
நான் பிறந்த ஊர், சிறுமலை அடிவாரத்தில் அமைய பெற்ற அழகிய ஒரு கிராமம்! ஊரின் பெயர் சாணார்பட்டி! திண்டுக்கலுக்கும், நத்தத்துக்கும் இடை யே அமையப்பெற்ற ஒரு ஊர்! எனது பள்ளி விடுமுறைகளை இந்த கிராமத்தில் தான் மிகுந்த மகிழ்ச்சியோடு களித்திருக்கிறேன்! ஓரு மாரியம்மன் கோவில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், ஒரு தபால் நிலையம், ஒரு வங்கி, ஒரு காவல் நிலையம், ஒரு ஹோட்டல், மூன்று பல சரக்கு கடைகள், ஒரு காய்கறி கடை, சில மட்டன் கடைகள், ஒரு சலூன்,ஒரு சைக்கிள் கடை, ஒரு கம்பௌண்டர்(டாக்டர் எல்லாம் கிடையாது), ஒரு ஆரம்ப பள்ளி கூடம், சில வீடுகள், தோட்டம், துரவு, இவைதான் சாணார்பட்டி! எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் ஊர்!
எனது தாத்தா இந்த ஊரில் ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார்! ஊர் மக்கள் அனைவரும் அதை மிகுந்த பிரியத்தோடு அண்ணாச்சி கடை என்றே அழைப்பார்கள்! எனது அம்மாவுடன் கூட பிறந்தவர்கள் நான்கு பேர்! அதனால் எப்பொழுதுமே, கொண்டாட்டத்திற்கு குறைச்சல் இருந்தது இல்லை! அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, மாமா பசங்க என்று பெரிய பட்டாளமே இருக்கும்! சாப்பாடு நேரம் தவிர, மற்ற நேரம் ஊர் சுற்றுவதிலேயே காலம் ஒடிவிடும்! எங்கள் தாத்தாவுக்கு சொந்தமாக ஒரு பெரிய தோட்டம் இருந்தது! அதில், ஒரு பெரிய கிணறு, நிறைய தென்னை மரங்கள் , ஒரு பெரிய பலா மரம், ஒரு அரை நெல்லிக்காய் மரம், ஒரு பிள்ளையார் கோவில், ஒரு முருகன் கோவில், ஒரு செம்பருத்தி பூ செடி, ஒரு செவ்வரளி மரம்! இந்த தோட்டத்தை கவனித்து கொள்ள மாணிக்கம் என்பவரை எங்கள் தாத்தா நியமித்து இருந்தார்கள்!
தோட்டத்தின் நடுவே அமையப்பெற்ற பெரிய கிணற்றில், ஊர் மக்கள் அனைவரும் தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதி கொடுத்து இருந்தார்கள்! நீரை இரைக்க ஒரு பம்ப் செட்டும், கிணற்றை ஒட்டினால் போல், ஒரு பெரிய தொட்டியும் இருக்கும்! எனக்கு அந்த கிணற்றை எட்டி பார்த்தாலே, தலை கிறுகிறுத்துவிடும்! நான் ஒரு பத்து அடி தள்ளி நின்றே எல்லாவற்றையும் கவனிப்பேன்! தண்ணீர் பாய்ச்சும் நேரம், ஓடம் போல இருக்கும் தென்னை மட்டையை, ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை ஏந்தி கொண்டு, தண்ணீர் பாய்ந்து ஓடும் வரப்புக்குள் நாங்களும் பாய்ந்து ஓடுவோம்! யாருடய ஓடம், கடைசி வரை சிக்காமல் ஓடுகிறது என்று பந்தயம் வைப்போம்! சில நேரம் மகிழ்ச்சியாகவும், சில சமயம் சண்டையிலும் முடியும்! இருந்தாலும் அடுத்த நாளும், அதே பந்தயம் நடக்காமல் இருந்ததில்லை!
தோட்டத்தின் உள்ளே, ஒரு கூரை வேயப்பட்ட ஒரு வீடு இருக்கும்! அதனுள்ளே சில சமயம், பட்டு பூச்சிகள் வளர்ப்பார்கள்! ஒன்றின் மேல் ஒன்று நெளிந்து கொண்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கும்! எனது உள்ளங் கையில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, இறக்கி விடுவேன்!
தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் காவல் நிலையம் மிக பிரம்மாண்டமாக, ஊரின் நடுவில் அமைந்திருக்கும்! அதை கடந்து செல்லும் போது நெஞ்சம் திக் திக் என்று அடித்து கொள்ளும்! அதற்கு பக்கத்தில் ஒரு மிக பெரிய புளிய மரம் இருக்கும்! காலையில் அந்த வழியாக சென்றால் பயம் இல்லாமல் புளி பறித்து உண்போம்! காயாக இருக்கும் புளி மிக சுவையாக இருக்கும்! உச்சி வெயில் பொழுதில் அந்த வழியாக வந்தால், மரத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒடியே வந்து விடுவேன்! காரணம் புளிய மரத்தில் அந்த நெரங்களில் பேய் அமர்ந்திருக்கும் என்று என் தோழி ரூபா கூறுவாள்! அந்த ஊரில் என் ஒரே பெண் தோழி அவள்தான்! அவளை போல் பொறுமைசாலியை நான் பார்த்ததே இல்லை!
