எப்படி பேக்கில் குறிப்பிடப்பட்ட தேதி முடிந்தவுடன் அதனுள் இருக்கும் பொருட்கள் காலாவதி ஆகி விடுகின்றதோ அது போல் 2005 வருடத்துக்கு முன்னே அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31 தேதிக்கு பிறகு செல்லாது மேலும் வருடமே அச்சடிக்கப்படாத ரூபாய் நோட்டுக்களும் சேர்ந்தே காலாவதியாகின்றன…. விரைந்து காலி செய்து விடுவது நலம்!
அணிலின் முதுகில் இராமர் இட்ட மூன்று கோடுகள் போல இந்த பூச்சியின் முதுகில் ராணி காமிக்ஸ் மாயாவி முத்திரை பதித்திருப்பாரோ டவுட்…
கணவனை கண் கண்ட தெய்வமாய் மதிக்கும் எந்த ஒரு மனைவியின் கணவரே.. நீங்கள் உங்களை அலாதீனாக நினைத்து கொண்டாலும் தவறில்லை.. உங்கள் மனைவியை ஜாஸ்மின் ஆக கூட நினைக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை… ஆனால் விளக்கில் அடைபட்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் பூதமாய் உங்கள் மனைவியை நடத்தாமல் இருக்கலாமே!!
இருட்டில் நம் கண்ணுக்கு புலப்படும் பொருட்கள் நம் அப்போதைய மனநிலையையும் நம் கற்பனை திறனையும் பிரதிபலிப்பவை!
இதுக்கு ஒரு சாக்கு பை வாங்குவது எவ்வளவோ தேவலை.. Lotte Choco Pie!
ஆவிகளுக்கு கால்கள் கிடையாது இது உலகம் அறிந்த உண்மை.. ஆனால் சத்தியமாக கைகள் உண்டு இது நான் அறிந்த உண்மை.. அய்யோ! பளாரென்று எப்படி அறை விடுது தெரியுமா முகத்திலே இட்லி குக்கரை திறக்க முற்படும் ஒவ்வொரு தருணமும்!
எங்க வீட்டிலேயும் ஒரு CCTv கேமிரா மாட்டினால் என்ன என்று பலமாக யோசிக்கிரேன்.. பின்னே வாங்கியே வராத கொய்யா பழங்களை எங்கே என்று குற்ற பத்திரிக்கை வாசிக்கும் கணவருக்கு இனி வரும் காலங்களில் மெய்பிப்பதற்க்கு!!
வேண்டாம் என்று தான் முதலில் நினைத்தேன் ஆனால் இந்தா வைத்து கொள் என்று கூப்பிட்டு குடுத்த போது வேண்டாம் என்று சொல்ல வார்த்தை வராது விரும்பி இரு கை நீட்டி வாங்கி கொண்டேன் அந்த பச்சை மண்ணு பிள்ளையை… அழகாய் வசீகரித்த அவனை பார்த்து பார்த்து பத்திரமாய் கூட்டத்தில் இடி படாமல் நெஞ்சோடு சேர்த்து வீடு வந்தோம் அக்கம்பக்கத்தினரை அழைத்து அழைத்து அவனை காண்பித்து அவர்கள் மனம் திருடி கொண்டோம் ஆசை ஆசையாய் செய்த பால் கொழுக்கட்டையை ஊட்டி மகிழ்ந்தோம் இந்த பச்சை மண் பிள்ளையின் ஈரம் கூட காயவில்லை அதற்குள் அவனை ஆற்றிலேயோ குளத்திலேயோ தொலைத்து விட்டு வர வேண்டுமாமே என்ன ஒரு அநியாயம் இதற்கு தான் மனம் முதலிலேயே அடித்து கொண்டதோ வேண்டாம் வேண்டாம் என்று!
