இருக்கலாம்.. முன் ஜென்மத்து பந்தமாய் என் தர்ம பத்தினியாய் பின்னே எவ்வளவு தான் கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் பார்த்தும் பார்க்காமலும் இருந்தாலும் சற்றும் சளைக்காமல் சல சலவென சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுவதும் நிமிஷத்துக்கு ஒரு முறை குறுஞ்செய்திகளை அனுப்பியும் உயிரை எடுப்பதேனோ . . . விட்டு தொடரும் பந்தம் Airtel!!
அது ஒரு நடு நிசி நேரம் சோவென்று கொட்டியது மழை இரவை பகலாக்க முயன்று தோற்ற மின்னல்கள் இருட்டிலே துலாவிய கைகள் பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகம் அலம்ப நினைத்து முடியாமல் பச்சை பொத்தானை அவசரமாக அமுத்த அய்யோ…………. என்று அலறியது உள்ளம் டேங்கில் தண்ணீர் ‘காலி’யானது மட்டுமல்லாமல் மோட்டரும் அநியாயமாய் தன் உயிரை விட்டிருந்தது!!
துவையல் செய்வதற்காக கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா சம அளவு எடுத்து சுத்தம் செய்து வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து போட்டு அது பொன்னிறமானவுடன் காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய் கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு எலுமிச்சை அளவு புளியும் போட்டு வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை அதில் போட்டு வதக்கும் போது எழும் சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில் அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை! ஏன் என்றால்…………. . . . . . . Whatsapp இருக்கே தூரமில்லை!!!
அதிகாலையிலே உங்கள் வீட்டின் சமையலறையில் பூக்கின்ற பளிச் வெள்ளை நிற பூக்கள் தீடீரென்று சற்றே சிவந்து சிவந்து பூத்தால் நீங்கள் தேங்காய் துறுவிய கையோடு தேங்காய் மூடியையும் சேர்த்து தூக்க கலக்கத்தில் துறுவுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
மிளகு இருக்கும் வறுத்த முந்திரி கிடக்கும் வெண்பொங்கல் அல்ல வேக வைத்த நிலகடலை அலங்கரிக்கும் புளியோதரை அல்ல ரொம்பவும் குழைவாக இருக்கும் தயிர் சாதமும் அல்ல ப்ரவுன் நிறத்தில் நெய்யில் வறுத்த முந்திரி மிளகு நிலகடலையால் அலங்கரிக்கபட்டு மிதமான காரத்துடன் கடைசி வாய் சாப்பிடும் வரை சூடு தாங்க முடியாமல் நாக்கு அலற அலற, என்னவாக இருக்கும் என்ற ஐயம் தீராமலேயே வயிற்றினுள் தள்ளினால் அதுவே குண்டூர் பெருமாள் கோவில் பிரசாதம்!
ஏழு ஸ்வரங்கள் உண்டு செய்யும் மாயங்களில் அவ்வபொழுது தொலைந்து போகும் எனக்கும்.. பள்ளியில் இருந்து பிள்ளைகள் வீடு திரும்ப தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் ஆட்டோவின் பேரிரைச்சலை தவிர மற்ற எல்லா வகை இசையும் நாராசமாகவே ஒலிக்கின்றது!
மிஸ் பண்ணவே கூடாத விஷயங்கள் இரண்டு… . . . . . . . . 1)கத்தி 2)குக்கர் வெயிட் இல்லாட்டி போனா அன்றைய நாள் முழுக்க சமையலறையினுள் நீங்கள் தொலைந்து போய் விடுவது நிச்சயம்!
இது என்ன தலைப்பு, என்று நினைக்க தோன்றுகிறதா?? நாற்றம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்று தெரியுமா? வாசம், மணம்….. ஆனால் இந்த வார்த்தையை உபயோக படுத்தும் ஒவ்வொருத்தரும், துர் நாற்றம் என்று குறிப்பிடாமல், நாற்றத்தையே துர் நாற்றம் ஆக்கி விட்டார்கள்! அது போகட்டும், நாற்றம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமானதொன்று!!
