எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

நாற்றம்

படம்

இது என்ன தலைப்பு, என்று நினைக்க தோன்றுகிறதா?? நாற்றம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்று தெரியுமா? வாசம், மணம்….. ஆனால் இந்த வார்த்தையை உபயோக படுத்தும் ஒவ்வொருத்தரும், துர் நாற்றம் என்று குறிப்பிடாமல், நாற்றத்தையே துர் நாற்றம் ஆக்கி விட்டார்கள்! அது போகட்டும், நாற்றம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமானதொன்று!!

எனது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடி மன நிலையையும் தீர்மானிப்பது இந்த நாற்றம்! காலையில் எழுந்து செய்யும் தேனீருடன், கலந்து வரும் ஏலக்காய் வாசம், அன்றைய நாளின் உற்சாக தொடக்கத்துக்கு வழி செய்கிறது! தாளிக்கும் போது கமழும் கறிவேப்பிலையின் வாசம், பெருஞ்சீரகம், கிராம்பு இவற்றின் அடங்காத வாசம், ஊரை கூட்டும் கொத்தமல்லியின் வாசம், மயக்கும் புதினாவின் வாசம், நெய் உருகும் போது வரும் திணறடிக்கும் வாசம், நன்கு வெந்த கம்பு சாதத்தின் சூடான வாசம், எட்டு ஊரை கை தட்டி கூப்பிடும் மீன் குழம்பின் வாசம், கனிந்த மாம்பழத்தின் அலுக்காத வாசம், அவித்த பனங்கிழங்கின் தீராத வாசம், மழை வர போவதை அறிவிக்கும் மண் வாசனை, சிறு குழந்தைகள் மேல் அடிக்கும் வசம்பு, மஞ்சள், சந்தனம் கலந்த வாசம், ஜவ்வாதின் கூர்மையான வாசம்…………. இப்படி எனக்கு பிடித்த நாற்றங்களை சொல்லி கொண்டே இருக்கலாம்!

இதே நாற்றம், என்னை ஒரு கால கட்டத்தில் ஓட, ஓட விரட்டியதுண்டு!! எப்போனு கேக்கரீங்களா, என் முதல் குழந்தையை கருவுற்று இருந்த அந்த நேரத்தில்! மசக்கையாய் இருந்த அந்த மூன்று மாத காலத்தை மறக்கவே முடியாது என் மூக்கின் மோப்ப சக்தி, ஒரு பழக்கபடுத்தப்பட்ட காவல் நாயை விட ஒரு படி அதிகமாகவே இருந்தது! கிட்டதட்ட ஒரு கி.மீ சுற்றளவில் எழும் அத்தனை நாற்றங்களும் எனக்கு அத்துபடி!

நாங்கள் அந்நேரம் குடியிருந்த வீடு , ஒரு மிக பிரபலமான, தேங்காய் எண்ணெய் கம்பெனிக்கு சொந்தமான, எண்ணெய் மில்லுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது!எனக்கு சிறு வயதில் இருந்தே, காயும் தேங்காய் எண்ணெயின் வாடை ஆகவே ஆகாது! என்னுடைய அம்மா, ஒவ்வொரு முறை பூரி, வடை சுடும் பொழுது எல்லாம், நான் பறந்து வெளியில் ஓடி விடுவேன்! எண்ணெய் வாடை அடங்கும் வரை, என் தரிசனம் வீட்டில் காண கிடைக்காது!

இப்போ, அருகிலேயே, எண்ணெய் மில், தேங்காய் எண்ணெய் வாசத்துக்கு என்ன பஞ்சமா, புதன் கிழமைதோறும், காயும் தேங்காய் எண்ணெயின் வாசம், காற்றில் நிறைந்து குப்பென்று வீச தொடங்கி விடும்! ஏற்கனவே, மசக்கையில் இருந்த எனக்கு, அந்த நாற்றம், என்னை அந்த நாள் முழுவதும் படுத்த படுக்கை ஆக்கி விடும்!! இது என்ன நாற்றம், தாங்க முடியவில்லை, என்று ஒவ்வொரு புதன் கிழமையும், என் கணவரிடம் சொல்லி , குழந்தை போல் அழுவதுண்டு!!

