யாரும் எகிறி குதித்து அடித்து
விட நான் உறி அல்ல….
நூல் இழைகளை கொடுத்தவுடன்
துணி நெசவு செய்ய நான் தறி அல்ல..
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து
கேட்ட வரம் அருள நான் பரீ அல்ல..
என் பகுத்தறிவுக்கு சரியென தோன்றும்
வழி நடப்பதே என் வாழ்க்கை நெறி!
நானும் என் கணவரும்
ஒற்றுமையாய் செயல்படும்
விஷயங்களில் ஒன்று ..
மெகா ஆபர் போடும் மெகா
மால்களில் முதல் ஆளாய்
நுழைந்து ரொம்ப பொறுமையாய்
நிதானமாய் காம்போ ஆபர்களாய்
பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து
தள்ளு வண்டியை நிரப்பி
தள்ள முடியாமல் தள்ளி
பில் கவுன்டர் வரை வந்து
அனுமார் வால் போல் நீண்டு
கொண்டே செல்லும் வரிசையை
பார்த்தவுடன் ஒரு ஓரமாய்
அந்த தள்ளு வண்டியை அம்போ
என்று விட்டு விட்டு வீட்டுக்கு
நடையை கட்டி விடுவோம்!!!
மாதுளம் பழம் உடைத்தால்
அதிலிருந்து முத்துக்கள் தெறிக்கும்
இதுவே வழக்கில் இருக்கும் பேச்சு…
ஆனால் உடைத்தவுடன் முகத்தில்
தெறித்து விழுவது என்னவோ
மாணிக்கங்களே….
இவ்வுண்மை யாவரும் உணர்ந்து
கொள்ள மட்டுமே… கெடுக என்
ஆயுள் என பாண்டிய மன்னன் போல்
யாரும் மயங்கி சரிய அல்ல!
ஏற்கனவே வீட்டு பராமரிப்பு தொகையை
உரிய தியதியில் கட்டிய பின்னரும் கூட
கட்டி விட்டீர்களா.. நாளை நாள் கடைசி என்று
வீட்டு பாதுகாவலர் அழைப்பு மணியை
அழைத்து கேட்டு விட்டு பின் நியாபகம்
வந்தவராய் சொல்லுவார்.. ஹி .. ஹி
மரச்சி போயி.. அவரு மறந்துவிட்டாராம்…
ஆனா உண்மையில் நான் தான் ஒரு நொடி
மரிச்சி போயி பயத்தில் ………
மழையில் பனிக்குழை
இனித்தது நேற்று
நாளை கசக்கும்
என்பதை அறிந்தும்!!
பசியோடு தட்டின் முன் அமரும்
குழந்தைகளுக்கு சுட சுட பரிமாறிய
பின்னே இன்னும் ரெண்டு தோசை போடு
இன்னும் கொஞ்சம் சட்னி போடுனு
சொன்னால் காதுக்கு எவ்வளவு இனிமையாக
இருக்கும்.. அதை விட்டுவிட்டு எனக்கு Doraemon
போடு என்று ஒருவன்.. எனக்கு சுட்டி டீவீ
ஜாக்கிசான் போடு இது இன்னொருவன்….
பையன் : அம்மா இன்னிக்கு பூஜை
என்பதால் Doraemon ஸ்பெஷல்
எபிசோடா போட்டு தள்ளுரான்
அம்மா : வரலஷ்மி பூஜைக்கும் Disney
சேனலில் Doraemon ஸ்பெஷல்
எபிசோடுக்கும் என்னடா சம்பந்தம்..
என்ன கொடுமை இது!
வெள்ளை நிற லெக்கிங்ஸ்
அணிந்து நடக்கும் பூவையர்
கால்களை நோக்கும் போதெல்லாம்
ஜகன் மோகினி பிசாசுகள்
அநியாயத்துக்கு நினைவில்
வந்து அச்சுறுத்துகின்றன!!
