இரண்டுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு.. இரண்டுமே குளிரை விரட்டி சூட்டை வரவேற்பவை.. ஹோலி Vs கோழி!!
கிண்டிய அல்வா வாயில் கோந்து ஆன கதைகள் நிறைய கேட்டதுண்டு வாய் விட்டு சிரித்ததுண்டு ஆனால் நானே என் கையால் முதன் முறையாய் சிரமப்பட்டு செய்த பீட் ரூட் அல்வாவை வாயில் வைத்த போது என்னால் சிரிக்க முடியவில்லை ஏனெனில் வாயை திறக்க முடிந்தால் தானே வாய் விட்டு சிரிப்பதற்கு!!
டீவீ விளம்பரத்தில் ஒரு பெண் கையில் வயர் மெஷ்ஷை பிடித்தபடி சப்பாத்தியை துளி கூட எண்ணெய் இல்லாமல் கும்முனு பூரி போல் எழும்ப செய்து தட்டில் இடுவதை மிகுந்த ஏக்கத்துடன் பார்த்த என் கணவர் சந்தடி சாக்கில் என்னையும் ஸ்க்ரீனையும் மாறி மாறி நோக்க அவரை முழுதும் புரிந்தவளாய் பதில் அளித்தேன்… கவலைபடாதீர்கள்.. சீக்கிரமே பெண்ணை பேசி முடித்து விடலாம்!!
காத்திருக்கும் அறைகளில் போடப்படும் ஒன்றோடு ஒன்று இணைந்த இருக்கைகளில் ஓரமான இருக்கையில் அமர்வதும் இலவசமாக மானத்தை தண்டோரா போட்டு கப்பலில் ஏற்றுவதும் ஏறக்குறைய ஒன்று தான்!!
நடு இரவு 2:30 மணிக்கு விழிப்பு தட்டும் போது முழுதாய் உறங்காமல் பாதியில் எழுந்து விட்டோமே என்ற மனக்குறையை விட ஆஹா.. இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறது விடிய என்ற சந்தோஷ எண்ணமே மேலோங்குகிறது!!
யாரேனும் ஒருவர் ஆரஞ்சு பந்து வாங்கி வருகிறேன் என்று ஆரஞ்சு பழம் வாங்கி வந்தால் அவங்கதான் ஆந்திராகாரர் தெரிஞ்சிகோ!!
நாங்க குடி இருக்கிற வீட்டுக்கும் ராம்லீலா படத்தில் வரும் தீபிகா படுகோனுக்கும் நேற்று மதியத்தில் இருந்து சரியாக இன்னும் இரண்டரை மாதம் வரை ஒரு தவிர்க்க முடியாத ஒற்றுமை உண்டு..
ஆட்டோவில் தனித்து பயணம் செய்யும் போது கூட வராத பயம்.. ஆட்டோவின் சீட் தனித்து பிய்த்து கொண்டு முன்னே வரும் போது முந்தி அடித்து கொண்டு வந்து விடுகிறது!!
சன் லைட் பட்டவுடன் ஆக்டிவேட் கூட ஆக வேண்டாம் ஒரு லைட் எரிய கூடாதா பேனா மேல ஒரு க்ரிஸ்டல் வெச்சுட்டு விலை 80 ரூபாயாம் இந்த அநியாயத்தை தட்டி கேக்க யாருமே இல்லையா க்ரிஷ் பேனா!!
மனம் நொந்து நூடுல்ஸ் ஆகும் தருணம்.. மிக சுவாரசியமாக எதேனும் புக் படித்து கொண்டே ஸ்னேக்ஸ் உள்ளே தள்ளும் போது திடீரென்று கைகள் தடவி பார்த்து உணர்த்தும் தட்டு காலி என்பதை!!
