எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

அழுகுனி குமாரி

12 பின்னூட்டங்கள்

images

ஆரம்பத்துல ரொம்ப ஆர்வமாக தான் இந்த குழந்தையோடு விளையாட ஆரம்பித்தான் எங்கள் குட்டி பையன்! ஆனால், கொஞ்ச நேரம் , அதனோடு விளையாடுவதற்குள் , அந்த குழந்தை வாய் விட்டு அலறி அழ ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் பயந்து தான் போயிட்டான் எங்க பையன். பயத்தில் , என்னிடம் வந்து தஞ்சம் அடைந்தான். எதற்கு அழுகிறது என்று விசாரிக்கும் பொழுது தான் தெரிந்தது, அந்த குழந்தைக்கு , அது சொன்னபடி எல்லாம் ஆடினால் மட்டுமே , நன்கு சிரித்து விளையாடும் என்று! என்ன கொடுமையடா இது!

இப்போதைக்கு , அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும்.. சரி நடப்பது நடக்கட்டும் என்று அந்த குழந்தையோடு விளையாட , துணிந்து களத்தில் இறங்கினேன்! அந்த குழந்தை என்னை ஒரு சூப்பர் மார்கெட் அழைத்து சென்றது! அங்கே முதலில் , காய்கறிகள் வாங்க வேண்டும் என்று சைகையில் சொன்னது.. சரி, என்று காய்கறிகள் இருக்கும் இடம் அழைத்து சென்றேன்! அங்கே, நிறைய காய்கறிகள்  பளிச் என்று காட்சி அளித்தன. ஆசையாக , ஒரு கிலோ தக்காளியை நான் கையில் எடுக்க , அவ்வளவு நேரம் சிரித்து கொண்டிருந்த குழந்தை , லைட்டா உறுமியது ! நான் , அப்பவே சுதாரித்து இருக்கணும் , நான் என் இஷ்டத்துக்கு காய்கறிகள் எடுப்பதை கவனித்தவுடன் , அது வீல் வீல் என்று அழ ஆரம்பித்து விட்டது! அதுக்கு என்ன காய் பிடிக்குமோ அதை தான் நான் வாங்கணுமாம்! சரி , சரி  என்று அவசர அவசர மாக , அதற்கு பிடித்த , உருளை கிழங்கையும் , கேரட்  மற்றும் பூசணியை , தள்ளு வண்டியில்  போட்ட பின்னால் தான் , குழந்தை அழுகையை நிறுத்தி , தன் கை கொட்டி சிரித்தது! அடுத்ததாக , பழங்கள் இருக்கும் இடத்தை கைகாட்டியது !

images1

 

எதற்கு வம்பு என்று , இந்த தடவை , பழங்கள் இருக்கும்  இடம் சென்று , அது எந்த பழம் என்று கை  காட்டும் வரை பொறுத்திருந்தேன்! அதுவும் , ரொம்ப ஆசையாக , ஆப்பிளை கை  காட்டியது! சரி , என்று ஒரு கிலோ ஆப்பிளை வாங்கி தள்ளு வண்டியில் போட்டு கொண்டேன்!  அழாமல் இருந்தால் சரி தான் என்று இருந்தது! வெளிஇடம்  வேறு! இந்த குழந்தை வேறு இன்னும்  பேச ஆரம்பிக்கவில்லை! திடீரென்று அழ ஆரம்பித்தால் , பிள்ளை கடத்தும் கும்பலை சேர்ந்தவள் என்று யாரேனும் நினைத்து விட்டால்  என்ன செய்வது என்ற பயம் வேறு எனக்கு! அடுத்து , பால் பொருட்கள் இருக்கும் இடத்தை கை காட்டியது! ஆழம் தெரியாம கால விட்டாச்சு! இனி, சற்று சூதானமாக  தான் கரையேற முடியும்! பால் பொருட்கள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தோம்!