மதியம் 3:30 மணிக்கு சிறிது கண் அசந்து தூங்க நினைத்து சாயுங்காலம் 4:30 மணிக்கு எழ அலாரம் வைத்து இடையே உள்ள 1 மணி நேரத்தில் 40 தடவை மணி ஆயிற்றா என்று உள்ளம் பதைத்து பதைத்து எழுந்து பின் உறங்கியும் உறங்காமலும் எழுந்து அலாரத்தை பொறுப்பாக அணைத்து விட்டு தலை வலிக்க வலிக்க எழுந்தால் அதுவே குட்டி மதிய நேர தூக்கம்!!
எங்கோ இருக்கும் நெசவாளி தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான் என்று நினைத்து கொண்டே நெய்வார்.. கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு கேட்டுட போவுது!!
எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றாலும் அங்கே வரும் அழகான மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான் முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம் பெருமையடிக்கும் ஆண்களே…. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் மனைவி அந்த பெண்ணை பார்த்து பெருமூச்சு விட்டு கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள் தப்பிச்சிட்டியேடி!!!
பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி இருக்கும் போது தான் ஃபோன் வரும்.. கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட நீ எடுடா என்று பையனை கை நீட்ட அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை காதில் வைத்து விட்டு பொய்யான வருத்தம் குரலில் தொணிக்க சொன்னான் ‘என்னது ஸ்கூல் லேதா???’ அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு கொண்டு இருந்தார்….. அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!
‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க இல்லையா டொரேமான் ஸ்டிக்கர் வாங்கிடுங்க… எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு இந்த இரண்டும் தான் புடிக்கும்’ ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில் கொண்டாட போகும் என் பையன்!!
யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் இருப்பதற்க்காக அணிய படுகின்ற உடைகள் கூட பளிச் பளிச் என்று கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி பார்க்க வைக்கிறது . . . . வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பர்தாக்கள்!!!
புயல் கரையை கடப்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வகம் அவ்வப்பொழுது எச்சரிக்கை விடுவதுண்டு!
இப்படி முன்னெச்சரிக்கை கொடுப்பதால், ஏராளமான மீனவர்களுடைய உயிர் காப்பற்றப்படுகிறது!
அதே போல் நம்முடைய வாழ்க்கைப்பாதையில் நடை பெற போகும் துரதிருஷ்டமான சம்பவங்கள் பற்றி ஒருவருக்கு முன்னெச்சரிக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்…….
இது தான் ‘FINAL DESTINATION’ ஆங்கில படத்தின் ஒரு வரி கதை!!
சிறு வயதில் இருந்தே, திரில்லர் படங்களின் மீது ஒரு ஆர்வம் உண்டு, இப்படி ஒரு படம் எப்பொழுது வந்தது என்று இப்படத்தை பார்க்கும் வரை சத்தியமாக தெரியாது! அன்று ஒரு நாள் ஏதேச்சையாக இப்படத்தை சில நிமிடங்கள் பார்க்க நேர்ந்தது!
படத்தின் ஹீரோ, தன் அலுவலக பேருந்தில் பயணம் செய்கிறான், அப்பேருந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக, நட்ட நடு பாலத்தில் நின்று விடுகிறது!
நல்ல உயரமான, பழமையான பாலம் அது! பாலத்தின் ஒரு ஒரமாக, அதை செப்பனிடும் பணி வேறு நடை பெறுகிரது! இதை பேருந்தின் ஜன்னல் வழியாக கவனித்து கொண்டிருந்த நம் ஹீரோவுக்கு ஒரு PREMONITION, அதாவது ஒரு முன்னெச்சரிக்கை ஒரு கனவு போல ஒரு நொடியில் அவன் கண் முன்னே வந்து செல்கிறது!
அந்த பாலம் உடைய போவதாகவும், அதில் அவனுடன் பயணம் செய்தவர்கள், அனைவரும் மிக குரூரமாக மரணத்தை எதிர் கொள்வது போலவும் வந்தது அந்த PREMONITION!!
ஹீரோவும் உடனே எல்லோரையும் எச்சரிக்கை செய்கிரான்! அவன் வார்த்தைகளை நம்பியோர் பேருந்தை விட்டு இறங்கி, பாலத்தை கடந்து உயிர் தப்பி விடுகின்றனர்! அவனுடைய வார்த்தையை நம்பாதவர்கள் தத்தம் சாவை எதிர் கொள்கின்றனர்!!