ப்பா.. என்னா மூளை என்னா தைரியம் என்னா தன்னம்பிக்கை எவ்வளவு துன்புறுத்தினாலும் இந்த கருமாந்திரம் புடிச்ச சரவணபவன் டீயை குடித்து முடிக்கும் வரை இவள் கவனம் சிதறாது என்று மணிகட்டை குறி பார்த்து ஸ்ட் ராங்கா ஒரு கப் இரத்தம் குடிக்கும் சென்னை சென்ட் ரல் ஸ்டேஷன் கொசு!!
வடகம் மீது திடீர் ஆசை வந்த பையனுக்காக எண்ணெய்யை அடுப்பில் வைத்து விட்டு காத்து நின்ற போது இன்னுமா பொறிக்கவில்லை என்று பொறுமை சிறிதும் இன்றி வடகத்தை எண்ணெயில் கவிழ்க்க வந்தவனை கண்டு ஆக்கப் பொறுத்தவருக்கு இப்படி ஒரு மைந்தனா என்று மனம் நொந்தவாறே அவனை தடுத்து நிறுத்தி விட்டு சொன்னேன் பொறு இன்னும் காயவில்லை… என்னம்மா சொல்றீங்க வடகத்தை தொட்டு பாருங்க இதுக்கு மேலாகவா காய வேண்டியிருக்குது… என் அறிவு கொழுந்தே என் அவசர குடுக்கையே நான் சொல்ல வந்தது இன்னும் எண்ணெய் காயவில்லை என்று!!
அம்மா சீக்கிரம் வாங்க பாருங்க புதுசா ஒரு பென் இதுல கேமரா இருக்கு வீடியோ ரெகார்ட் பண்ணலாம் 16ஜீபீ Extendable Memory எழுத வேற செய்யுமாம் உண்மையான விலை ரூ.8000 ஆனா இங்க ஆர்டர் செஞ்சா வெறும் ரூ.1990 மட்டும்தானாம் சூப்பரா இருக்குல்ல ப்ளீஸ் வாங்கி தர்றீங்களா.. டேய் இதெல்லாம் சுத்த வேஸ்ட் போங்கமா நீங்க தான் சுத்த வேஸ்ட் ஓஹோ.. அப்போ நான் அந்த பென்னை ஆர்டர் பண்ணி வாங்கி தருகிறேன் ஆனா ஒரு கண்டிஷன் இனி இந்த பெண் உனக்கு எந்த விதத்திலும் உதவாது சம்மதமா???
என்னது.. வராமல் வந்த
மாப்பிள்ளை என்ன குறையை
கண்டுவிட்டார் என்று இப்படி
முறுக்கி கொண்டு ஓடுகிரார்!
என் துணிகளை எல்லாம்
இன்றாவது வாழ sorry காய
வைத்துவிடலாம் என்று பார்த்தால்
ஒன்றும் நடக்காது போலையே..
மேகங்களின் பின் ஒளிந்து
கொள்ளும் மழை காலத்து சூரியன்!!!
கடல் மாதிரி வீடு என்ற
ஆசை வார்த்தையை நம்பி
மோசம் போய் விடாதீர்கள்
அங்கே வேலைகள் ஓய்வதில்லை!!
இந்த பல்லும் ஒரு நாள்
சூத்தையாகும் என்பது
தெரிந்த ஒரு விஷயம் தான்..
அதுக்காக விழுந்து விழுந்து
இரண்டு வேளை பல்லை தேய்க்கனும்
ரூட் கேனால் பண்ணனும்
ஸ்டெம் கேனால் பண்ணனும்
அப்படியெல்லாம் எந்த ஒரு
அவசியமும் இல்லை
.
.
பூண்டு பல்!!
இன்று ஒரு பூனை
அது வசிக்கும் வீட்டினுள்
இருந்து வெளியே கிளம்ப
எத்தனிக்கையில் நான் குறுக்கே
வந்துட்டேன், இந்த சகுனம்
நல்லதா கெட்டதா பூனைக்கு!!
கோதுமை மாவை
தண்ணீர் விட்டு பிசைந்து
உருண்டைகள் இட்டு
அதை கல்லில் போட்டு
வட்டமாக தேய்த்து
எண்ணெய் காய்வதற்கு
முன்பே பூரிகள் இட
முயற்சித்தால் உங்கள்
மூளை இன்னும் சரி வர
காய ஆரம்பிக்கவில்லை
என்று அர்த்தம்!!