தெளிந்த பின்னே
மட்டுமே தெரியும்
இது நாள் வரை அடி
மனதில் எத்தனை
கசடுகள் என்று!!
ஒரு திசை காட்டும் கருவி
ஒரு பூத கண்ணாடி
ஒரு கையடக்கமான
தீவட்டி வெளிச்சம்
மகனே…. நீ பள்ளிக்கு வரலாறு
படிக்க செல்கிறாயா இல்லை
வரலாறு படைக்கவா?? MagneticPencilbox
நிலை தட்டுமேயானால் தலை
குனிந்து செல்வது உத்தமம்….
நிலை தட்டு தடுமாறினால்
தலை குனிவு நிச்சயம்..
இன்றாவது தன் மனதில்
உள்ளதை வாடிக் கிடக்கும்
பூமியிடம் கொட்டி விட
தீர்மானித்து மோடம் போட்டு
காத்து கிடக்குது வானம்!!
பயிரிட்ட பின்னே
விதை விதையாக
முழித்து கொண்டு
நில்லாமல் விளைந்து
நிற்பதே தானியத்தின் சிறப்பு….
அஃதே வயிறிடுவதற்கு முன்பும்!
நம்ம கிட்ட இருக்கிற
சிம்கார்ட கொண்டு போய்
ஏர்டெல்காரன் கிட்ட குடுத்தா
அதை வெட்டி மைக்ரோ சிம்கார்டா
ஆக்கி தருவானா அம்மா??
ஏலேய்.. அது என்ன ஆடா!
இல்லை.. சிம்கார்டா!!
இன்று அதிகாலை
நீ இருண்டு இறுக்கம்
கொண்டு என் மனதை
வானில் பறக்க விட்டு கண்கள்
பணிக்க செய்தது அத்தனையும்
நடிப்பா??????????
வருவது போல் வந்து பின்
வராது சென்ற மழை
வீர தீரமாய் சுழன்றடிக்கும் சார காற்றே
உன்னுள் ஈரம் இல்லாதவரை உள்ளம் மயங்காது
உடல் சோர்ந்த மயக்கம் மட்டுமே சாத்தியம்!
வெடிச் சிரிப்புடன் கைகளை
டாட்டா காட்டியவாரே வெளியே
ஓடும் குட்டி பையனை பிடிக்க பின்னங்கால்
பிடறியில் அவன் பின்னே ஓடுவாள்..
சற்று முன்னே அவன் சேட்டை
தாங்காமல் தர தரவென இழுத்து
வீட்டின் வெளியே விரட்டிய தாய்..
ஒருவரை நம்பி கை கொடுப்பதை விட
நம்பிக்கை அளிப்பது சாலச் சிறந்தது!!
கவனிக்க மறந்து விடும் நேரங்களில் தனக்கு
தானே தூசியால் அரிதாரம் பூசி நம் கவனத்தை
கவர்ந்து விடுகிறது நம் வீட்டு சாமான்கள்!!
அடுத்தவர் பொருளை
ரசித்து நோக்குவது சலனம்
உரிமம் கொள்ள நினைப்பது சபலம்..
என்னது.. வராமல் வந்த
மாப்பிள்ளை என்ன குறையை
கண்டுவிட்டார் என்று இப்படி
முறுக்கி கொண்டு ஓடுகிரார்!
என் துணிகளை எல்லாம்
இன்றாவது வாழ sorry காய
வைத்துவிடலாம் என்று பார்த்தால்
ஒன்றும் நடக்காது போலையே..
மேகங்களின் பின் ஒளிந்து
கொள்ளும் மழை காலத்து சூரியன்!!!
கடல் மாதிரி வீடு என்ற
ஆசை வார்த்தையை நம்பி
மோசம் போய் விடாதீர்கள்
அங்கே வேலைகள் ஓய்வதில்லை!!