மதியம் அவ்வளவாக வெளியே செல்வதில்லை, வீட்டின் பின்னே இருக்கும் சூடு போட்டான் காயை பறித்து, அதை கட்டாந்தரையில் போட்டு நற நற வென்று தேய்த்து, யார் அகப்படுகிரார்களோ அவர்களுக்கு சூடு வைப்போம்! அந்த விளையாட்டு போரடித்தவுடன், மாடிக்கு சென்று விடுவோம்! மொட்டை மாடியில் கூரை வேய்ந்த்திருப்பார்கள்! நல்ல குளு குளுவென்று இருக்கும்! அதில் ஒரு குதிரையை, அதாங்க, உயரத்தில் ஏறுவதற்கு பயன் படுத்துவார்களே, அதுவே தான்! அதை பஸ் ஆக பாவித்து விளையாடுவோம்! அதில் எதாவது ஒரு மூலையில் தேனி கூடு கட்டி இருக்கும்! ஒரு நாளைக்கு ஒன்று,இரண்டு பேராவது அதனிடம் கடி வாங்காமல் இருந்ததில்லை! கடி வாங்கியவர் அழுது கொண்டே, வீட்டினுல் சென்று அதற்காகவே ஸ்பெசலாக வாங்கி வைக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பை எடுத்து போட்டு விட்டு திரும்பவும் விளையாட வந்து விடுவார்கள்!
மாடி விளையாட்டும் போரடித்தால் இருக்கவே இருக்கிறது, தாத்தாவின் கடை, உள்ளே சென்று விட்டால் அது தனி உலகம்! சிறிய ஏணி ஒன்று மேலே அழைத்து செல்லும், நிறைய கதை புத்தகங்கள் நிறைந்து இருக்கும்! அவற்றின் ஒவ்வொரு பக்கங்களும் பொட்டலம் போடுவதற்காக காத்து கொண்டிருக்கும்! பசித்தால் தின்பதற்கு ஒரு டின் நிறைய வறுத்த கடலை பருப்பு ரெடியாக இருக்கும்! ஒரு சின்ன இடைவெளி வழியாக வெளிச்சமும், சிறிது காற்றும் வரும், முடிந்த வரை அங்கே நேரத்தை ஓட்டி விட்டு, சாயுங்காலமாய் வீடு வந்து சேர்வோம்!
அதன் பின்பும் எங்கள் கூத்து அடங்கிவிடாது, அடுத்து இரவு சிற்றுண்டியை முடித்து விட்டு, எங்கள் மாமாவின் திரை அரங்குக்கு கிளம்பி விடுவோம்! இது எங்கள் ஊருக்கு அடுத்த ஊரான கொசவபட்டியில் அமைந்திருந்தது! என்ன படம் ஓடினாலும் எங்கள் மாமாவுடன் கிளம்பி விடுவோம்! போனவுடன் அங்கே உள்ள கடையில், கிடைக்கும் அத்தனையையும் ருசி பார்த்து விட்டு, படம் பார்க்க ஆரம்பிக்கும் போது 7 மணி ஆகிவிடும்! படம் ஆரம்பித்த அரை மணி நேரத்துக்குள் எங்களுடன் வந்த பாதி பேர் படுத்து உறங்கி விடுவர்! பின்பு படம் முடிந்தவுடன், எல்லாரையும் எழுப்பி விட்டு, வீட்டுக்கு நடக்க ஆரம்பிப்போம்! ஊராரோடு சேர்ந்து நடந்தால் தான் உண்டு, இல்லையேல் சிறிது பயமாகதான் இருக்கும் அவ்வழி! மின்னல் வேறு அப்ப அப்ப வெட்டி சிறிது வெளிச்சத்தை காட்டும்! இடை இடையே பூச்சிகளின் சத்தம் வேறு! எப்படியாவது தட்டு தடுமாறி வீடு வந்து சேர்ந்து விடுவோம்!
ஓவ்வொரு நாளும் இதே கதைதான்! ஊருக்கு திரும்பும் நாளில் அழாமல் கிளம்பியதே இல்லை! இப்பொழுது அங்கே செல்லும் பொழுது, எனது கண்கள் எனது பழைய ஊரை தேடி தேடி ஏமாறுகிறது! நான் ரசித்த இடங்கள் அத்தனையும் மாறி போய் இருக்கிறது! மாறாமல் இருப்பது என் மனதினுள் பதிந்த என் நியாபகங்கள் மட்டுமே!