ஒரு நாள் தாங்கி பிடித்தேன் மறு நாள் கை நழுவ விட்டேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா….. என் உயிர் கை பேசியே!
உளுந்தை ஊற வைத்து நன்கு அரைத்து உப்பு, வெங்காயம், மிளகாய், கரிவேப்பிலையுடன் சிறிது அன்பையும் சேர்த்து துளி கூட எண்ணெய் குடிக்காமல் சுட சுட மெது வடை சுட்டு குடுத்து விட்டு ஆசையுடன் கணவரின் விமர்சனத்தை எதிர்பார்த்தால் நன்கு ருசித்து புசித்து விட்டு சொல்வார் உளுந்து நல்ல உயர்ந்த ரகம் போல என்று.. முடிவு செய்தாயிற்று இனி அடுத்த வாரம் வடை சுடுவதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் இதே உளுந்தை கொஞ்சம் போட்டு ஸ்பூன் போட்டு குடுத்து விட வேண்டியது தான்!!
நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு சொல்ல முடியாது ஆனா மசாலா நெடி மூக்குல ஏறுகிர ஒவ்வொரு நொடியும் கண்டிப்பா வந்தே தீருவேன் . . தும்மல்!
வைரசுக்கும் என் மூச்சு குழாய்க்கும் இடையே நடந்த ‘வைரஸ்ஸே வெளியேறு’ போராட்டத்தின் உச்ச கட்டமாய் மூக்கடைத்து தன் வேலை நிறுத்தத்தை பகிரங்கமாய் உடம்புக்கு அறிவித்து இருக்கிறது என் மூக்கு!!
அடேங்கப்பா! ‘Opposite poles attract each other’ என்று சும்மாவா சொன்னாங்க தன் கடைசி ஆவி பிரியும் வரை ரெண்டும் இந்த கடலை போடுது . . . . கடாயில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய்யை ஏதேச்சையாக சந்தித்த தண்ணீர் துளிகள்!!
அரிசி வாங்கும் பொழுது பழைய அரிசியா என்று கேட்டு வாங்குங்கள் இல்லையேல் புளியோதரை போட நினைக்கும் தினங்களில் தயிர் சாதம் மட்டுமே சாத்தியமாகும்!!
துவைத்து இரண்டு நாட்களே ஆன நிலையில் மீண்டும் உங்கள் வீட்டு மேஜை விரிப்பில் சாம்பார் சிந்தி கறையாகி விட்டதா…… கவலை வேண்டாம் ஒரிரு நாள் அப்படியே விட்டு விடுவீர்களாயின் கறை காய்ந்து ஒரே சுரண்டலில் உதிர்ந்து காணாமல் போய் விடும்!!
தயவு செய்து உங்கள் சமையலறையில் உள்ள உளுந்தம்பருப்பு டப்பாவை திறந்து நுகர்ந்து பார்த்து விடாதீர்கள் மீறினால் . . . . முனி அடித்து விடும்!!
பித்தத்தினால் ஏற்படும் தலை சுற்றல், உமட்டல் போன்ற நம் உடம்பில் தோன்றும் அறிகுறிகள் காணாமல் போவதற்காக தேனீரில் தட்டி சேர்க்கப்படும் இஞ்சியை சற்று நிதானத்தோடே தட்டுங்கள் இல்லையேல் தட்டிய தட்டில் இஞ்சி காணாமல் போவது நிச்சயம்!
எவ்வளவு மருந்து உட்கொண்டாலும், side effect கிடையாது, மருந்து கசப்பு துளி கூட தெரியாது, எல்லா வித பிரச்சனைக்கும் சுலபமான தீர்வு, என்று, மூச்சுக்கு முந்நூறு தடவை, கோமதி டாக்டர், புகழ் பாடும், பூக்கார அக்காவின் புகழாரங்களாள், ‘யாரந்த, MULTI SPECIALITY DOCTOR’, என்று,வியந்த எனக்கு, போர்டை பார்க்கும் வரை, சத்தியமாக புரியவில்லை, அது கோமதி டாக்டர் அல்ல, ஹோமியோபதி டாக்டர் என்று!!!