இந்த பல்லும் ஒரு நாள்
சூத்தையாகும் என்பது
தெரிந்த ஒரு விஷயம் தான்..
அதுக்காக விழுந்து விழுந்து
இரண்டு வேளை பல்லை தேய்க்கனும்
ரூட் கேனால் பண்ணனும்
ஸ்டெம் கேனால் பண்ணனும்
அப்படியெல்லாம் எந்த ஒரு
அவசியமும் இல்லை
.
.
பூண்டு பல்!!
இன்று ஒரு பூனை
அது வசிக்கும் வீட்டினுள்
இருந்து வெளியே கிளம்ப
எத்தனிக்கையில் நான் குறுக்கே
வந்துட்டேன், இந்த சகுனம்
நல்லதா கெட்டதா பூனைக்கு!!
கோதுமை மாவை
தண்ணீர் விட்டு பிசைந்து
உருண்டைகள் இட்டு
அதை கல்லில் போட்டு
வட்டமாக தேய்த்து
எண்ணெய் காய்வதற்கு
முன்பே பூரிகள் இட
முயற்சித்தால் உங்கள்
மூளை இன்னும் சரி வர
காய ஆரம்பிக்கவில்லை
என்று அர்த்தம்!!
இருக்கலாம்.. முன் ஜென்மத்து பந்தமாய் என் தர்ம பத்தினியாய் பின்னே எவ்வளவு தான் கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் பார்த்தும் பார்க்காமலும் இருந்தாலும் சற்றும் சளைக்காமல் சல சலவென சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுவதும் நிமிஷத்துக்கு ஒரு முறை குறுஞ்செய்திகளை அனுப்பியும் உயிரை எடுப்பதேனோ . . . விட்டு தொடரும் பந்தம் Airtel!!
அது ஒரு நடு நிசி நேரம் சோவென்று கொட்டியது மழை இரவை பகலாக்க முயன்று தோற்ற மின்னல்கள் இருட்டிலே துலாவிய கைகள் பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகம் அலம்ப நினைத்து முடியாமல் பச்சை பொத்தானை அவசரமாக அமுத்த அய்யோ…………. என்று அலறியது உள்ளம் டேங்கில் தண்ணீர் ‘காலி’யானது மட்டுமல்லாமல் மோட்டரும் அநியாயமாய் தன் உயிரை விட்டிருந்தது!!
துவையல் செய்வதற்காக கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா சம அளவு எடுத்து சுத்தம் செய்து வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து போட்டு அது பொன்னிறமானவுடன் காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய் கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு எலுமிச்சை அளவு புளியும் போட்டு வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை அதில் போட்டு வதக்கும் போது எழும் சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில் அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!
10 பைசா 10 பைசாவாக திருடும்
மானங்கெட்ட திருடன்….
முழுதும் திருடி விட்டு சொல்வான்
.
.
.
More Than full talktime only for you!
AIRTEL!!
நாள் பூரா
விடாமல் லைட்டா
வயிறு பசித்து
கொண்டே இருந்தா..
உங்க ஊருல
விடாம மழை
வெளுத்து வாங்குதுனு
அர்த்தம்!!
பார்த்து பார்த்து
பொறுமையாய்
காம்போடு பிய்க்க
நினைத்த அந்த ஒரு
வாழைப்பழம் தவிர
இழுத்த இழுப்பில்
சீப்பில் உள்ள
மற்ற அனைத்து பழமும்
காம்பில்லாமல் அறுந்து
விழுந்தா கண்டிப்பா
நினைக்க தோணும்
நமக்கு மட்டும் ஏன்
இப்படி எல்லாம் நடக்குதுனு!!
மழையும் பாரதிராஜா படமும்
ஒன்னு தான்..
ஆரம்பத்தில் மண் வாசனையோடு
நம்மை வசீகரித்தாலும்
போக போக இல்லாத
துர்நாற்றத்தை எல்லாம்
கிளப்பி விட்டு
பெஞ்சு முடிஞ்சா தேவலை
என்று நினைக்கும் அளவுக்கு
நம்மை ஓட ஓட விரட்டும்!!
