பிரேமம் மலையாளம் திரைப்படம் பற்றி தெரியாதவர்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள்! ஏனெனில் அது அவ்வளவு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம்! ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு சீனும் ரசித்து நோக்கிய ஒரு திரைப்படம். கதை என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம்.. Usual Love story தான்.நம்ம ஊரு ஆட்டோகிராப் படம் மாதிரி! ஆனா அதைவிட நூறு மடங்கு நயமான திரைப்படம்! அவர்கள் கதை சொல்லிய விதம் ரொம்பவே அருமையாக இருந்தது. அதுல வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை! என்னை ரொம்பவே ஈர்த்தது என்னவோ விமல் சார் தான்! இவரு இப்படத்தின் ஹீரோவும் கிடையாது வில்லனும் கிடையாது! அப்போ யாரா இருக்கும்?? நீங்க நினைத்தது சரி தான்.. காமடியன் தான் அவரு! படத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனுஷன் பட்டைய கிளப்பிடுறார்!
இந்த விமல் சார் யாருன்னா , படத்தோட ஹீரோ படிக்கும் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர். இவரு ஒரு மலையாளி நல்ல வழுக்கை மண்டையோடு பார்க்க ஒரு 35 வயது தாராளமா சொல்லலாம். கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி! தன் கனவு தேவதைக்காக வருட வருடமாக காத்து கொண்டிருப்பவர்! இவருக்கு கல்லூரியில் ஒரே துணை P.T சார் மட்டுமே! இனி இவரு காதலில் எப்படி விழுந்தார் என்று பார்க்கலாம்!
படத்துல மொத்தம் மூணு ஹீரோயின்கள்! அதிலே நாம இப்போ பார்க்கப்போவது மலர் என்ற பெயரையுடைய கதாபாத்திரத்தை மட்டுமே! இந்த மலர் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் இருந்து கேரளம் வந்து , இப்படத்தின் ஹீரோ படிக்கும் கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக பணியில் சேர்கிறார்! இவர் அக்கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த முதல் தினமே ,இப்படத்தின் ஹீரோ கண்டதும் காதலில் விழுகிறார்! ஹீரோ மட்டுமா காதலில் விழுகிறார், நம்ம விமல் சாரும் தான்! மலர் மிஸ் இப்படித்தான் விமல் சார் அவளை குறிப்பிடுவார்! மலர் மிஸ்ஸை கண்ட அடுத்த நொடி ஒரு தலை காதலில் டமால் என்று விழுந்து விடுகிறார் விமல் சார்! இன்னும் மிஸ்ஸை கரெக்ட் பண்ண கூட ஆரம்பிக்க வில்லை, அதுக்குள்ள ,நான் எங்க அம்மாவ எப்படித்தான் convince பண்ண போறேன்னு தெரியல,தான் காதலிப்பது ஒரு தமிழ் பெண் என்று தெரிந்தால் அம்மா என்ன சொல்வாளோ அவள முதலில் கரெக்ட் பண்ணனும் என்று P.T சாரிடம் புலம்புவார்! பார்த்த பத்தாவது நிமிடத்தில் தன் லவ்வை Propose பண்ண கூட ரெடியாயிடுவாருணா பார்த்துகோங்களேன்! மலர் மிஸ் தமிழ் பெண் என்பதால் , தமிழிலேயே தன் காதலை வெளிப்படுத்த எண்ணி ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று P.T சாரிடம் திரும்ப திரும்ப சொல்லி ஒத்திகை பார்த்து கொள்வார்!
தன் கனவில் கண்ட தேவதையை நேரில் பார்த்து , கண்டதும் ஒரு தலைக்காதலில் விழுந்த விமல் சார் , அதே வேகத்தோடு மலர் மிஸ்ஸை நேரில் பார்த்து , தன் காதலை சொல்ல கிளம்புகிறார்! P.T சார் முன்னே பேசும் போது தந்தி அடித்த வார்த்தைகள் , மலர் மிஸ்ஸின் முன்னே நொண்டி அடித்து விட , கடைசியில் எப்படியோ பாடுபட்டு , மிஸ்ஸின் செல் நம்பரை மட்டும் கேட்டு பெற்று கொள்கிறார்!