எண்ணெய் விக்கிர விலைக்கு, இப்போதெல்லாம், குழம்பு செய்யும் போது , சமையல் குறிப்பில், சொன்னபடி, எண்ணெய் தெளிய விட்டு, எல்லாம் இறக்குவதில்லை, பேருக்கு,சிறிது எண்ணெய் தெளிப்பதோடு சரி!!!
தீராத தொண்டை வலிக்கு இதமாக, ஒரு கப் சூடான காபி குடிக்க எண்ணி, பாலை சுட வைத்து, ஒரு கரண்டி காபி தூளும், சர்க்கரையும் இட்டு, பின்பு, காபி தூள், அதிகமான காரணத்தினால், சிறிது பால் சேர்த்து, கசப்பு சுவையை குறைக்க, சிறிது சர்க்கரை சேர்த்து, இப்படி மாத்தி, மாத்தி, ஒவ்வொன்றாக, கூட்டி, பின்பு குறைத்து, ஒரு டம்ளர் காபி, இரண்டாக ஆகி, அடுத்த நாள் காலை, பித்தம் தலைக்கேறி, தலை கிறுகிறுத்தது தான் மிச்சம்!! இதுக்குதான், அப்ப அப்ப, BRU இரண்டு ரூபாய் சஷே வாங்கி, எனக்கு ரொம்ப பிடித்த காபியை,
எந்த அளவுக்கு நல்லா போட தெரியும்னு,
அப்பப்ப டெஸ்ட் பண்ணி இருக்கனும்!! எப்பவாது, காபி போட்டா இப்படித்தான்!!!
உப்புமா என்ற பெயரை கேட்டாலே, பலருக்கு எரிச்சல் தான் வரும்! இதை எல்லாம் யாரு கண்டுபிடிச்சா என்று எரிச்சல் படாதவர்களே கிடையாது! நானும், சில வருடம் முன்பு வரை, இந்த உப்புமாவை விரும்பி உண்டதில்லை! ஆனால், இப்பொழுது, அது எனக்கு பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று!
என்னது உப்புமா உன்னோட Favourite aah nu மயங்கி விழுந்துடீங்களா, Relax, அது ஒரு பெரிய கதை இல்லை, ஒரு சின்ன Flashback கதைதான்! எனக்கு கல்யாணம் ஆன புதிதில், எனக்கும், என் கணவருக்கும், முதன்முதலில் சண்டை வர காரணமாக இருந்தது இந்த உப்புமா! எனக்கு சமையல், அந்த சமயத்தில் அவ்வளவாக தெரியாது! என் கணவருக்கு, புதிது புதிதாக சமையல் செய்து, செய்து என்னை நானே பழக்கி கொண்டிருந்தேன்! எவ்வளவு நாள்தான் என் சமையலை பிடித்த மாதிரியே நடிப்பது, என்னை பழி வாங்க அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் இந்த உப்புமா!
ஒரு நாள் என்னை அழைத்து கேட்டார், ‘ உப்புமா செய்ய தெரியுமா?’ ‘ஓ! நல்லா தெரியும்’, ‘அப்போ இன்னிக்கு அதையே செஞ்சிடு’னு சொன்னார்! ‘OK , அது என்ன பிரமாதம்’ நு, நானும் ரவையை சிறிது வறுத்து, அதை தனியாக எடுத்து வைத்தேன்! பின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நன்கு வதக்கி, ரவைக்கு இரண்டு பாகம் தண்ணீர் விட்டு, அது கொதித்த உடன், சிறிது உப்பு போட்டு,ரவையை சிறிது சிறிதாக போட்டு, மிதமான தீயில், ரவையில் கட்டி விழாமல், கிளறி முடித்தேன்! அதற்கு பொருத்தமாக சாம்பாரையும் செய்து, ஆசையோடு, என் கணவரிடம் தட்டை நீட்டினால், ‘இது என்ன உப்புமா கேட்டா களி குடுக்கர’, என்று முறைத்தார்!
