தட்பம் வெப்பம் காற்று இவை மூன்றும் சேர்ந்த விபரீத கலவையினால் வந்து தீர்வதே காதலும் காய்ச்சலும்!!
இன்று 8848மீ உயரத்தில் இருந்து கால் தடுக்கி விழ பார்த்து மயிரிழையில் உயிர் தப்பினேன்……… . . . இதுக்கு தான் மதிய நேரங்களில் பையனோடு சேர்ந்து ‘The Himalayan Range’ பூகோளம் பாடத்தை எல்லாம் படித்திருக்க கூடாது என்னமா தூக்கம் வருது!
உச்சி வெயிலில் கூட இந்த குச்சி ஐஸை பார்த்து விவரம் தெரிஞ்சவங்க யாரும் சத்தியமா உருக மாட்டாங்க Ice Gola!
யாரொருவர் தன் மனதினுள் கோப தாபங்களை கொஞ்சம் கூட சூடு குறையாமல் வைத்திருக்கிராரோ அவர் கண்டிப்பாக மன புழுக்கத்துக்கு உள்ளாவாதும் நிச்சயம்…. Casserole!
இருக்கலாம்.. முன் ஜென்மத்து பந்தமாய் என் தர்ம பத்தினியாய் பின்னே எவ்வளவு தான் கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் பார்த்தும் பார்க்காமலும் இருந்தாலும் சற்றும் சளைக்காமல் சல சலவென சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுவதும் நிமிஷத்துக்கு ஒரு முறை குறுஞ்செய்திகளை அனுப்பியும் உயிரை எடுப்பதேனோ . . . விட்டு தொடரும் பந்தம் Airtel!!
அது ஒரு நடு நிசி நேரம் சோவென்று கொட்டியது மழை இரவை பகலாக்க முயன்று தோற்ற மின்னல்கள் இருட்டிலே துலாவிய கைகள் பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகம் அலம்ப நினைத்து முடியாமல் பச்சை பொத்தானை அவசரமாக அமுத்த அய்யோ…………. என்று அலறியது உள்ளம் டேங்கில் தண்ணீர் ‘காலி’யானது மட்டுமல்லாமல் மோட்டரும் அநியாயமாய் தன் உயிரை விட்டிருந்தது!!
துவையல் செய்வதற்காக கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா சம அளவு எடுத்து சுத்தம் செய்து வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து போட்டு அது பொன்னிறமானவுடன் காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய் கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு எலுமிச்சை அளவு புளியும் போட்டு வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை அதில் போட்டு வதக்கும் போது எழும் சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில் அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!
ஒரு நாள் தாங்கி பிடித்தேன் மறு நாள் கை நழுவ விட்டேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா….. என் உயிர் கை பேசியே!
உளுந்தை ஊற வைத்து நன்கு அரைத்து உப்பு, வெங்காயம், மிளகாய், கரிவேப்பிலையுடன் சிறிது அன்பையும் சேர்த்து துளி கூட எண்ணெய் குடிக்காமல் சுட சுட மெது வடை சுட்டு குடுத்து விட்டு ஆசையுடன் கணவரின் விமர்சனத்தை எதிர்பார்த்தால் நன்கு ருசித்து புசித்து விட்டு சொல்வார் உளுந்து நல்ல உயர்ந்த ரகம் போல என்று.. முடிவு செய்தாயிற்று இனி அடுத்த வாரம் வடை சுடுவதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் இதே உளுந்தை கொஞ்சம் போட்டு ஸ்பூன் போட்டு குடுத்து விட வேண்டியது தான்!!
நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு சொல்ல முடியாது ஆனா மசாலா நெடி மூக்குல ஏறுகிர ஒவ்வொரு நொடியும் கண்டிப்பா வந்தே தீருவேன் . . தும்மல்!
வைரசுக்கும் என் மூச்சு குழாய்க்கும் இடையே நடந்த ‘வைரஸ்ஸே வெளியேறு’ போராட்டத்தின் உச்ச கட்டமாய் மூக்கடைத்து தன் வேலை நிறுத்தத்தை பகிரங்கமாய் உடம்புக்கு அறிவித்து இருக்கிறது என் மூக்கு!!
புயல் கரையை கடப்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வகம் அவ்வப்பொழுது எச்சரிக்கை விடுவதுண்டு!
இப்படி முன்னெச்சரிக்கை கொடுப்பதால், ஏராளமான மீனவர்களுடைய உயிர் காப்பற்றப்படுகிறது!
அதே போல் நம்முடைய வாழ்க்கைப்பாதையில் நடை பெற போகும் துரதிருஷ்டமான சம்பவங்கள் பற்றி ஒருவருக்கு முன்னெச்சரிக்கை கிடைத்தால் எப்படி இருக்கும்…….
இது தான் ‘FINAL DESTINATION’ ஆங்கில படத்தின் ஒரு வரி கதை!!
