாம்போ பாம்பு!! அடிக்கடி பாம்பு என் கண்ணில் தட்டு பட்டு அடி வாங்கும். நேரில் பார்த்தது பத்தாதென்று கனவிலும் கூட.. ஒரு முறை தோழிகளுடன் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது யாரோ ஒருவர் கண்ணில் பாம்பு தட்டு பட அவள் பாம்பு.. பாம்பு.. என்று கத்த ஆரம்பித்து விட்டாள். எல்லோரும் திசைக்கு ஒன்றாக ஓடினோம்.. என் நேரம் நான் பாம்பு வந்த திசையிலேயே ஓடி அதை லாங்க் ஜம்ப் செய்து தாண்டினேன். நல்ல கறுத்த பாம்பு.. இதை தான் ஓடுற பாம்பை தாண்டுற வயது என்று சொல்வாங்களோ??

இப்படி ஓயாமல் பாம்பு கண்ணில் படுதே என்று என்னை சங்கரங்கோவில் கூட்டி சென்று அங்கே கோவிலில் இருந்த புற்றுக்கு பரிகாரமாய் என் கையால் பால் ஊற்ற செய்தார்கள். அதன் பின் வீட்டு முற்றத்தில் ஏதோ ஒரு செடியையும் நட்டு வைத்தார்கள். அந்த செடியின் வாசனைக்கு பாம்பு உள்ளே நுழையாதாம்! அருகில் உள்ள வீட்டில் கோமதி அம்பாள் படத்தை வீட்டின் முன்னே மாட்டி வைத்திருந்தனர் இதே காரணத்துக்காக. இருந்தாலும் அது வந்த வண்ணம் போன வண்ணம் தான் இருந்தது. அதற்காக எங்கள் வீட்டு தோட்டத்து பின் சுவற்றில் ஒரு ஓட்டை செய்து வைத்தோம்.. தெரியாமல் ஏதேனும் உள்ளே வந்து விட்டாலும் அதுவே வெளியே போய் விடட்டும் என்பதற்காக!

ஒரு முறை ஸ்கூலில் இருந்து நான் வீட்டுக்கு வரும் அதே நேரம் ஒரு பாம்பும் எங்கள் வீட்டு வாசல் அருகில் வந்து கொண்டிருந்தது. அது என்னை பார்த்து பயந்து வீட்டு தோட்டத்தினுள் நுழைந்து விட்டது. சும்மா சொல்ல கூடாதுங்க அது அழகோ அழகு. நல்ல மஞ்சள் நிறத்து பாம்பு, உடம்பெங்கும் அழகாய் தீட்டியது போல் கறிய நிறத்தில் வரிகள். அப்பப்பா.. என்ன வேகம் அழகாய் கொய்யா மரத்தில் ஏறி பின் வீட்டு வெளி சுவற்றில் ஏறி போயே போய் விட்டது. முதன் முறையாய் பாம்பை கண் கொட்டாமல் ரசித்தது அதுவே முதல் முறை.

நெல்லிக்காய் மரத்தின் இலைகள் அனைவரும் அறிவர். என்ன ஒரு அழகு பச்சை. அதே பச்சை நிறத்தில் தான் பச்சை பாம்பும் இருக்கும். நிறைய தடவை அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். கண்ணை மூடி கொண்டு ஓடி வந்து விடுவேன். சீ.. சீ.. வெட்கம் எல்லாம் இல்லை..அது நம் கண்ணை பார்த்தால் பாய்ந்து வந்து புடுங்கிடுமாமே.. யார் கண்டார்கள் அது நிஜமோ பொய்யோ?? ரொம்பவே பயந்து போனதொரு தருணம் சேரன்மஹாதேவி ஊரில் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது தான். நட்ட நடு ஆற்றில் நின்று கொண்டிருக்கும் போது எவரோ ஒருவர் பாம்பை பார்த்து கத்தி விட்டு ஓடி விட்டர். என்ன செய்வது, எங்கே ஓடுவது? திரும்பிய திசை எல்லாம் தண்ணீர் அலைகளோடு! அது எங்க வருது என்று யாருக்கு தெரியும். கண்கள் இருட்டி கொண்டு வந்தது, பின்னே பயத்தில் சிக் என்று கண்களை மூடி கொண்டு ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நின்றேன் என்று எனக்கே தெரியாது. நல்ல வேளை அன்று மீன்கள் எதுவும் வந்து காலை கடிக்க வில்லை.. இல்லை அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்கே தெரியாது!

இந்த பாம்பு பயத்தை மேலும் அதிகமாக்கியது நீயா படமும் நானே வருவேன் படமும்! இந்த நல்ல பாம்பு கண்ணில் பட்டு அடி பட்ட நேரமெல்லாம் பயந்து போய் விசாரிப்பதுண்டு.. அதை நல்லா குழி தோண்டி புதைச்சாச்சு இல்ல?? இல்லாட்டி அதோட ஜோடி இச்சாதாரி பாம்பு வந்து பழி வாங்கி விடும் என்பது ஐதீகம்!! கடைசியாக பாம்பை நான் பார்த்தது நான் படித்த கல்லூரிக்கு செல்லும் வழியில். அதன் பெயர் தெரியவிலை. நல்ல சரட் சரட் என்று சுத்து சுத்தென்று சுத்தி வந்தது தன்னை தானே. அதன் வாலடியில் ஒரு மணி வேறு. அதை அடித்து சத்தம் வர வைத்து அருகில் வந்த என்னை எச்சரிக்கை செய்தது. எவ்வளவு நல்ல குணம் இல்ல இந்த பாம்புகளுக்கு! நாம் துன்புறுத்தினால் அன்றி நம்மை அது எதுவும் செய்யாது!!