 

அங்கே, பால் , வெண்ணெய் என்று அது கை காட்ட , அதன் கைக்கு கட்டுப்பட்ட ரோபோ போல நானும் அப்பொருட்களை அள்ளி போட்டு கொண்டே வந்தேன்! அது , தன் முகத்தை சாப்பிட்டு முடித்தவுடன் துடைக்க , Wet Tissues வாங்க சொல்லி  கை காட்டியது. நானும் அதை ஒரு எட்டு எட்டி எடுப்பதற்குள் , சற்றே  கால தாமதம்  ஆக, குழந்தை சந்திரமுகி ஆகியது! ஒருவாறு சமாளித்து , அதன் அழுகையை நிறுத்தியவுடன் , பாத்திரம் இருக்கும் திசை நோக்கி கை காட்டியது!

images4

 

எங்கே செல்லும் இந்த  பாதை என்று பாட்டு ஒன்று தான்   பாடவில்லை! தள்ளு வண்டியை தள்ளி கொண்டு பாத்திரம் இருக்கும் இடத்தை வந்து அடைந்தோம்! அடுப்பு , வாணலி , கரண்டி , தட்டு , கும்பா  என்று தன்  மகளை தனி குடித்தனம் வைப்பதற்கு முன்னே , அத்தனையும் பார்த்து  பார்த்து  வாங்கும் அன்னை போல், வாங்கி  குவித்து கொண்டிருந்தேன்! எதுக்கு குழந்தாய் இத்தனையும் உனக்கு என்று கேட்டு தெரிந்து கொள்ள ஆசை தான்! எதுக்கு வம்பு என்று உள் மனது எச்சரிக்க , கை கொண்டு என் வாயை பொத்தினேன்! குழந்தை மசாலா பொடி இருக்கும் கை காட்டியது! கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் எதிலும் பங்கு எடுத்திருக்குமோ குழந்தை , என்று சந்தேக பார்வை பார்த்தவாறே  , உப்பும் , மிளகு பொடியும் எடுத்து போட்டு கொண்டோம்! திடீரென்று லக லக லக என்று ஒரே சத்தம்! பீதியில் உறைந்து போய் , திரும்பி பார்த்தால் ,குழந்தை தான் , சந்தோஷம் தாங்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தது! இனி , ஒரு வினாடி  கூட தாமதிக்காமல் , குழந்தையை வீட்டில் விட்டு விட வேண்டியது தான் என்று என் மனம் அவசரப்படுத்தியது!

சரி என்று அவசர அவசரமாக , குழந்தையின் வீடு சென்றால் , அங்கு ,  அதன் அம்மாவை காணவில்லை! ஐயோ பாவம் குழந்தை , இவ்வளவு நேரத்திற்குள் அதற்கு பசித்திருக்கும், என்று எண்ணி சமையல் செய்ய ஆயுத்தமானேன்! குழந்தை அங்கேயும் என்னை என் இஷ்டப்படி விடவில்லை! அது மாமியார் போலவும் , நான் புதிதாய் திருமணம் முடிந்து வந்திருக்கும் மருமகள் போலவும் என்னை நடத்தியது! இது அது என்று சைகை காட்டி , காட்டி , மசித்த ஆப்பிள் , கேரட், பூசணி , உருளை , பால் , வெண்ணெய் , உப்பு , மிளகு பொடி சேர்த்து வேக வைத்த காய்கறி சூப் என்று என்னை சக்கையாய்  வேலை வாங்கியது குழந்தை! அப்பாடி, வேலை முடிந்தது என்று நினைப்பதற்குள், குழந்தை , சாப்பாடு மேசையை கை காட்டியது! சரி , இதோடு ஆள விட்டா சரி  தான் என்று , மசித்த ஆப்பிள் ஒரு கிண்ணம் , காய்கறி சூப் ஒரு கிண்ணம் , வெட்டிய கொய்யா ஒரு தட்டு , குடிக்க தண்ணீர் , வாய் துடைக்க  wet tissues  என்று அது கை காட்டியது எல்லாம் எடுத்து வைத்தது போக , ஒரு கிலுகிலுப்பை , ஒரு லாலிபாப் , ஒரு டெடி பியரையும் , மேசை அருகே எடுத்து வைக்க சொன்னது !