சிக்கனம் பற்றி, அவ்வப்பொழுது யோசித்தாலும், மனது அலெர்ட் , ஆவது என்னவோ, பொருள் காலியாக, போகவிருக்கும், கடைசி தருணத்தில், மட்டும்தான்!!!
சில்லுனு ஒரு காற்று, இதமான தூறல், ஈரமான செடிகள், ஒளி வெள்ளத்தில், சிகப்பு, பச்சை, மஞ்சள், பர்பிள் என, கலர், கலராய், மனம் மயங்க , கண்கள் கூச, கால்கள் மட்டும், சதக் சதக் என்று, சொருகி கொண்டே வந்தது , புதை மணலுக்குள் ….. . . . மழை கால , மாலை நேர காய்கறி சந்தை!!!!
நம்ம எதிர்ல யானை, பல்லி , இதுல எது குடு குடுன்னு, ஓடி வந்தாலும், நமக்கு திக்கு திக்குன்னு இருக்கும், ஏன் தெரியுமா….?? . . . யானை நம்மை மிதித்து விடுமோ, இல்லை பல்லியை நாம மிதித்து விடுவோமோ என்று!!!
ரண்டி, கூச்சுண்டி, பாவனார, சொன்னத கேட்டு, ஓவர் excite ஆன neighbour, கட கடனு, புரியாத தெலுங்கில் பேச, ஹி ஹி! தெலுங்கு தெலுதி(தெரியாது )!!!! இதுக்கு ஒழுங்கா, வாங்க, உட்காருங்க, நல்லா இருக்கீங்களானு, பேசி இருந்திருக்கலாம்!!! — feeling meh at Kothapet, Guntur.
இன்னிக்கு வேற வழியே இல்ல.. வெங்கயபாலுவை, கூண்டோட, காலி பண்ணிட வேண்டியது தான்! அதை கண்டந்துண்டமா வெட்டி, . . . . எனக்கு அத வச்சி பண்ண தெரிஞ்ச, ஒக்கே ஒக்க recipe… எண்ணெய் கத்திரிக்காய செஞ்சிட வேண்டியதுதான்!!
இது சரியில்லை, அது சரியில்லை, கலர் நல்லா இல்லை, Tom & Jerry படம் போட்டிருக்கணும், இப்படி, தேடி தேடி, வாங்கிய, காலணிகளை,அணிந்து, அழகு பார்த்த எங்கள்குட்டி பையன், கடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி, தன் காலணியின் அழகுக்கு, மேலும் அழகு சேர்த்தான், ஆங்காங்கே தேங்கிய மழை நீர் குட்டைகளில், ‘சளக்..சளக்..’ என்று குதித்தபடி!!!
பக்கத்து வீட்டு பசங்களோட , வெள்ளை சட்டை, காக்கி பேன்ட், பள்ளி சீருடையை பார்த்து விட்டு, நல்ல வேளை நம்ம பசங்களுக்கு, நல்ல டார்க் கலர் சட்டை, என்று மனதில் நினைத்த அடுத்த நொடி, திரு திரு வென்று முழித்தபடி வந்தான் பையன், தன் grease கறை படிந்த கிரீம் கலர் shorts உடன்!!!
அது ஒரு இரவு நேரம், மணி சரியாக, 8:30, நித்யா, அவள் பெற்றோர், அவளோட பசங்க, எல்லாரும் ரெடியாக, கார் சீறி கொண்டு கிளம்பியது! கிளம்பிய பத்து நிமிடம் வரை எல்லாம் நினைத்த மாதிரி தான் நடந்து கொண்டிருந்தது! நித்யாவின் கண்கள் அவ்வப்பொழுது ஸ்பீடோ மீட்டரை பார்த்த வண்ணம் இருந்தது! முள், 40க்கும் 50க்கும் இடையே அல்லாடி கொண்டிருந்தது, அவள் மனதை போல! முள் 50ஐ தொட முயன்று முயன்று தோற்று போனது! நித்யாவுக்கு, ஸ்பீட் படம் சம்பந்தம் இல்லாமல் நியாபகம் வந்தது!
