எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


5 பின்னூட்டங்கள்

இனிப்பு மீன் குழம்பு

     தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம், இது ஒன்றும் இந்த குழம்பை எப்படி வைப்பது என்று விளக்கும் உரை அல்ல! மீன் குழம்பு வைப்பது என்ன சீம வித்தையா, என் கடை குட்டி பையனை சமாளிப்பது  தான் எனக்கு சீம வித்தை!  அதுவும் விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம், என்னை ஒரு வழி பண்ணிடுவான்! எந்த வேலை வீட்டில் நடந்தாலும், நடக்காவிட்டாலும், சமையலை முடித்துதானே ஆக வேண்டும்! அவனை சமாளிபதட்காகவே சமயலறையில் சிலவற்றை  வைத்திருப்பதுண்டு!  அவற்றில் முதன்மையானது அல்பன்லீபே லாலிபாப்! அதை கையில் கொடுத்தால் ஒரு அரைமணி நேரம் சில வேலைகளை முடித்து விடலாம்! சில நேரங்களில், அந்த லாலிபாப் அவன் கைகளை விட்டு நழுவி கீழே விழுந்து உடைந்து இரண்டாக பிளந்து விடும்! வீல் என்ற சப்தத்துடன் பைய்யன் ஓடி வருவான், ‘அம்மா இதை ஒட்டி தாருங்கள்’!!!  ஒருவாறு அவனுடைய அழுகையை நிறுத்தி, அவனை  சமாளிபதட்காகவே வைத்திருக்கும் இரண்டாவது யுத்தியான கல்கண்டை தருவேன், அதுவும் ஒரு கிண்ணம் நிறைய! கல்கண்டை பார்த்து மயங்காத பிள்ளைகளும் உண்டா என்ன!  ஒரு ஸ்பூனையும் , இன்னொரு கிண்ணத்தையும் எடுத்து கொண்டு விளையாட ஆரம்பித்து விடுவான்!  நானும் அந்த நேரத்தில் ஒருவாறு மீன் குழம்பை வைத்து முடித்து, சாப்பாடு மேசையில் கொண்டு போய் வைத்தேன்! அவன் கல்கண்டை ஒரு கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணத்துக்கு மாற்றி, ஸ்பூனால் கிண்டியும் விளையாடி கொண்டிருந்தான்!  அப்பஅப்ப அம்மா அம்மா என்று அழைத்து கொண்டே இருப்பான், நானும் ஒவ்வொரு தடவையும் என்னம்மா என்று பதில் கூறினால் தான் திருப்தி அடைவான்! ஒருவாறு வேலையை  கிட்டதட்ட முடித்து விட்டு , சிதறி கிடக்கும் கல்கண்டை அள்ள சென்றேன்! எப்பொழுதும் சிதறிய கல்கண்டுகள் பாதத்தை பதம் பார்க்கும் , ஆனால்  வழக்கத்துக்கு மாறாக ஒன்று இரண்டை தவிர , கல்கண்டுகள் தட்டு படவே இல்லை! பைய்யன் சாப்பிட்டு விட்டான் போல! பிறகு அவனை சாப்பிட வைத்து தூங்கவும் வைத்தேன். வெளியே சென்றிருந்த என் கணவரும், வீடு வந்து சேர்ந்தார்! நான் அவருக்கு  சாப்பாட்டை பரிமாறி விட்டு பக்கத்தில் அமர்ந்தேன்! என்னை ஒரு முறை முறைத்தவாரே சாப்பிட்டு முடித்தார்! எனக்கு ஒரு பழக்கம், எப்போ எதை சமைத்தாலும் , நன்றாக இருக்கிறதா என்று டேஸ்டு பார்க்கவே மாட்டேன், அவ்வளவு நம்பிக்கை , நான் செய்யும் சமையலின் மேல்! இன்னிக்கு என்ன ஆச்சு, என்று நினைத்தவாறே சாப்பிட அமர்ந்தேன், ஒரு வாய் சோற்றை வாயில் வைத்தவுடன் தான் புரிந்தது, பைய்யன் தன் கைவரிசையை காட்டி இருந்தான், மீன் புளிகுழம்பு கல்கண்டு புளிகுழம்பு ஆக மாறி இருந்தது!!!!!!!!!