எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

உஷ்!! இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..

17 பின்னூட்டங்கள்

படம்

கண்டிப்பா இது ரகசியம் இல்லை.. யாரை பற்றிய கிசுகிசுவும் இல்லை.. எப்படி முதல் காதல், முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் இதெல்லாம் எப்படி நீங்காமல் மனதில் இருக்குமோ அப்படி தான் இந்த முதல் ஹிஸ்ஸும்.

அப்போ எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன்! எப்பவும் போல் ஸ்கூல் விட்டு வந்து முகம் கழுவி விட்டு, உடை மாற்றி விட்டு வழக்கம் போல் விளையாட கிளம்பினேன். வாசலை விட்டு இறங்கி ஒரு 10 அடி எடுத்து வைப்பதற்குள் ஏதோ ஒரு மெல்லிய கயிறு கண்ணில் தென் பட்டது. அதை தாண்டி செல்ல முற்பட்ட போது தான் முதன் முதலில் அந்த ஹிஸ் சத்தம் காதில் விழுந்தது. விருட்டென்று கயிறு தன் தலையை தூக்கிற்று! எனக்கோ தூக்கி வாரி போட்டது பின்னே கயிறு எங்கேயாவது தலையை தூக்குமா?? ஆமாம் அது பாம்பு தான்.. இப்போ நினைத்தாலும் அடி வயிறு கலங்கும் எனக்கு. நான் வீல் என்று அலறிய அலறலில் ஒரு நான்கைந்து பேர் ஓடி வந்து அந்த பாம்பை அடித்து கொன்று போட்டனர். நான் வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால் என்னை கண்டதற்கு அந்த பாம்பு தான் அழுதிருக்கனும் தேவை இல்லாமல் நான் அழுது கொண்டிருந்தேன். பாவம் என்னால் அது தன் உயிரை விட்டது!

அதன் பிறகு நெடுநாள் எந்த ஒரு பாம்பும் என் கண்ணில் சிக்க வில்லை! பிறகு புது வீடு கட்டி குடி ஏறினோம். வீடு இருந்த இடம் ஒரு குளத்தாங்கரை. நின்னா பாம்பு, நடந்த பாம்பு.. ஒரே பாம்போ பாம்பு!! அடிக்கடி பாம்பு என் கண்ணில் தட்டு பட்டு அடி வாங்கும். நேரில் பார்த்தது பத்தாதென்று கனவிலும் கூட.. ஒரு முறை தோழிகளுடன் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது யாரோ ஒருவர் கண்ணில் பாம்பு தட்டு பட அவள் பாம்பு.. பாம்பு.. என்று கத்த ஆரம்பித்து விட்டாள். எல்லோரும் திசைக்கு ஒன்றாக ஓடினோம்.. என் நேரம் நான் பாம்பு வந்த திசையிலேயே ஓடி அதை லாங்க் ஜம்ப் செய்து தாண்டினேன். நல்ல கறுத்த பாம்பு.. இதை தான் ஓடுற பாம்பை தாண்டுற வயது என்று சொல்வாங்களோ??

இப்படி ஓயாமல் பாம்பு கண்ணில் படுதே என்று என்னை சங்கரங்கோவில் கூட்டி சென்று அங்கே கோவிலில் இருந்த புற்றுக்கு பரிகாரமாய் என் கையால் பால் ஊற்ற செய்தார்கள். அதன் பின் வீட்டு முற்றத்தில் ஏதோ ஒரு செடியையும் நட்டு வைத்தார்கள். அந்த செடியின் வாசனைக்கு பாம்பு உள்ளே நுழையாதாம்! அருகில் உள்ள வீட்டில் கோமதி அம்பாள் படத்தை வீட்டின் முன்னே மாட்டி வைத்திருந்தனர் இதே காரணத்துக்காக. இருந்தாலும் அது வந்த வண்ணம் போன வண்ணம் தான் இருந்தது. அதற்காக எங்கள் வீட்டு தோட்டத்து பின் சுவற்றில் ஒரு ஓட்டை செய்து வைத்தோம்.. தெரியாமல் ஏதேனும் உள்ளே வந்து விட்டாலும் அதுவே வெளியே போய் விடட்டும் என்பதற்காக!