அவரோ, இந்த நாற்றம், புதன் கிழமைதோறும் வீச நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்! உனக்கு, உடம்பு சரி இல்லை என்று சொல்லி படுத்து கொள்வதற்கு, இது ஒரு சாக்கு, என்று வழக்கம் போல் வில்லன் முகத்தை காட்டி செல்வார்!! அவரையும் குறை சொல்ல கூடாது, அவர் என்ன நாலு தடவை கருவுற்றிருந்தாரா, மசக்கையின் துன்பங்களை அறிவதற்கு!!

அடுத்ததாக, வீட்டுக்குள்ளேயே என்னை ஒட ஒட விரட்டிய இன்னொரு வாசம், சாதம் கொதிக்கும் போது வரும் வாசம்! சாதம் வெந்து முடியும் வரை, சமையலறை கதவை மூடி வைத்து விட்டு பறந்து ஓடி விடுவேன்! முட்டைகோஸை வெறுத்தது கூட இந்த கால கட்டத்தில் தான்!

RICE BRAN OIL தெரியுமா?? இந்த எண்ணெய் ரொம்ப லைட், கொலஸ்டிராலை கட்டுபடுத்தும் என்று விளம்பர படுத்துவார்களே!! அது உண்மை தான் என்று, அந்த எண்ணெய்யை உபயோக படுத்திய போது தான் தெரிந்தது! அந்த எண்ணெய்யில் சமையல் செய்யும் பொழுது, அந்த எண்ணெய்யின் நாற்றம் தாங்க முடியாமல், சாப்பிடும் ஆசையே போய் விடும், இதை தான் அப்படி சொல்லி இருப்பார்களோ?? யார் கண்டார்!

இன்னும் சிறப்பாக என் மூக்கை பற்றி அறிய விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!!!


15 பின்னூட்டங்கள்

சுவையான நான் ஸ்டிக் உப்புமா செய்வது எப்படி

படம்

உப்புமா என்ற பெயரை கேட்டாலே, பலருக்கு எரிச்சல் தான் வரும்! இதை எல்லாம் யாரு கண்டுபிடிச்சா என்று எரிச்சல் படாதவர்களே கிடையாது! நானும், சில வருடம் முன்பு வரை, இந்த உப்புமாவை விரும்பி உண்டதில்லை! ஆனால், இப்பொழுது, அது எனக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று!

என்னது உப்புமா உன்னோட Favourite aah nu மயங்கி விழுந்துடீங்களா, Relax, அது ஒரு பெரிய கதை இல்லை, ஒரு சின்ன Flashback கதைதான்! எனக்கு கல்யாணம் ஆன புதிதில், எனக்கும், என் கணவருக்கும், முதன்முதலில் சண்டை வர காரணமாக இருந்தது இந்த உப்புமா! எனக்கு சமையல், அந்த சமயத்தில் அவ்வளவாக தெரியாது! என் கணவருக்கு, புதிது புதிதாக சமையல் செய்து, செய்து என்னை நானே பழக்கி கொண்டிருந்தேன்! எவ்வளவு நாள்தான் என் சமையலை பிடித்த மாதிரியே நடிப்பது, என்னை பழி வாங்க அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் இந்த உப்புமா!

ஒரு நாள் என்னை அழைத்து கேட்டார், ‘ உப்புமா செய்ய தெரியுமா?’ ‘ஓ! நல்லா தெரியும்’, ‘அப்போ இன்னிக்கு அதையே செஞ்சிடு’னு சொன்னார்! ‘OK , அது என்ன பிரமாதம்’ நு, நானும் ரவையை சிறிது வறுத்து, அதை தனியாக எடுத்து வைத்தேன்! பின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நன்கு வதக்கி, ரவைக்கு இரண்டு பாகம் தண்ணீர் விட்டு, அது கொதித்த உடன், சிறிது உப்பு போட்டு,ரவையை சிறிது சிறிதாக போட்டு, மிதமான தீயில், ரவையில் கட்டி விழாமல், கிளறி முடித்தேன்! அதற்கு பொருத்தமாக சாம்பாரையும் செய்து, ஆசையோடு, என் கணவரிடம் தட்டை நீட்டினால், ‘இது என்ன உப்புமா கேட்டா களி குடுக்கர’, என்று முறைத்தார்!