images3                              images5

சரி, இவ்வளவு தூரம் வந்தாச்சு , அதுக்கு சாப்பாடை ஊட்டி விட்டு விடுவோம் என்று உடையைப் பாதுகாக்க குழந்தையின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் துணியை மாட்டி விட்டேன்! குழந்தை உடனே , ஆப்பிள் மசியலை கை காட்டியது! ஒரு ஸ்பூனை போட்டு , ஒரு ஐந்து தடவை வாயில் கொடுத்திருப்பேன் , உடனே அது வெட்டிய கொய்யாவை வாயில் கொடு என்று கை காட்டியது! சரி என்று ஒரு துண்டை கொடுத்தவுடன் , ஒரு கடி தான் கடித்திருக்கும் , அதற்கு பல் வலித்து , வழக்கம் போல் வீல்…. வீல்  என்று கதறி அழ ஆரம்பித்தது! ஒரு நிமிஷம் வெலவெலத்து போச்சு! அப்புறம், லாலி பாப் , டெடி பியர் , கிலுகிலுப்பை எல்லாத்தையும் எடுத்து கொடுத்தவுடன் , ஒரு வழியா அழுகைய நிறுத்துச்சு குழந்தை! பின்னர் , காய்கறி சூப்பை கை காட்டுச்சு!அதையும் , ஸ்பூன் போட்டு , அது  கேட்க , கேட்க பொறுமையா வாயில ஊட்டி கொண்டே வந்தேன்!

images6          images7

திடீர் என்று , குழந்தைக்கு காரம்  ஏறி ஒரே இருமல்! பின் தண்ணீரை குடிக்க கொடுத்து , wet tissue வைத்து வாயை துடைத்து முடித்தவுடன் , ஒரு ஏப்பம் விட்டு , தன் சாப்பாட்டை முடித்து கொண்டது குழந்தை ! தன் வயிறு  நிறைந்ததன்  அடையாளமாய் திரும்பவும் லக லக லக என்று சிரித்து பயமுறுத்தியது  குட்டி குழந்தை ! நான் பெற்ற குழந்தைகளுக்கு கூட இவ்வளவு பொறுமையா , சாப்பாடு ஊட்டி இருப்பேனா என்பது சந்தேகம் தான்!

baby-hazel-new-year-bash-med

அடுத்து தொட்டிலில் போட்டு , என்னை தாலாட்ட சொல்லுமோ என்று பயந்த நொடியில் Game  over  என்று என் மொபைல் ஸ்க்ரீன் பிளின்கியது! என் குட்டி பையன் , என்னை பார்த்து வெற்றி புன்னகை பூத்தான் !!!

யான்  பெற்ற இன்பம் தாங்களும் பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்!

http://www.babyhazelgames.com/

 

12 thoughts on “அழுகுனி குமாரி

 1. விளையாட்டை நிஜம் போல் எழுதிய நடைக்குப் பாராட்டுக்கள். நேரம் கிடைக்கும்போது நானும் அந்த அழுகுனி குமாரியை சமாதானப்படுத்த முயல்கிறேன் ஹாஸ்யமான பதிவு மஹா

  • வாங்க விஜிகுமாரி மேடம்! இப்பொழுது விடுமுறையில் இருப்பதால் , ஒரு நாளில் ஒரு தரமாவது , இந்த அழுகுனி குமாரியை சமாதானப் படுத்தி கொண்டு இருக்கிறேன்! இப்பொழுது தான் எனக்கு புரிந்தது என் குழந்தைகள் எவ்வளவு தங்கம் என்று 🙂

 2. இந்த கொண்டாட்ட மனநிலை என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்!

 3. இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவு இது!
  தொடருங்கள்

 4. ஆஹா, தெரிந்த வீட்டுக் குழந்தையோ என்று நினைக்குமளவுக்கு இருந்தது நீங்கள் எழுதிய விதம்…

 5. “திடீரென்று அழ ஆரம்பித்தால் , பிள்ளை கடத்தும் கும்பலை சேர்ந்தவள் என்று யாரேனும் நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு எனக்கு!”

  ஹா ஹா ஹா ….

  சிறப்பான பதிவு.விறு விறுப்பாக எழுதியுள்ளீர்கள்.
  நன்றி மஹா மேடம்.

  • நன்றி பிரபு! இது விடுமுறை கால பதிவு! சும்மா ஆசைக்கு பதிந்தேன்! உன் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂 இரண்டு வாரங்கள் கழித்து உன் வலை தளத்துக்கு கண்டிப்பாக வருகிறேன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s