ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்
பீஎம் பதவிக்கு பேர் இச்சை பலம்!
எனக்கு பிடிக்காதவற்றை யாரேனும்
என்னை வாங்க வற்புறுத்தும் போது
அவர்கள் மனது நோகாமல் நானும்
சாமர்த்தியமாக அந்த இக்கட்டில்
இருந்து தப்பித்து கொள்ள சொல்லும்
பொறுத்தமான பொய்களில் ஒன்று..
‘என் கணவரிடம் கேட்காமல் நான்
எந்த ஒரு முடிவும் எடுப்பதே இல்லை..’
இப்பவே மனதில் உள்ளதை
சொல்ல நினைத்து முதலில்
ஒரு ஆச்சரிய குறியோடு
ஆரம்பித்து பின் இமைகள்
படபடக்க மூச்சுவிட கூட
மறந்து அருவியாய் வார்த்தைகளை
கொட்டி இடை இடையே காற்புள்ளி
அரைபுள்ளி சேர்த்து ஆங்காங்கே
பொறுத்தமான முகபாவங்கள்
காட்டி கடைசியில் ஒரு கேள்வி
குறியோடு முடித்து விட்டு
ஆர்வத்தோடு எதிரில் இருப்பவர்
சொல்ல போகும் பதிலுக்காக
அவர் முகத்தை ஏறிட்டு பார்க்க
அவரோ.. என்னது திருப்பி சொல்லு..
என்று சொல்லுவார் பாருங்க அது
தாங்க தாங்கவே முடியாத லொள்ளு!!
எதிரே இருந்த வீட்டுக்கு
புதிதாய் குடி வந்த பெண்
தன்னை சுய அறிமுகம்
செய்து கொள்ள வந்தார்..
அவருக்கு 5 குழந்தைகள்
என்று சொல்லி கொண்டு
இருக்கும் போதே மம்மி
என்று அவரது 2 வயது
குழந்தை துள்ளி குதித்து
ஓடி வந்தது..
மம்மியா… நான் டீவீயில் Santoor
சோப் Ad பார்த்த பொழுது
கூட இவ்வளவு அதிர்ச்சி
அடைந்ததில்லை ஏனெனில் என்
எதிரே நின்று பேசியது மம்மி
அல்லவே 55 வயது மாமி!!
பழைய பேப்பரை அடுக்கி
கட்டி வெளியேற்ற எத்தனிக்கும்
நேரம் தான் அதில் வந்த
பல சுவாரசியமான விஷயங்கள்
கண்ணுக்கு புலப்படும்!!
ஏதேனும் விபரீதம் நம்
வாழ்வில் நடைபெறும் வரை
அவை உலகத்தில் உள்ள யாருக்கோ
எவருக்கோ மூன்றாமவருக்கே
நடைபெறுபவை என்று நம்
மனது முழுமையாய் நம்புகிறது!!
அதிர்ச்சியான விஷயங்களை
யாருக்கேனும் சொல்ல முற்படும்
போதும் யாரேனும் நம்மிடம் சொல்லி
விட்ட போதும் ஏதோ உயரமான
மலை உச்சியில் பிராணவாயு
குறைவால் மூச்சடைத்து நிற்பது
போன்றதொரு பிரம்மையை
தவிர்க்க இயலாது!!
என்னதான் நமதே நமதாக
இருந்தும் உள்ளிருக்கும்
சந்து பொந்து மேடு பள்ளம்
லொட்டு லொசுக்கு என்று
அத்தனை அந்தரங்களை
அறிந்திருந்தும் வெளியில்
சென்று விட்டு வீட்டு வாசலை
அடைந்தவுடன் பொறுமையாக
சிறிது நேரம் மீன் பிடித்த
பிறகே அகப்படுகிறது
சாவி என் கைபையினுள்ளே!!
‘ஆ….’ எவ்வளவு பெரிய மாத்திரை
என்று வாயை பிளக்காதீர்கள்
ஜஸ்ட் இரண்டு மாத்திரைகள் தான்..
தமிழ் இலக்கணம் அறிந்தவர்களுக்கு
மட்டும்!!