இரண்டுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு.. இரண்டுமே குளிரை விரட்டி சூட்டை வரவேற்பவை.. ஹோலி Vs கோழி!!
கிண்டிய அல்வா வாயில் கோந்து ஆன கதைகள் நிறைய கேட்டதுண்டு வாய் விட்டு சிரித்ததுண்டு ஆனால் நானே என் கையால் முதன் முறையாய் சிரமப்பட்டு செய்த பீட் ரூட் அல்வாவை வாயில் வைத்த போது என்னால் சிரிக்க முடியவில்லை ஏனெனில் வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!!
டீவீ விளம்பரத்தில் ஒரு பெண் கையில் வயர் மெஷ்ஷை பிடித்தபடி சப்பாத்தியை துளி கூட எண்ணெய் இல்லாமல் கும்முனு பூரி போல் எழும்ப செய்து தட்டில் இடுவதை மிகுந்த ஏக்கத்துடன் பார்த்த என் கணவர் சந்தடி சாக்கில் என்னையும் ஸ்க்ரீனையும் மாறி மாறி நோக்க அவரை முழுதும் புரிந்தவளாய் பதில் அளித்தேன்… கவலைபடாதீர்கள்.. சீக்கிரமே பெண்ணை பேசி முடித்து விடலாம்!!
காத்திருக்கும் அறைகளில் போடப்படும் ஒன்றோடு ஒன்று இணைந்த இருக்கைகளில் ஓரமான இருக்கையில் அமர்வதும் இலவசமாக மானத்தை தண்டோரா போட்டு கப்பலில் ஏற்றுவதும் ஏறக்குறைய ஒன்று தான்!!
நடு இரவு 2:30 மணிக்கு விழிப்பு தட்டும் போது முழுதாய் உறங்காமல் பாதியில் எழுந்து விட்டோமே என்ற மனக்குறையை விட ஆஹா.. இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறது விடிய என்ற சந்தோஷ எண்ணமே மேலோங்குகிறது!!
யாரேனும் ஒருவர் ஆரஞ்சு பந்து வாங்கி வருகிறேன் என்று ஆரஞ்சு பழம் வாங்கி வந்தால் அவங்கதான் ஆந்திராகாரர் தெரிஞ்சிகோ!!
நாங்க குடி இருக்கிற வீட்டுக்கும் ராம்லீலா படத்தில் வரும் தீபிகா படுகோனுக்கும் நேற்று மதியத்தில் இருந்து சரியாக இன்னும் இரண்டரை மாதம் வரை ஒரு தவிர்க்க முடியாத ஒற்றுமை உண்டு..
ஒரே சத்தம் உள்ள இரு வார்த்தைகள் ஆனால் அர்த்தமும் எழுத்துக்களும் வெவ்வேறு என்றால் அது ஹோமோபோனு.. வாங்க நினைக்கும் பழைய வீடு பற்றி இருவர் இரு விதமாக பேசினால் சத்தம் போடாம வாங்கி போட்டு ஒரு ஹோமம் பண்ணு…
இன்று ஜுஸ்ட் மிஸ்ஸு இல்லையேல் முன் நடந்து சென்ற திருவாளர் வாயில் இருந்து சுழன்று வந்த எச்சில் என் மீது பட்டு நான் மூடு அவுட் ஆகி இருக்ககூடும்!!
ஒரு வாய் சப்பாத்திய எவ்வளவு நேரம் வாயிலேயே வெச்சிட்டு இருப்ப அது என்ன பபிள்கம்மா.. முழுங்குடா.. கரெக்டா சொன்னீங்கம்மா பபிள்கம் மாதிரி தான் இருக்கு தூ..நு துப்பிடட்டா.. ??
பளீர் என்று அடித்த அடியில் நேற்று தலையெல்லாம் ஒரே பெயின் இன்று தொண்டையெல்லம் ஒரே பெயின் சரியா தான்யா வெச்சிருக்காங்க பெயர் ‘பெய்ன்’ட் என்று!!
இன்று என் வீட்டுக்கு வரும் எந்த ஒரு போன் காலை நான் எடுத்து பேசும் போது கண்டிப்பாக போன் செய்தவர் கேட்பார் ‘ தம்பி அம்மா வீட்டில் இருந்தால் கொஞ்சம் குடுப்பா..’ தொண்டை கரகரப்பு!!
சப்பாத்திக்கும், நாம புதிதாக தொடங்கும் வாழ்க்கைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு! புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது! வாழ்க்கையை, வாழ வாழ தான், அதாவது அனுபவம் கூட கூட தான் வாழ்க்கை இனிக்கும்!