சிறு வயதில் இருந்தே, திரில்லர் படங்களின் மீது ஒரு ஆர்வம் உண்டு, இப்படி ஒரு படம் எப்பொழுது வந்தது என்று இப்படத்தை பார்க்கும் வரை சத்தியமாக தெரியாது! அன்று ஒரு நாள் ஏதேச்சையாக இப்படத்தை சில நிமிடங்கள் பார்க்க நேர்ந்தது!
படத்தின் ஹீரோ, தன் அலுவலக பேருந்தில் பயணம் செய்கிறான், அப்பேருந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக, நட்ட நடு பாலத்தில் நின்று விடுகிறது!
நல்ல உயரமான, பழமையான பாலம் அது! பாலத்தின் ஒரு ஒரமாக, அதை செப்பனிடும் பணி வேறு நடை பெறுகிரது! இதை பேருந்தின் ஜன்னல் வழியாக கவனித்து கொண்டிருந்த நம் ஹீரோவுக்கு ஒரு PREMONITION, அதாவது ஒரு முன்னெச்சரிக்கை ஒரு கனவு போல ஒரு நொடியில் அவன் கண் முன்னே வந்து செல்கிறது!
அந்த பாலம் உடைய போவதாகவும், அதில் அவனுடன் பயணம் செய்தவர்கள், அனைவரும் மிக குரூரமாக மரணத்தை எதிர் கொள்வது போலவும் வந்தது அந்த PREMONITION!!
ஹீரோவும் உடனே எல்லோரையும் எச்சரிக்கை செய்கிரான்! அவன் வார்த்தைகளை நம்பியோர் பேருந்தை விட்டு இறங்கி, பாலத்தை கடந்து உயிர் தப்பி விடுகின்றனர்! அவனுடைய வார்த்தையை நம்பாதவர்கள் தத்தம் சாவை எதிர் கொள்கின்றனர்!!
தப்பித்த எல்லோரும் ஹீரோவை பாராட்டிவிட்டு செல்கின்றனர்! இதோடு படம் முடிந்து விட்டதா என்ன, அது தான் இல்லை, இப்போதான் படமே ஆரம்பிக்கின்றது!!
விபத்தில் தப்பித்தவர்கள், ஒருவர் பின் ஒருவராய், ஒரு ‘CHAIN OF DEATH’ போல, ஏதாவது ஒரு விபத்தில் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர்! பாலம் உடைந்த விபத்தில், சாவில் இருந்து தப்பித்தவர்கள், உண்மையாக பாக்கியசாலிகள் இல்லை, அவர்களுக்காக சாவு சிகப்பு கம்பளம் விரித்து, காத்து கொண்டிருக்கிறது என்பதை தாமதமாக தான் புரிந்து கொள்கின்றனர்!
ஒரே ஒரு option தான் அவர்களுக்கு, ஒன்று அந்த CHAIN OF DEATH ஐ break up செய்ய வேண்டும், இல்லை தனக்கு வரவிருக்கும் சாவை, வேறு யார் மீதாவது திருப்பி விட வேண்டும்!
அந்த பாலம் உடைந்த அப்பவே, இவர்கள் எல்லாம் தங்கள் உயிரை விட்டிருக்கலாம் என்று ஒரு உணர்வு எனக்கு தோணாமல் இல்லை! அவ்வளவு கொடுமையான சாவு அவர்கள் எல்லோருக்கும்! நான் தொலைகாட்சியில் இப்படத்தை, முதல் 15 நிமிடங்கள் தான் பார்த்தேன், பிறகு ஆர்வ கோளாறில், அப்படத்தை internet இல் download செய்து பார்த்தேன்!
நான் செய்த பெரிய தவறு அது தான்! யாரவது எனக்கு ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்து இருந்திருக்கலாம்! இந்த படம் 5 பாகங்களாய் வெளி வந்திருக்கிறது ! ஐந்துமே BOX OFFICE HIT!
ஒவ்வொரு பாகங்களிலும், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு ஒரு PREMONITION வருகிறது, அந்த நொடியில், ஹீரோவை சுற்றி இருக்கும் அனைவரும் காப்பாற்ற பட்டு, பிறகு எப்படி எப்படி எல்லாமோ, ஒருவர் மாற்றி ஒருவராய் தங்கள் உயிரை கொடுமையாக விடுகின்றனர் என்பதே இப்படத்தின் கதை! கடைசியாய் நம்ம ஹீரோவும் உயிரை விட, படம் முடிவடைந்து நன்றி, வணக்கம் போடுகின்றனர்!!!
நான் இவை ஐந்தில், ஒரு பாகத்தை, சில மணி நேரம், பார்ப்பதற்குள்ளாகவே, எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது! எங்க படம் பார்க்கும், நம்மையும் போட்டு தள்ளீருவாங்களோனு ஒரு பயமே வந்திருச்சு!!
இந்த மாதிரி படங்கள் எப்படி தான் சக்கை போடு போட்டதோ, ஆறாவது பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடை பெற்று கொண்டிருக்கிரதாம், ஹ்ம்ம் கலிகாலமப்பா……