ஒரு முறை ஸ்கூலில் இருந்து நான் வீட்டுக்கு வரும் அதே நேரம் ஒரு பாம்பும் எங்கள் வீட்டு வாசல் அருகில் வந்து கொண்டிருந்தது. அது என்னை பார்த்து பயந்து வீட்டு தோட்டத்தினுள் நுழைந்து விட்டது. சும்மா சொல்ல கூடாதுங்க அது அழகோ அழகு. நல்ல மஞ்சள் நிறத்து பாம்பு, உடம்பெங்கும் அழகாய் தீட்டியது போல் கறிய நிறத்தில் வரிகள். அப்பப்பா.. என்ன வேகம் அழகாய் கொய்யா மரத்தில் ஏறி பின் வீட்டு வெளி சுவற்றில் ஏறி போயே போய் விட்டது. முதன் முறையாய் பாம்பை கண் கொட்டாமல் ரசித்தது அதுவே முதல் முறை.

நெல்லிக்காய் மரத்தின் இலைகள் அனைவரும் அறிவர். என்ன ஒரு அழகு பச்சை. அதே பச்சை நிறத்தில் தான் பச்சை பாம்பும் இருக்கும். நிறைய தடவை அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். கண்ணை மூடி கொண்டு ஓடி வந்து விடுவேன். சீ.. சீ.. வெட்கம் எல்லாம் இல்லை..அது நம் கண்ணை பார்த்தால் பாய்ந்து வந்து புடுங்கிடுமாமே.. யார் கண்டார்கள் அது நிஜமோ பொய்யோ?? ரொம்பவே பயந்து போனதொரு தருணம் சேரன்மஹாதேவி ஊரில் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது தான். நட்ட நடு ஆற்றில் நின்று கொண்டிருக்கும் போது எவரோ ஒருவர் பாம்பை பார்த்து கத்தி விட்டு ஓடி விட்டர். என்ன செய்வது, எங்கே ஓடுவது? திரும்பிய திசை எல்லாம் தண்ணீர் அலைகளோடு! அது எங்க வருது என்று யாருக்கு தெரியும். கண்கள் இருட்டி கொண்டு வந்தது, பின்னே பயத்தில் சிக் என்று கண்களை மூடி கொண்டு ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நின்றேன் என்று எனக்கே தெரியாது. நல்ல வேளை அன்று மீன்கள் எதுவும் வந்து காலை கடிக்க வில்லை.. இல்லை அன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்கே தெரியாது!

இந்த பாம்பு பயத்தை மேலும் அதிகமாக்கியது நீயா படமும் நானே வருவேன் படமும்! இந்த நல்ல பாம்பு கண்ணில் பட்டு அடி பட்ட நேரமெல்லாம் பயந்து போய் விசாரிப்பதுண்டு.. அதை நல்லா குழி தோண்டி புதைச்சாச்சு இல்ல?? இல்லாட்டி அதோட ஜோடி இச்சாதாரி பாம்பு வந்து பழி வாங்கி விடும் என்பது ஐதீகம்!! கடைசியாக பாம்பை நான் பார்த்தது நான் படித்த கல்லூரிக்கு செல்லும் வழியில். அதன் பெயர் தெரியவிலை. நல்ல சரட் சரட் என்று சுத்து சுத்தென்று சுத்தி வந்தது தன்னை தானே. அதன் வாலடியில் ஒரு மணி வேறு. அதை அடித்து சத்தம் வர வைத்து அருகில் வந்த என்னை எச்சரிக்கை செய்தது. எவ்வளவு நல்ல குணம் இல்ல இந்த பாம்புகளுக்கு! நாம் துன்புறுத்தினால் அன்றி நம்மை அது எதுவும் செய்யாது!!

 

17 thoughts on “உஷ்!! இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்..

  1. ஃஃஃஃஃஃ
    சரியாக சொல்ல வேண்டும் என்றால் என்னை கண்டதற்கு அந்த பாம்பு தான் அழுதிருக்கனும் தேவை இல்லாமல் நான் அழுது கொண்டிருந்தேன்.
    ஃஃஃஃஃ

    அது என்னவோ உண்மைதானுங்கோ.
    பாம்புக்கே நான் எமன்டா. என்னை எதிர்ப்பவன் எவன்டா என்று சொல்லிக்கலாம்.

    • எனக்கு பாம்பு என்றாலே சூப்பர்ஸ்டார் ரஜினி சார் தான் நியாபகத்துக்கு வருவார்! அதற்கு ஏற்றாற் போல் ஒரு பன்ச் டயலாக் சொல்லி அசத்தி விட்டீர்கள்! சபாஷ் 🙂

  2. “உஷ்!! இது கிஸ் அல்ல ஹிஸ்ஸ்ஸ்…” என
    பாம்பின் கதை அழகாக அமைந்திருக்கிறது.

