எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


2 பின்னூட்டங்கள்

அறிந்தும் அறியாமலும்

sleep

நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம் அறிந்தும், சில விஷயங்கள் நாம் அறியாமலும் நடந்து விடுகின்றன! அவற்றில் ஒன்று தூக்கம்! தூக்கம் வருகிறது என்று தூங்க செல்பவர்களை விட, ஏதாவது வேலையில் தன் முழு கவனத்தை செலுத்தி கொண்டு இருக்கும் போது தூங்கி விடுபவர்கள் தான் அதிகம்! அந்த வகையில் தூங்குபவரில் நானும் ஒருத்தி!
எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம், தூங்க செல்வதற்கு முன், ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்பது! கண் அயறும் வரை வாசித்து விட்டு,அப்படியே படுத்து உறங்கியும் விடுவேன்! சொல்லுவார்களே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும், அது உண்மைதான் போல! அதுவும் , குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கும் போது, இப்படி தூங்கி வழிந்தால் எப்படி சரியாக வரும்! சத்தியமாக சொல்லுகிறேன், பாடம் சொல்லி குடுக்க ஆரம்பிக்கும் போது, ரொம்பவும் உற்சாகமாக தான் ஆரம்பிப்பேன், திடீறென்று என்ன நடக்கும் என்றே தெரியாது, கண்கள் சொறுகி கொண்டு தூக்கம் வரும்! என்னால் கொஞ்சம் கூட தூக்கத்தை அடக்க இயலாது! என் பெரிய மகனுக்கு, இப்படி அம்மா தூங்குவதை பார்த்து பார்த்து பழக்கம்தான், அப்ப அப்ப எழுப்பி விட்டு கொண்டே இருப்பான், அவன் ஒன்றை மட்டும் திருப்பி திருப்பி கூறுவான், ‘அம்மா ஸ்கூல் டைரியில் மட்டும், என் மகன் வீட்டு பாடங்களை ஒழுங்காக படித்து விட்டான், என்று எழுதி , உங்கள் கைய்யொப்பம் இட்டு விட்டு, பிறகு உறங்குங்கள்’ என்று!! அவன் கவலை அவனுக்கு! சில நேரம், என் பெரிய மகனிடம், ‘டேய் பிளீஸ் டா! ஒரு பத்து நிமிடத்தில் எழுப்பி விட்டு விடு ‘ என்று சொல்லி விட்டு உறங்கிய நாட்களும் உண்டு!

நான் சிறு வயதில் படித்த காலத்திலும், இதே கதைதான், என் அம்மாவிடம், பாடம் படித்து கொண்டிருக்கும் போதே, ‘அம்மா, என்னை ஒரு அரை மணி நேரம் உறங்க அனுமதியுங்கள்’, என்று கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது ! நான் படித்த பள்ளியிலும், ஒரு முறை, ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, இதே போல் தூங்கி வழிந்திருந்தால் கூடபரவாயில்லை, நான் அன்று தூக்கத்தில் எழுந்து பேசவே செய்தேன்! அந்த ஆசிரியை, ரொம்ப கண்டிப்பானவர், ஆனால் அன்று நான் உளறியதை பார்த்து சிரித்தே விட்டார்!அப்பவே அப்படீனா, இப்ப சொல்லவா வேணும்!
என் கடை குட்டி மகனும், இப்போ ஸ்கூல் செல்ல ஆரம்பித்துவிட்டான்! அவனுக்கு படிப்பது என்றாலே, பாகற்க்காய் சாப்பிடுவது போல! அவன் கவனிக்கிரானோ இல்லையோ, நான் அனைத்து பாடங்களையும் அவன் காதுக்குள் ஓதிக் கொண்டே இருப்பேன்! ஒரு நாள் அதே மாதிரி ஓதி கொண்டு இருக்கும் போது, திடீறென்று விழித்து பார்த்தேன், என் கடைகுட்டி பையன், ஓட்ட பந்தயகாரர்கள் ஓடுவதற்காக ரெடியாக தன் காலை மடக்கி இருப்பது போல், அவனும், அம்மா நன்கு தூங்க ஆரம்பித்தவுடன் ஓட ரெடியாக காத்து கொண்டிருந்தான்!! எனக்கு, அந்த காட்சியை பார்த்தாவுடன் அழவா, சிரிக்கவா என்றே புரியவில்லை!
இப்போது எல்லாம் நான் ரொம்ப உஷார், தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பதில்லை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கும் நேரங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கிறேன்! ரொம்பவும் முக்கியமாக எனது கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்கின்றேன்! அறியாமல் நடந்த இந்த விஷயத்தை , ஆராய்ந்து, அறிந்து, சிறிது, சிறிதாக முழுதாக களைந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, பார்க்கலாம்!!!!!