தப்பித்த எல்லோரும் ஹீரோவை பாராட்டிவிட்டு செல்கின்றனர்! இதோடு படம் முடிந்து விட்டதா என்ன, அது தான் இல்லை, இப்போதான் படமே ஆரம்பிக்கின்றது!!
விபத்தில் தப்பித்தவர்கள், ஒருவர் பின் ஒருவராய், ஒரு ‘CHAIN OF DEATH’ போல, ஏதாவது ஒரு விபத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர்! பாலம் உடைந்த விபத்தில், சாவில் இருந்து தப்பித்தவர்கள், உண்மையாக பாக்கியசாலிகள் இல்லை, அவர்களுக்காக சாவு சிகப்பு கம்பளம் விரித்து, காத்து கொண்டிருக்கிறது என்பதை தாமதமாக தான் புரிந்து கொள்கின்றனர்!
ஒரே ஒரு option தான் அவர்களுக்கு, ஒன்று அந்த CHAIN OF DEATH ஐ break up செய்ய வேண்டும், இல்லை தனக்கு வரவிருக்கும் சாவை, வேறு யார் மீதாவது திருப்பி விட வேண்டும்!
அந்த பாலம் உடைந்த அப்பவே, இவர்கள் எல்லாம் தங்கள் உயிரை விட்டிருக்கலாம் என்று ஒரு உணர்வு எனக்கு தோணாமல் இல்லை! அவ்வளவு கொடுமையான சாவு அவர்கள் எல்லோருக்கும்! நான் தொலைகாட்சியில் இப்படத்தை, முதல் 15 நிமிடங்கள் தான் பார்த்தேன், பிறகு ஆர்வ கோளாறில், அப்படத்தை internet இல் download செய்து பார்த்தேன்!
நான் செய்த பெரிய தவறு அது தான்! யாரவது எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்து இருந்திருக்கலாம்! இந்த படம் 5 பாகங்களாய் வெளி வந்திருக்கிறது ! ஐந்துமே BOX OFFICE HIT!
ஒவ்வொரு பாகங்களிலும், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஒரு PREMONITION வருகிறது, அந்த நொடியில், ஹீரோவை சுற்றி இருக்கும் அனைவரும் காப்பாற்ற பட்டு, பிறகு எப்படி எப்படி எல்லாமோ, ஒருவர் மாற்றி ஒருவராய் தங்கள் உயிரை கொடுமையாக விடுகின்றனர் என்பதே இப்படத்தின் கதை! கடைசியாய் நம்ம ஹீரோவும் உயிரை விட, படம் முடிவடைந்து நன்றி, வணக்கம் போடுகின்றனர்!!!
நான் இவை ஐந்தில், ஒரு பாகத்தை, சில மணி நேரம், பார்ப்பதற்குள்ளாகவே, எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது! எங்க படம் பார்க்கும், நம்மையும் போட்டு தள்ளீருவாங்களோனு ஒரு பயமே வந்திருச்சு!!
இந்த மாதிரி படங்கள் எப்படி தான் சக்கை போடு போட்டதோ, ஆறாவது பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடை பெற்று கொண்டிருக்கிரதாம், ஹ்ம்ம் கலிகாலமப்பா……
நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம் அறிந்தும், சில விஷயங்கள் நாம் அறியாமலும் நடந்து விடுகின்றன! அவற்றில் ஒன்று தூக்கம்! தூக்கம் வருகிறது என்று தூங்க செல்பவர்களை விட, ஏதாவது வேலையில் தன் முழு கவனத்தை செலுத்தி கொண்டு இருக்கும் போது தூங்கி விடுபவர்கள் தான் அதிகம்! அந்த வகையில் தூங்குபவரில் நானும் ஒருத்தி!
எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம், தூங்க செல்வதற்கு முன், ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்பது! கண் அயறும் வரை வாசித்து விட்டு,அப்படியே படுத்து உறங்கியும் விடுவேன்! சொல்லுவார்களே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும், அது உண்மைதான் போல! அதுவும் , குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கும் போது, இப்படி தூங்கி வழிந்தால் எப்படி சரியாக வரும்! சத்தியமாக சொல்லுகிறேன், பாடம் சொல்லி குடுக்க ஆரம்பிக்கும் போது, ரொம்பவும் உற்சாகமாக தான் ஆரம்பிப்பேன், திடீறென்று என்ன நடக்கும் என்றே தெரியாது, கண்கள் சொறுகி கொண்டு தூக்கம் வரும்! என்னால் கொஞ்சம் கூட தூக்கத்தை அடக்க இயலாது! என் பெரிய மகனுக்கு, இப்படி அம்மா தூங்குவதை பார்த்து பார்த்து பழக்கம்தான், அப்ப அப்ப எழுப்பி விட்டு கொண்டே இருப்பான், அவன் ஒன்றை மட்டும் திருப்பி திருப்பி கூறுவான், ‘அம்மா ஸ்கூல் டைரியில் மட்டும், என் மகன் வீட்டு பாடங்களை ஒழுங்காக படித்து விட்டான், என்று எழுதி , உங்கள் கைய்யொப்பம் இட்டு விட்டு, பிறகு உறங்குங்கள்’ என்று!! அவன் கவலை அவனுக்கு! சில நேரம், என் பெரிய மகனிடம், ‘டேய் பிளீஸ் டா! ஒரு பத்து நிமிடத்தில் எழுப்பி விட்டு விடு ‘ என்று சொல்லி விட்டு உறங்கிய நாட்களும் உண்டு!
நான் சிறு வயதில் படித்த காலத்திலும், இதே கதைதான், என் அம்மாவிடம், பாடம் படித்து கொண்டிருக்கும் போதே, ‘அம்மா, என்னை ஒரு அரை மணி நேரம் உறங்க அனுமதியுங்கள்’, என்று கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது ! நான் படித்த பள்ளியிலும், ஒரு முறை, ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, இதே போல் தூங்கி வழிந்திருந்தால் கூடபரவாயில்லை, நான் அன்று தூக்கத்தில் எழுந்து பேசவே செய்தேன்! அந்த ஆசிரியை, ரொம்ப கண்டிப்பானவர், ஆனால் அன்று நான் உளறியதை பார்த்து சிரித்தே விட்டார்!அப்பவே அப்படீனா, இப்ப சொல்லவா வேணும்!
என் கடை குட்டி மகனும், இப்போ ஸ்கூல் செல்ல ஆரம்பித்துவிட்டான்! அவனுக்கு படிப்பது என்றாலே, பாகற்க்காய் சாப்பிடுவது போல! அவன் கவனிக்கிரானோ இல்லையோ, நான் அனைத்து பாடங்களையும் அவன் காதுக்குள் ஓதிக் கொண்டே இருப்பேன்! ஒரு நாள் அதே மாதிரி ஓதி கொண்டு இருக்கும் போது, திடீறென்று விழித்து பார்த்தேன், என் கடைகுட்டி பையன், ஓட்ட பந்தயகாரர்கள் ஓடுவதற்காக ரெடியாக தன் காலை மடக்கி இருப்பது போல், அவனும், அம்மா நன்கு தூங்க ஆரம்பித்தவுடன் ஓட ரெடியாக காத்து கொண்டிருந்தான்!! எனக்கு, அந்த காட்சியை பார்த்தாவுடன் அழவா, சிரிக்கவா என்றே புரியவில்லை!
இப்போது எல்லாம் நான் ரொம்ப உஷார், தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பதில்லை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கும் நேரங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கிறேன்! ரொம்பவும் முக்கியமாக எனது கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்கின்றேன்! அறியாமல் நடந்த இந்த விஷயத்தை , ஆராய்ந்து, அறிந்து, சிறிது, சிறிதாக முழுதாக களைந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, பார்க்கலாம்!!!!!