எனது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடி மன நிலையையும் தீர்மானிப்பது இந்த நாற்றம்! காலையில் எழுந்து செய்யும் தேனீருடன், கலந்து வரும் ஏலக்காய் வாசம், அன்றைய நாளின் உற்சாக தொடக்கத்துக்கு வழி செய்கிறது! தாளிக்கும் போது கமழும் கறிவேப்பிலையின் வாசம், பெருஞ்சீரகம், கிராம்பு இவற்றின் அடங்காத வாசம், ஊரை கூட்டும் கொத்தமல்லியின் வாசம், மயக்கும் புதினாவின் வாசம், நெய் உருகும் போது வரும் திணறடிக்கும் வாசம், நன்கு வெந்த கம்பு சாதத்தின் சூடான வாசம், எட்டு ஊரை கை தட்டி கூப்பிடும் மீன் குழம்பின் வாசம், கனிந்த மாம்பழத்தின் அலுக்காத வாசம், அவித்த பனங்கிழங்கின் தீராத வாசம், மழை வர போவதை அறிவிக்கும் மண் வாசனை, சிறு குழந்தைகள் மேல் அடிக்கும் வசம்பு, மஞ்சள், சந்தனம் கலந்த வாசம், ஜவ்வாதின் கூர்மையான வாசம்…………. இப்படி எனக்கு பிடித்த நாற்றங்களை சொல்லி கொண்டே இருக்கலாம்!
இதே நாற்றம், என்னை ஒரு கால கட்டத்தில் ஓட, ஓட விரட்டியதுண்டு!! எப்போனு கேக்கரீங்களா, என் முதல் குழந்தையை கருவுற்று இருந்த அந்த நேரத்தில்! மசக்கையாய் இருந்த அந்த மூன்று மாத காலத்தை மறக்கவே முடியாது என் மூக்கின் மோப்ப சக்தி, ஒரு பழக்கபடுத்தப்பட்ட காவல் நாயை விட ஒரு படி அதிகமாகவே இருந்தது! கிட்டதட்ட ஒரு கி.மீ சுற்றளவில் எழும் அத்தனை நாற்றங்களும் எனக்கு அத்துபடி!
நாங்கள் அந்நேரம் குடியிருந்த வீடு , ஒரு மிக பிரபலமான, தேங்காய் எண்ணெய் கம்பெனிக்கு சொந்தமான, எண்ணெய் மில்லுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது!எனக்கு சிறு வயதில் இருந்தே, காயும் தேங்காய் எண்ணெயின் வாடை ஆகவே ஆகாது! என்னுடைய அம்மா, ஒவ்வொரு முறை பூரி, வடை சுடும் பொழுது எல்லாம், நான் பறந்து வெளியில் ஓடி விடுவேன்! எண்ணெய் வாடை அடங்கும் வரை, என் தரிசனம் வீட்டில் காண கிடைக்காது!
இப்போ, அருகிலேயே, எண்ணெய் மில், தேங்காய் எண்ணெய் வாசத்துக்கு என்ன பஞ்சமா, புதன் கிழமைதோறும், காயும் தேங்காய் எண்ணெயின் வாசம், காற்றில் நிறைந்து குப்பென்று வீச தொடங்கி விடும்! ஏற்கனவே, மசக்கையில் இருந்த எனக்கு, அந்த நாற்றம், என்னை அந்த நாள் முழுவதும் படுத்த படுக்கை ஆக்கி விடும்!! இது என்ன நாற்றம், தாங்க முடியவில்லை, என்று ஒவ்வொரு புதன் கிழமையும், என் கணவரிடம் சொல்லி , குழந்தை போல் அழுவதுண்டு!!
அவரோ, இந்த நாற்றம், புதன் கிழமைதோறும் வீச நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்! உனக்கு, உடம்பு சரி இல்லை என்று சொல்லி படுத்து கொள்வதற்கு, இது ஒரு சாக்கு, என்று வழக்கம் போல் வில்லன் முகத்தை காட்டி செல்வார்!! அவரையும் குறை சொல்ல கூடாது, அவர் என்ன நாலு தடவை கருவுற்றிருந்தாரா, மசக்கையின் துன்பங்களை அறிவதற்கு!!
அடுத்ததாக, வீட்டுக்குள்ளேயே என்னை ஒட ஒட விரட்டிய இன்னொரு வாசம், சாதம் கொதிக்கும் போது வரும் வாசம்! சாதம் வெந்து முடியும் வரை, சமையலறை கதவை மூடி வைத்து விட்டு பறந்து ஓடி விடுவேன்! முட்டைகோஸை வெறுத்தது கூட இந்த கால கட்டத்தில் தான்!
RICE BRAN OIL தெரியுமா?? இந்த எண்ணெய் ரொம்ப லைட், கொலஸ்டிராலை கட்டுபடுத்தும் என்று விளம்பர படுத்துவார்களே!! அது உண்மை தான் என்று, அந்த எண்ணெய்யை உபயோக படுத்திய போது தான் தெரிந்தது! அந்த எண்ணெய்யில் சமையல் செய்யும் பொழுது, அந்த எண்ணெய்யின் நாற்றம் தாங்க முடியாமல், சாப்பிடும் ஆசையே போய் விடும், இதை தான் அப்படி சொல்லி இருப்பார்களோ?? யார் கண்டார்!
இன்னும் சிறப்பாக என் மூக்கை பற்றி அறிய விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!!!