முதன் முதலில் சப்பாத்தி மாவ பிசைந்தது எல்லாருக்கும் நல்லாவே நியாபகம் இருக்கும்.. தண்ணீர் கூடி, இல்லை மாவு இறுகி இப்படி எதாவது ஒரு பிரச்சனை ஆகாம இருந்திருக்காது. மாவை கூட்டி, குறைத்து, உப்பு போட மறந்து, சப்பாத்தி செய்து முடிப்பதற்க்குள் போதும், போதும் என்று ஆகி இருக்கும். ஒழுங்காக எல்லாம் நடக்க வேண்டும் என்றால், முதலில் டென்ஷன் ஆக கூடாது. எவ்ளோ பேருக்கு சப்பாத்தி செய்ய போகிறோம் என்பதை முதலில் அறிந்து, அதுக்கு தக்கவாறு மாவு எடுக்க தெரியனும். மறக்காமல் உப்பு போடணும். ரொம்ப நிதானமாய், பொறுமையாய், தண்ணீர் விட்டு கிளறி, ரொம்பவும் தண்ணியாக ஆகி விடாமல், மாவை சிறிது கிளுகிளுவென பிசைந்து, கடைசியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, உருண்டைகள் இட வேண்டும். சப்பாத்தி அருமையாக வர வேண்டும் எனில், இந்த மாவின் பதம் அருமையாக இருக்க வேண்டும். இதே போல், நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையோடு, கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல், கூலாக வாழ பழகி கொள்ளுவது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடை பிடித்தல் நலம். விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுதல் நல்லது.
சிலர், சப்பாத்தி மாவை, மிக கடினமாக பிசைந்து வைத்து விட்டு, டம் டம் என்று அதை போட்டு அடித்து கொண்டு இருப்பர். பாவம் அவர்களுக்கு தெரியாது,எப்படி அடித்தாலும்,அது வர்ர மாதிரி தான் வரும் என்று. அதே மாதிரி, நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையை அளவற்ற அன்பினால் கவர முயற்சி செய்ய வேண்டுமே ஒளிய வன்முறையாலோ, அடக்குமுறையாலோ, ஆதிக்கத்தாலோ அல்ல!! மென்மையான குணமும், அன்புக்கு கட்டுபடும் மனமும் இருந்தால் போதுமானது..
இப்போ உருண்டைகளை தேய்க்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு உருண்டையாய் எடுத்து, மாவில் தோய்த்து, சப்பாத்தி கட்டையில் வைத்து, உருளையால் மாவை அழுத்தி, வட்ட வடிவமாய் இழுக்க வேண்டும். இவ்வாறு தேய்க்கும் போது, நிதானம் மிகவும் அவசியம். அவசர பட்டு தேய்த்தோமேயானால், கட்டையில் மாவு ஒட்டி கொண்டு விடும். நேரம் வீணாகி, மாவும் இழுக்க வராமல் போய் விடும். இதே மாதிரி, வாழ்க்கையிலும், இன்பம் போல துன்பமும் அப்ப அப்ப தலை காட்டாமல் இருப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது. எந்த ஒரு சண்டை, சச்சரவு எல்லவற்றையும் மிக பொறுமையாய் கையாளுவது அவசியம். சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க தெரிந்து கொண்டால், வாழும் நிமிஷங்கள் ஒவ்வொன்றும் சந்தோஷத்தில் மட்டுமே கறைந்து செல்லும்.
அடுத்த முக்கியமான வேலை, தேய்த்த சப்பாத்தி ஒவ்வொன்றையும் சப்பாத்தி கல்லில் போட்டு எடுப்பது. இதற்கு முதலில் கல்லை காய வைக்க வேண்டும். கல் ரொம்பவும் காய்ந்து விட கூடாது, சரியான சூட்டில், சப்பாத்திகளை போட்டு எடுக்க வேண்டும். அப்ப அப்ப சப்பாத்தியை திருப்பி போடணும், ஒரே பக்கமாய் ரொம்ப நேரம் வேக விட்டு விட கூடாது, பிறகு வலுத்து கொண்டு வறட்டி போலாகிவிடும். திருப்பி போட்டு எடுப்பதற்க்கு முன்னால், எண்ணெய் சிறிது விட்டு எடுக்கலாம்.. இதே போல், வாழ்க்கை துணைவரோடு எழும் ஊடல்கள் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க விட கூடாது. அப்ப அப்ப, அவரவர் செய்த தவறுகளை ப்ரஸ்பரம் மறந்து, மன்னித்து, காதல் குறையாமல் பார்த்து கொள்வது நலம்.
ஒரே மாதிரியே சப்பாத்தி போட்டாலும் போர் அடித்து விடும். ஒரு நாள், புல்கா, ஒரு நாள் காய்கரி ஸ்டஃப் செய்யபட்ட சப்பாத்தி, வாழைப்பழ சப்பாத்தி, பால் ஊற்றி பிசைந்த சப்பாத்தி, நெய் சப்பாத்தி என்று வித விதமாய் செய்தால் நல்லது. நாமும், அப்ப அப்ப, நம்ம ஸ்டைல மாத்தி, வாழ்க்கை துணையோட கண்களுக்கு ஃப்ரெஷா தெரிந்தல் நல்லது தானே, வாழ்க்கை போர் அடிக்காமல், ஒவ்வொரு நாளும் புதிதாகவும்,வாழ்க்கை அழகாகவும் இருக்கும்….