7 நாளாக இப்போ பெய்யரேன், அப்போ பெய்யரேன்னு ஏமாற்றி கொண்டிருந்த மழை , அந்த நிமிடம் சோ வென்று பெய்ய தொடங்கியது! காற்றுடன் கூடிய பெரிய மழை! சாதாரணமான நாட்களில், நித்யா மழையின் பெரிய ரசிகை! ஆனால், அன்று அவள் மேல் தெறித்த ஒவ்வொரு மழை துளியும் எரிச்சலை கிளப்பியது! அவசர அவசரமாக, கார் கதவின் கண்ணாடியை ஏற்றி விட்டாள்!
அமைதியான கடல் போல ரொம்ப தெளிவாக இருந்த அவளது உள்ளம், அந்த நிமிடங்களில்,சூராவளியில் சிக்கி கொண்ட படகு போல் ஆனது! எவ்வளவு மனதை கட்டுப்படுத்த முயன்றும், முடியாமல் தோல்வியை தழுவினால் நித்யா! ஸ்பீடோ மீட்டரையும், கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள்! கார் மழையின் சீற்றம் தாங்காமல், நத்தையை விட வேகமாய், ஆமையை விட சிறிது வேகத்தில் கம்மியாய் ஊர்ந்து கொண்டிருந்தது! முள் இப்போது 20 ஐ தொட்டு கொண்டு இருந்தது! கிளிஞ்சது போ, என்று நித்யாவின் மனம் அங்கலாய்த்தது! ஒரே டென்ஷன் அவளுக்கு! சரியாக, 9:50 க்கு அவள் நினைத்தது நடக்க வில்லை என்றால், நினைக்கும் போதே நித்யாவின் மனம் பதறியது!
இந்த நாளுக்காக நான்கு மாதம் முன்பே ப்ளான் செய்திருந்தாள் நித்யா, இன்று மட்டும் நினைத்தது நடக்க வில்லை என்றால், என்ன செய்வது, இரு குழந்தைகளை வைத்து கொண்டு, நினைத்து பார்த்தாலே பயமாக இருந்தது நித்யாவுக்கு! மணி இப்போது சரியாக 9:05, இன்னும் 45 நிமிடங்களே பாக்கி இருந்தது! காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில், மழை தன் கோடாணு கோடி கைகளை விரித்து பெய்து கொண்டிருந்தது!
சாலைகள் எல்லாம் நீரினால் சூளப்பட்டு, கார் ஏறக்குறைய சாலையில் மிதந்துக் கொண்டிருந்த்து! வெளியில் கும்மிருட்டு, கரண்ட் வேறு இல்லை, டிரைவர் அப்ப அப்ப ஒரு துணியினால் கண்ணாடியை துடைத்து கொண்டே வந்தார்! மின்னல் பேய் அவ்வப்பொழுது தன் முகத்தை காட்டி பயமுறுத்தியது! என்ன நடந்தாலும், சரியாக பத்து மணிக்கு அவர் ஃபோன் பண்ணுவார், என்ன பதில் சொல்ல என்று நினைத்த பொழுது, நித்யாவின் அடி வயிரு சற்றே கலங்கியது! நாக்கு பயத்தில் வறண்டு போய் இருந்தது, நித்யா தன் கை பைய்யில் இருந்து, தண்ணி பாட்டிலை திறந்து சிறிது தண்ணீரை ஒரு மிடறு விழுங்கினாள், தொண்டை வலித்தது! முந்தைய நாள், ருசித்த குல்பி ஐஸ் தன் வேலையை காட்டி இருந்தது!