விமல் சார் ஒரு நாள் கல்லூரியில் JAVA பாடம் நடத்தி கொண்டிருக்க , ஏதேச்சையாய் , மலர் மிஸ் , பால்கனியில் கடந்து செல்ல , விமல் சாரின் கவனம் நொடியில் சிதறி போய் , அந்தோ பரிதாபம் , JAVA அவர் வாயில் MAVA ஆகி விடுகிறது!! விமல் சார் MAVA சார் ஆன கதை அந்த தருணத்தில் இருந்து தான்!!
படத்தின் ஹீரோவும்,அவனுடைய நண்பர்களும் , மலர் மிஸ்ஸிடம் , நன்றாக பேசுவதை கண்ட விமல் சார் , மலர் மிஸ்ஸுக்கு அவர் மேல் காதல் உண்டாக , ஹீரோ மற்றும் அவனுடைய நண்பர்களின் உதவியை நாடுகிறார்! அவர்களிடம் , விமல் சார் , வல்லவர் , நல்லவர் , பணக்காரர் , நல்லா பாடுவார் , ஆடுவார் என்று மலர் மிஸ்ஸிடம் எடுத்துரைக்க சொல்லி சொல்லுவார்!அவர்களும் தங்கள் பங்குக்கு சும்மா இல்லாம , ஊட்டியில் , விமல் சாருக்கு 900 ஏக்கர் தோட்டம் இருப்பதாய் சொல்லுகிறோம் என்று அவரை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்! என்ன தோட்டம் இருப்பதாய் மலர் மிஸ்ஸிடம் சொல்ல என்று அவர்கள் விமல் சாரிடம் வினவ , அவரும் கொஞ்சம் கூட யோசிக்காம ரப்பர் தோட்டம் என்று சொல்லுவது செம தமாஷ்! ஊட்டியில் ரப்பர் தோட்டத்துக்கு எங்கு போக.. இறுதியாய் 900 ஏக்கர் பேரிக்காய் தோட்டம் இருப்பதாய் சொல்வதாய் பேசி வைத்து கொள்கின்றனர்! இவ்வுதவிக்கு கூலியாய் , விமல் சாரின் பாக்கெட்டை , கேண்டீனில் தின்றே காலி செய்கின்றனர்! அவர்களோடு சேர்ந்து P.T சாரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் , விமல்சாருக்கு காதல் ஐடியாக்கள் வீசி , அதற்கு விலையாய் ,கேண்டீனில் விமல் சார் செலவில் நெய் மீனாக தின்று தீர்க்கிறார்!!
இப்படி பலவாறு தன் காதலை மலர் மிஸ்ஸிடம் , விமல் சார் சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்க , திடீரென்று ஒரு நாள் , மலர் மிஸ்ஸை தேடி , ஊட்டியில் இருந்து ,அறிவழகன் என்ற பெயரில் , ஒரு இளைஞன் வருகிறான்! அவன் பார்க்க , நல்ல உயரமாய் , கம்பீரமாய் மொத்தத்தில் அழகனாய் இருப்பது கண்டு மனதொடிந்து போகிறார்! அவன் யார் என்று துருவி துருவி விசாரித்ததில் , மலர் மிஸ்ஸுக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தம் என்று மட்டும் தெரிந்தது! அவன் ஒரு வேளை , மலர் மிஸ்ஸின் , அத்தை மகனாக இருக்குமோ என்ற சந்தேகம் , விமல் சார் மனதை ஆட்டி படைக்க , இருக்க முடியாமல் , அவன் உண்மையில் யார் என்று அறிந்து கொள்வதற்காக , P.T சாருடன் கை கோர்த்து கொண்டு , அவன் கேண்டீன் செல்லும் போது பின் தொடர்ந்து , பக்கத்து டேபிளில் அமர்ந்து அவனை நோட்டமிடுகின்றனர்!
தன்னையும் , அந்த அறிவழகனையும் , மாறி , மாறி ஒப்பிட்டு பார்த்து கொள்கிறார்! இத்தனை நாள் இல்லாமல் , அன்று விமல் சாருக்கு , தன் தலையில் முடி இல்லாமல் , வழுக்கையாய் இருப்பது , பெருங்குறையாய் தெரிகிறது! சினிமாவில் , ஹீரோக்கள் , தங்கள் தலையில் , விக் வைத்து , தங்களை அழகா காட்டி கொள்வார்களே , அது போல் தானும் , விக் உபயோகித்தால் , எப்படி இருக்கும் என்று P.T சாரிடம் வழக்கம் போல் வினவுகிறார்!!
