இதுவரை புன்னகையை மட்டும்
பகிர்ந்து கொண்ட ஆந்திர கீழ்வீட்டுக்காரங்க
முதன்முறையாய் படி ஏறி வந்து புரிந்தும்
புரியாமலும் வார்த்தைகளை பகிர்ந்து கோண்டார்..
அவர் வீட்டில் லட்சுமி பூஜையாம்
கலந்து கொள்ள வேண்டினார்
மறுக்காமல் தலையை ஆட்டி வைத்தேன்
இரவு 8 மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தோம்
அவர் அவர் மாமியார் மைத்துனர் சகிதமாய்
தயாராகவே இருந்தார்…
அவர் மாமியார் ஏதோ ஜெபித்து கொண்டிருந்தார்
மரியாதை நிமித்தமாய் ஒரு சிறு புன்னகையை
உதிர்த்து விட்டு தன் ஜெபத்தை தொடர்ந்தார்
பரஸ்பரம் புரியாத மொழியில் அறிமுகத்துக்கு
பின் எனது பெயரை கேட்டு மனம் குளிர்ந்தார்
பின் ஒரு சிறு பாயை நடு கூடத்தில் விரித்தார்
அதில் என்னை அமற செய்து குங்குமம் சகிதமாய்
வந்து எனது எதிரில் அமர்ந்தார்..
என் உச்சந்தலை வகிடு முழுவதும் குங்குமத்தை
நிரப்பினார் என் தாலியிலும் இட்டு விட்டார்
பின் என்னையும் அவ்வாறே செய்ய சொன்னார்
அதன் பின் பூஜை பிரசாதமாய்
பாயசத்தை அருந்த குடுத்தார்
பின் ஒரு கலவை சாதம்
அதன் பின் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம்
அரிசியையும் குடுத்து விட்டு
மஞ்சளை சிறிது தண்ணீர் விட்டு கலந்து
எடுத்து வந்து என் பாதங்களை
மஞ்சள் தேய்த்து மஞ்சளாக்கினார்
பின் என் பாதங்களை தொட்டு வணங்கினார்
அய்யையோ நான் தமிழ் நாட்டின் அம்மா இல்லை…
என்று அலற வேண்டும் போல் இருந்தது
தொட்டு வணங்கி விட்டு எழுவார் என்று
பார்த்தால் அவரோ நான் அட்சதை போட்டு
ஆசிர்வதிப்பதற்க்காக காத்து கொண்டிருந்தார்..
அவரிடம் எப்படி சொல்லுவது அவர் அட்சதை
போடுவதற்க்காக குடுத்த மஞ்சள் அரிசியை
நான் எப்பொழுதோ வாயில் போட்டு விட்டேன் என்று!