‘நீயே சாப்பிடு’ நு சொல்லிட்டு அவர் வேலையில் மூழ்கினார்! என் கணவரின், முதல் கோப முகம், நான் முதன் முதலில் செஞ்ச உப்புமாவை களி என்று சொன்னது, நான் ஆசையொடு செய்த உப்புமாவை அவர் சாப்பிடாமல் தவிர்த்தது என்று எல்லாம் சேர்த்து என்னை அழ, அழ செய்தது! அழுகையோட சேர்த்து கோபமும் பொத்து கொண்டு வந்தது!
‘Afterall ஒரு உப்புமா, இதுக்காக ஒரு சண்டையா! எங்க ஊரில் எல்லாம் உப்புமா இப்படிதான் செய்வார்கள்’, என்று கூறினேன்! என் கணவரும் விட வில்லை, ‘நான் என்ன உங்க அப்பாவா, நீ என்ன சமைத்தாலும் நல்லா இருக்குனு சொல்ல’, என்று எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்! ‘நல்லா உப்புமா செய்யிர பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிங்கோங்க’,னு என் பங்குக்கு நானும் வார்த்தைகளை வீசினேன்! ‘இந்த வில்லனை எங்கப்பா பிடிச்சீங்கனு’ என் அப்பாவை மனதினுள் திட்டினேன்!
என்ன இருந்தாலும், புது பெண் இல்லையா, சண்டையை பெரிது படுத்த விரும்பாமல், எள்ளும் கொள்ளும், முகத்தில் வெடிக்க, எரிச்சலோடு உப்புமாவை விழுங்கி முடித்தார்! ‘அடுத்த தடவை உப்புமாவை நான் செய்யரேன், வெங்காயம் மட்டும் வெட்டி வை ‘,நு சொன்னார்! அந்த நாளும் வந்தது, எனக்கோ, பயங்கர ஆவல், எப்படி உப்புமா செய்யரார்னு பாத்துடலாம்! யார் செஞ்சா என்ன, உப்புமா, உப்புமா மாதிரி தான வரும்! அவருக்கு மட்டும் என்ன ஸ்பெசலாவா வந்துடபோது!!
ஆரம்பித்தார், தன் நள பாகத்தை, எனக்கோ உள்ளுக்குள் ஒரு நமுட்டு சிரிப்பு! ரவையை வறுக்கவே இல்லை அவர்! ஒரு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி நெய் விட்டு, அவை காய்ந்த உடன், வெங்காயம், பச்சை மிளகாய், வெட்டி வைத்த ஒரு தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு, நல்ல தீயில் மின்னல் வேகத்தில் வதக்கினார்! நொடியில் தக்காளி மறைந்து போயிற்று! பின்பு, ரவையின் பங்குக்கு, ஒரு மடங்குக்கும், சற்றே குறைவான தண்ணீரை ஊற்றி, அது கொதிக்க ஆரம்பித்தவுடன்,சிறிது உப்பு போட்டு, முழு தீயில், ரவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அவசர கதியில் கிளறி முடித்தார்! ஒரு கரண்டி சீனியும் கொதிக்கும் தண்ணீரில் வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம்!
ரவை உப்புமா, பார்க்கவே அழகாக இருந்தது! தக்காளி தன் நிறத்தை சற்றே உப்புமாவுக்கு கொடுத்திருந்தது! ரவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், மணல் போல அழகாக வெந்து இருந்தது! ஒன்றும் தொட்டு கொள்ளாமலே, சாப்பிட மிக அருமையாக இருந்தது! உப்புமா கூட இவ்வளவு சூப்பரா செய்ய முடியுமா, என்னோட வில்லன் இப்போ ஹீரோவா தெரிந்தார்!!!