P.T சாரும் சந்தடி சாக்கில் , விமல் சார் அக்கவுன்ட்டில் ஒரு நெய் மீன் ப்ரை வாங்கி அதை ருசித்தவாறே சொல்கிறார்… சார் உங்களுக்கு தலையில முடி இல்லாம இருக்கிறது தான் அழகே! ஒரு வேளை முடி இருந்திருந்தா நீங்க நல்லாவே இருந்திருக்க மாட்டீங்க! விக் வாங்கி உங்க தலையில மாட்டுனா, ஷாக் அடிச்சு விழுந்த காக்கா மேல , லாரி ஏறி இறங்குனா எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும் என்று சொல்ல , அந்த எண்ணத்தை விட்டொழிக்கிறார் விமல் சார்!!
இந்த அறிவழகன் ஒரு வேளை மலர் மிஸ்ஸோட அண்ணன் இல்ல தம்பியா இருக்குமோ என்று விமல் சார் சந்தேகத்தை கிளப்ப அதற்கும் ஆமாம் சாமி போடுகிறார் நம்ம P .T சார்! மேலும் , மலர் மிஸ் மற்றும் அறிவழகனின் காது பார்க்க ஒரே மாதிரி இருக்கு கண்டிப்பாக அண்ணன் இல்ல தம்பியா தான் இருக்கும் என்று துவண்டு போன விமல் சாரின் நெஞ்சை தூக்கி நிறுத்துகிறார் நம்ம P.T சார்! இவ்வாறு அவர்கள் மாறி மாறி பேசி கொண்டிருக்க , கேண்டீனில் ஏதோ ஒரு குறும்பு மாணவன் , மாவா மாவா என்று விமல் சாரை கூவி அழைக்க , இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு மரியாதை இல்ல என்று இருவரும் கிளம்புகின்றனர்!
அடுத்ததாக கல்லூரியில் ஏதோ கலைநிகழ்ச்சி நடைபெற ஆயுத்தமாக ஹீரோவும் அவனது நண்பர்களும் நடனம் ஆட முடிவெடுக்கின்றார்கள். மேலும் அதற்கு நடனம் வடிவமைத்து தர தானே முன் வருகிறார் மலர் மிஸ்!ஒரு பக்கம் மலர் மிஸ் , ஹீரோவுக்கும் அவனது நண்பர்களுக்கும் நடனம் சொல்லி குடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க , விமல் சார் P.T சாரிடம் , அவசரக்கதியில் நடனம் பயிலுகிறார்! எப்படியாவது சில மணி நேரங்களில் நடனம் பயின்று , மலர் மிஸ்ஸை impress செய்ய நினைக்கிறார்! P.T சாரும் தனக்கு தெரிந்த நடன வித்தையை எல்லாம் களத்தில் இறக்க , விமல் சார் முட்டி புடித்து கொள்ளாத குறையாய் சற்றே திணறி தான் போகிறார்! சிம்பிள் ஸ்டெப்ஸ் கூட தனக்கு சுட்டு போட்டாலும் வராது என்று சற்று லேட்டாக புரிந்து கொள்ளும் P .T பின்னர் தன் முடிவை மாற்றி கொள்கிறார்! ஆட வேண்டாம் , பாட்டு பாடி மிஸ்ஸை கவுத்தி விடலாம் என்று தன் அடுத்த கட்ட பிளானுக்கு தாவுகிறார்!
கலை நிகழ்ச்சி நடை பெறும் நாளும் வந்து சேர்கிறது! ரொம்பவே கஷ்டப்பட்டு ‘என்னவளே ‘ காதலன் பட பாடலை பாட முயற்சி செய்கிறார் விமல் சார்! மலர் மிஸ்ஸை தன் பாடலால் கவுக்க நினைத்தவர் தானே கவுந்து கிடக்கிறார்! பின்னே ,காதல் கசிந்து உருகி இருக்க வேண்டிய வேளையில் அந்தோ பரிதாபம் கரெண்ட் அவர் கை பிடித்த மைக்கில் கசிந்துருக தூக்கி எறியப்படுகிறார்! இந்த ஷாக் கூட அவருக்கு ஒன்னும் பெரிசில்ல , மலர் மிஸ் அவர ஒரு தடவை கூட ஏறெடுத்து பார்க்க விரும்பியதில்லை என்பதை மட்டும் அவர் அறிந்தால் எவ்வளவு ஷாக் ஆகி இருப்பார்!!!
படத்தின் கதையோடு ஒன்றிய நல்ல காமெடி! என்னை விமல் சார் fan ஆக்கிடுச்சுனா பார்த்துகோங்களேன் 😉