அதிகாலையில் கரண்ட் போய் விடுமோ என்ற பயத்தில் முந்தய நாள் இரவிலேயே சமையலுக்கு தேவையான இஞ்சி,பூண்டு உரித்து மிக்சியில் இட்டு அரைத்து அரைத்த விழுதை ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அதுவே . . மிட் நைட் மசாலா!!!
கொண்டைகடலை குழம்பு வைப்பதற்கு எண்ணையை காய விட்டு பெருஞ்சீரகம், கிரம்பு போட்டு பொறிந்தவுடன் வெங்காயத்தை ஒரே சீராக வதக்கி பொன்னிறமானவுடன் தக்காளி சேர்த்து அது வதங்கியவுடன் உப்பு, மசாலா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளறி அந்த கலவையில் சிறிது தண்ணீர் விட்டு கொண்டைகடலையை அதில் கொட்டியவுடன் கிளம்பும் நெடியில் நீங்கள் அச்சூ அச்சூ… என்று விடாமல் தும்மினால் சூடு தாங்க முடியாமல் கொண்டைகடலை உங்களை மனதார திட்டுகிரது என்று அர்த்தம்!!
இது என்ன தலைப்பு, என்று நினைக்க தோன்றுகிறதா?? நாற்றம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்று தெரியுமா? வாசம், மணம்….. ஆனால் இந்த வார்த்தையை உபயோக படுத்தும் ஒவ்வொருத்தரும், துர் நாற்றம் என்று குறிப்பிடாமல், நாற்றத்தையே துர் நாற்றம் ஆக்கி விட்டார்கள்! அது போகட்டும், நாற்றம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமானதொன்று!!
எனது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடி மன நிலையையும் தீர்மானிப்பது இந்த நாற்றம்! காலையில் எழுந்து செய்யும் தேனீருடன், கலந்து வரும் ஏலக்காய் வாசம், அன்றைய நாளின் உற்சாக தொடக்கத்துக்கு வழி செய்கிறது! தாளிக்கும் போது கமழும் கறிவேப்பிலையின் வாசம், பெருஞ்சீரகம், கிராம்பு இவற்றின் அடங்காத வாசம், ஊரை கூட்டும் கொத்தமல்லியின் வாசம், மயக்கும் புதினாவின் வாசம், நெய் உருகும் போது வரும் திணறடிக்கும் வாசம், நன்கு வெந்த கம்பு சாதத்தின் சூடான வாசம், எட்டு ஊரை கை தட்டி கூப்பிடும் மீன் குழம்பின் வாசம், கனிந்த மாம்பழத்தின் அலுக்காத வாசம், அவித்த பனங்கிழங்கின் தீராத வாசம், மழை வர போவதை அறிவிக்கும் மண் வாசனை, சிறு குழந்தைகள் மேல் அடிக்கும் வசம்பு, மஞ்சள், சந்தனம் கலந்த வாசம், ஜவ்வாதின் கூர்மையான வாசம்…………. இப்படி எனக்கு பிடித்த நாற்றங்களை சொல்லி கொண்டே இருக்கலாம்!
இதே நாற்றம், என்னை ஒரு கால கட்டத்தில் ஓட, ஓட விரட்டியதுண்டு!! எப்போனு கேக்கரீங்களா, என் முதல் குழந்தையை கருவுற்று இருந்த அந்த நேரத்தில்! மசக்கையாய் இருந்த அந்த மூன்று மாத காலத்தை மறக்கவே முடியாது என் மூக்கின் மோப்ப சக்தி, ஒரு பழக்கபடுத்தப்பட்ட காவல் நாயை விட ஒரு படி அதிகமாகவே இருந்தது! கிட்டதட்ட ஒரு கி.மீ சுற்றளவில் எழும் அத்தனை நாற்றங்களும் எனக்கு அத்துபடி!
நாங்கள் அந்நேரம் குடியிருந்த வீடு , ஒரு மிக பிரபலமான, தேங்காய் எண்ணெய் கம்பெனிக்கு சொந்தமான, எண்ணெய் மில்லுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது!எனக்கு சிறு வயதில் இருந்தே, காயும் தேங்காய் எண்ணெயின் வாடை ஆகவே ஆகாது! என்னுடைய அம்மா, ஒவ்வொரு முறை பூரி, வடை சுடும் பொழுது எல்லாம், நான் பறந்து வெளியில் ஓடி விடுவேன்! எண்ணெய் வாடை அடங்கும் வரை, என் தரிசனம் வீட்டில் காண கிடைக்காது!
இப்போ, அருகிலேயே, எண்ணெய் மில், தேங்காய் எண்ணெய் வாசத்துக்கு என்ன பஞ்சமா, புதன் கிழமைதோறும், காயும் தேங்காய் எண்ணெயின் வாசம், காற்றில் நிறைந்து குப்பென்று வீச தொடங்கி விடும்! ஏற்கனவே, மசக்கையில் இருந்த எனக்கு, அந்த நாற்றம், என்னை அந்த நாள் முழுவதும் படுத்த படுக்கை ஆக்கி விடும்!! இது என்ன நாற்றம், தாங்க முடியவில்லை, என்று ஒவ்வொரு புதன் கிழமையும், என் கணவரிடம் சொல்லி , குழந்தை போல் அழுவதுண்டு!!
அவரோ, இந்த நாற்றம், புதன் கிழமைதோறும் வீச நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்! உனக்கு, உடம்பு சரி இல்லை என்று சொல்லி படுத்து கொள்வதற்கு, இது ஒரு சாக்கு, என்று வழக்கம் போல் வில்லன் முகத்தை காட்டி செல்வார்!! அவரையும் குறை சொல்ல கூடாது, அவர் என்ன நாலு தடவை கருவுற்றிருந்தாரா, மசக்கையின் துன்பங்களை அறிவதற்கு!!
அடுத்ததாக, வீட்டுக்குள்ளேயே என்னை ஒட ஒட விரட்டிய இன்னொரு வாசம், சாதம் கொதிக்கும் போது வரும் வாசம்! சாதம் வெந்து முடியும் வரை, சமையலறை கதவை மூடி வைத்து விட்டு பறந்து ஓடி விடுவேன்! முட்டைகோஸை வெறுத்தது கூட இந்த கால கட்டத்தில் தான்!
RICE BRAN OIL தெரியுமா?? இந்த எண்ணெய் ரொம்ப லைட், கொலஸ்டிராலை கட்டுபடுத்தும் என்று விளம்பர படுத்துவார்களே!! அது உண்மை தான் என்று, அந்த எண்ணெய்யை உபயோக படுத்திய போது தான் தெரிந்தது! அந்த எண்ணெய்யில் சமையல் செய்யும் பொழுது, அந்த எண்ணெய்யின் நாற்றம் தாங்க முடியாமல், சாப்பிடும் ஆசையே போய் விடும், இதை தான் அப்படி சொல்லி இருப்பார்களோ?? யார் கண்டார்!
இன்னும் சிறப்பாக என் மூக்கை பற்றி அறிய விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!!!