அவருடைய முகம், அடிக்கடி அங்கும் இங்கும் மாய் தெரிந்து கொண்டே இருந்தது! பயத்தில் நித்யாவின் துடிதுடித்த இதயம், அவள் வாய் வரை வந்து விட்டிருந்தது! அவளைத் தவிர, அவளுடன் பிரயாணம் செய்யும் அத்தனை பேரும், இயல்பாகத்தான் இருந்தனர்! நித்யாவின் தகப்பனார், டிரைவருடன் தொண தொணவென்று பேசி கொண்டே வந்தார்! ‘ டிரைவர் தன் முழு கவனத்தோடு ஓட்டட்டும், சிறிது நேரம் அமைதியாக இருங்கள் அப்பா என்று கத்த வேண்டும் போல் இருந்தது நித்யாவுக்கு!
நித்யாவின் முதல் பையன் அடித்த காற்றுக்கும், கொட்டிய மழைக்கும் தூங்கியே விட்டான், அவளுடைய இரண்டாவது பையனுக்கு மூன்று வயது, அவள் மடியில் உட்கார்ந்து அரைத்துக் கொண்டே வந்தான்! அப்போ அப்போ எழுந்து, காரின் பின்னால் வந்த வாகனங்களின் ஹெட் லைட்டை பார்த்து இம்கி இம்கி என்று தன் கூசிய கண்களை சிமிட்டி சிமிட்டி விளையாடி கொண்டே வந்தான்! நித்யாவுக்கு அவனை பார்த்து, சிறிது பொறாமையாக கூட இருந்தது, தானும் சிறு பிள்ளையாகவே இருந்திருக்கலாம் என்று!
நித்யாவின் அம்மாவுக்கு அவளுடைய முகத்தை பார்த்து புரியாமல் இல்லை, ஏதோ டென்சனில் இருக்கிராள் என்று! அவளாகவே சொல்லட்டும் என்று அமைதியாக வந்தாள்! தான் நினைத்தது மட்டும் நடந்து விட்டால், பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக நித்யா மனமுருக வேண்டி கொண்டாள்!
ஒரு வழியாக ஊர்ந்து ஊர்ந்து, சரியாக மணி 9:40 க்கு வர வேண்டிய இடத்தை வந்து அடைந்தார்கள் நித்யாவின் குடும்பத்தினர்! இன்னும் பத்து நிமிடங்களிள் தான் நினைத்தது நடந்து விடும், என்று நித்யாவின் மனது குதூகலித்தது! லேசாக பெய்து கொண்டிருந்த சாரல் மழை , நித்யாவின் மனதை குளிர்வித்தது! இனி அவருடைய ஃபோன் காலை நினைத்து கவலை பட வேண்டியது இல்லை, மனது லேசாக இருந்தது நித்யாவுக்கு!
ஒலி பெருக்கியில் சொல்லி கொண்டு இருந்தார்கள், நித்யாவும் அவளுடைய குழந்தைகளும் ஏற வேண்டிய ரயில், 20 நிமிடம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது என்று! நித்யா தான் நான்கு மாதம் முன்பே ரிசர்வு செய்த டிக்கெட்டை எடுத்து ஒரு முறை கோச் நம்பரை சரி பார்த்து கொண்டாள்! சரியாக 10:00 மணிக்கு ஃபோன் செய்த கணவரிடம் சிறிது எரிச்சலோடு சொல்லி கொண்டிருந்த்தாள் நித்யா, ‘இன்னும் டிரெய்ன் ஏற வில்லை, வண்டி 20 நிமிடம் லேட்டாம்!’ அம்மா அப்பாவிடம் விடை பெற்று, சரியாக 10:20 க்கு தன் பசங்களோடு, அரை ஆண்டு விடுமுறையை கொண்டாடி முடித்த களைப்போடு டிரெய்னில் ஏறத் தயாரானாள் நித்யா!!