  3. பாம்புப் பதிவு மிகவும் ரசிக்க வைத்தது. இவ்வளவு பாம்புகளைப் பார்த்திருக்கிறீர்களா? நிஜமாகவே ஆச்சர்யம் தான். கனவு நனவு எல்லாமே பாம்பு வந்தால் நீங்கள் தான் என்ன செய்வீர்கள்? பேசாமல் நீங்கள் ஒரு பாம்பு பண்ணை ஆரம்பித்து அதில் ஆராய்ச்சியும் செய்யலாம்.உங்கள் பதிவின் கடைசி வரி தான் சரியான பன்ச்.
    பாராட்டுக்கள்!

    • நன்றி ராஜி மேடம்! உண்மைய சொல்லனும்னா உங்கள் நானும் புலியும் பார்த்த உடன் தான் எனக்கு இந்த பதிவை போடும் எண்ணமே வந்தது! ஆனால் ஒரே ஒரு வித்யாசம் அது ஒரு மிக தேர்ந்த கற்பனை இது நிஜம்.. அவ்வளவே 🙂

  4. மஹா,

    பாம்பு பதிவு என்ற‌தும் ஓடி வந்திட்டேன், பயத்தினால் அல்ல, ஆர்வத்தில். ஒரு காலத்துல பாம்புன்னா கண்கொட்டாம நின்னு பார்ப்பேன். கூடவே ஓடுவேன். இப்போ அப்படியே தலைகீழ், பாத்தே பல வருஷங்களாச்சா, நெனச்சாலே பயமா இருக்கு. பச்சபாம்புக்கு உங்க ஊர்ல ஒரு நெல்லிக்காய் மரம்னா எங்க ஊர்ல முருங்கைமரம்.

    மாரியாத்தா பாம்புன்னு ஒன்னு மஞ்சள் நிறத்தில் இருக்கும், வெள்ளிக் கிழமைகளில் ஒன்னு வந்துச்சுன்னா வரிசையா தொடர்ந்து சங்கிலிபோல் வந்துகொண்டே இருக்கும். இந்நிகழ்ச்சி மதியம் பள்ளி விட்டு வரும்போதுதான் நடக்கும்.

    எங்க ஊர்லல்லாம் நல்ல பாம்ப அடிச்சாங்க‌ன்னா, அதை புதைத்தாலும் அவங்க ஃப்ரெண்ட் சாரப்பாம்பு வந்து அதுக்கு உயிர் குடுத்து, மீண்டும் வந்து பழி வாங்கும்னு பயந்து எரிச்சிடுவாங்க.

    உங்க நினைவுகளுடன் என் நினைவையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டதால் பின்னூட்டம் நீ ண் டு விட்டது.

    • வாங்க சித்ரா அக்கா,
      நீங்க பாம்பு ரசிகை போல! உங்கள் நினைவுகளை மிக ரசித்தேன்! மஞ்சள் நிற பாம்புக்கு பெயர் மாரியாத்தா பாம்பா?? ஹா ஹா.. உங்களால் மட்டுமே இப்படி புதுசு புதுசா பெயர் வைக்க முடியும் 🙂 வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா அக்கா 🙂

  5. பதிவின் கடைசி வார்த்தை மட்டும் மனதிற்கு பிடித்த உண்மை

  6. ஹிஹி பாம்பென்ன, கரப்பான் பூச்சை கண்டாலே கதிரைல ஏறி நிக்கிற ரகம் நாங்க எல்லாம்… இது அந்தக் காலமெல்லாம் இல்ல, இப்பவும் தான், என்ன பன்ன, எனக்கு அந்த உருவமே புடிக்கல, வளவள என்று வளைஞ்சி வளைஞ்சி உவ்வே

  7. பாம்பை அடிப்பதில் உடன்பாடு இல்லைதான், நமக்கு அதைக் கண்டால் பயம், அதற்கும் நம்மளைக் கண்டால் பயம்!

  8. “அதை நல்லா குழி தோண்டி புதைச்சாச்சு இல்ல?? இல்லாட்டி அதோட ஜோடி இச்சாதாரி பாம்பு வந்து பழி வாங்கி விடும் என்பது ஐதீகம்!! ”

    ஹா…ஹா..ஹி..
    என்ன நான் நகைச்சுவையா பண்ணுறன்!பிரபு சிரிக்கிறார் என்று நினைக்க வேண்டாம். என்ன செய்ய!எனக்கு படிக்கும் போதே சிரிப்பு வந்து விட்டது.

    • நான் என்ன எழுதினாலும் உங்களுக்கு சிரிப்பு வருகிறதா என்ன?? எனக்கு சந்தோஷம் தான் பிரபு சார்.. நான் இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்ததே , இதை படிப்பவர்களை மனம் விட்டு சிரிக்க வைக்கத்தான்! அதிலே எனக்கு ஒரு திருப்தி! வருகைக்கும் , கருத்துரைக்கும் , ரசித்து படித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s