‘நீயே சாப்பிடு’ நு சொல்லிட்டு அவர் வேலையில் மூழ்கினார்! என் கணவரின், முதல் கோப முகம், நான் முதன் முதலில் செஞ்ச உப்புமாவை களி என்று சொன்னது, நான் ஆசையொடு செய்த உப்புமாவை அவர் சாப்பிடாமல் தவிர்த்தது என்று எல்லாம் சேர்த்து என்னை அழ, அழ செய்தது! அழுகையோட சேர்த்து கோபமும் பொத்து கொண்டு வந்தது!

‘Afterall ஒரு உப்புமா, இதுக்காக ஒரு சண்டையா! எங்க ஊரில் எல்லாம் உப்புமா இப்படிதான் செய்வார்கள்’, என்று கூறினேன்! என் கணவரும் விட வில்லை, ‘நான் என்ன உங்க அப்பாவா, நீ என்ன சமைத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல’, என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்! ‘நல்லா உப்புமா செய்யிர பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிங்கோங்க’,னு என் பங்குக்கு நானும் வார்த்தைகளை வீசினேன்! ‘இந்த வில்லனை எங்கப்பா பிடிச்சீங்கனு’ என் அப்பாவை மனதினுள் திட்டினேன்!

என்ன இருந்தாலும், புது பெண் இல்லையா, சண்டையை பெரிது படுத்த விரும்பாமல், எள்ளும் கொள்ளும், முகத்தில் வெடிக்க, எரிச்சலோடு உப்புமாவை விழுங்கி முடித்தார்! ‘அடுத்த தடவை உப்புமாவை நான் செய்யரேன், வெங்காயம் மட்டும் வெட்டி வை ‘,நு சொன்னார்! அந்த நாளும் வந்தது, எனக்கோ, பயங்கர ஆவல், எப்படி உப்புமா செய்யரார்னு பாத்துடலாம்! யார் செஞ்சா என்ன, உப்புமா, உப்புமா மாதிரி தான வரும்! அவருக்கு மட்டும் என்ன ஸ்பெசலாவா வந்துடபோது!!

ஆரம்பித்தார், தன் நள பாகத்தை, எனக்கோ உள்ளுக்குள் ஒரு நமுட்டு சிரிப்பு! ரவையை வறுக்கவே இல்லை அவர்! ஒரு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி நெய் விட்டு, அவை காய்ந்த உடன், வெங்காயம், பச்சை மிளகாய், வெட்டி வைத்த ஒரு தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, நல்ல தீயில் மின்னல் வேகத்தில் வதக்கினார்! நொடியில் தக்காளி மறைந்து போயிற்று! பின்பு, ரவையின் பங்குக்கு, ஒரு மடங்குக்கும், சற்றே குறைவான தண்ணீரை ஊற்றி, அது கொதிக்க ஆரம்பித்தவுடன்,சிறிது உப்பு போட்டு, முழு தீயில், ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அவசர கதியில் கிளறி முடித்தார்! ஒரு கரண்டி சீனியும் கொதிக்கும் தண்ணீரில் வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம்!

ரவை உப்புமா, பார்க்கவே அழகாக இருந்தது! தக்காளி தன் நிறத்தை சற்றே உப்புமாவுக்கு கொடுத்திருந்தது! ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், மணல் போல அழகாக வெந்து இருந்தது! ஒன்றும் தொட்டு கொள்ளாமலே, சாப்பிட மிக அருமையாக இருந்தது! உப்புமா கூட இவ்வளவு சூப்பரா செய்ய முடியுமா, என்னோட வில்லன் இப்போ ஹீரோவா தெரிந்தார்!!!