எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

வாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…

15 பின்னூட்டங்கள்

Image

முக்கியமான ஒன்று தொலைந்து போனது என்பதே பெரும் வேதனை.. அதிலும் வாழ்வின் ஆதாரமாகிய ஆதார் கார்ட் தொலைந்து போய் விட்டது என்பதை அறியும் நொடி எவ்வளவு கொடுமையாக இருக்கும். அன்று இரவு எல்லாம் நல்லா தான் போச்சு. குழந்தைகள் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர். அதன் பின்னர் தான் கணவர் அலுவல் முடிந்து வீடு திரும்பினார். அதிசயமாய் ஒரு பெர்க்கு(Perk) சாக்லேட்டை நீட்டினார், யாரோ குடுத்தார்களாம்.. அது எனக்கு தெரியாதா மனதினுள் சொல்லி கொண்டேன். அந்த நொடி சத்தியமாய் நினைக்கவில்லை ஒரு பெர்க்கு குடுத்து என்னை கிறுக்கு ஆக்க போகிறார் என்று!

கணவர் இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் , இன்று காலை கேஸ் புக் செய்ய சொன்னேனே முடிந்ததா? என்று வினவினேன். அங்கே தான் ஆரம்பித்தது சனி! நம்ம ஆதார் கார்டும் கேஸும் இன்னும் லிங்க் செய்ய படாமல் இருகின்றதாம். நாளை காலை எடுத்து குடு என்று சொல்லி விட்டு அவர் வேலையில் மூழ்கினார். என்னவோ அந்த நொடியில் ஒரு திடீர் எண்ணம், ஆதார் கார்ட் உள்ளே இருக்குதா? சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உடனே எடுத்து பார்த்தேன். நான் பயந்த மாதிரியே எங்கள் நால்வரின் கார்டும் இருந்த சுவடே தெரியவில்லை. பெருமாளே! இது என்ன சோதனை என்று மூளையை கசக்கி பார்த்து யோசித்ததில் ஒன்று தெளிவாயிற்று, போன மாதம் லேமினேட் செய்து வருகிறேன் என்று கணவர் கேட்டு வாங்கி சென்றது நியாபகத்தில் வந்தது.

ஏற்கனவே இன்று அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை போல யாரிடமோ போனில் உரக்க கத்தி கொண்டிருந்தார். கார்ட் தொலைந்ததை பற்றி சொல்லவா வேண்டாமா.. ஏற்கனவே எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றினால் போல், தொலைஞ்சேன்.. பயத்தில் என்னென்னவோ செய்தது.. அவர் திட்டுவார் என்ற பயமெல்லாம் இல்லை, அவருடைய டென்ஷனை கூட கொஞ்சம் ஏத்தி விடவா இல்லை காலையில் சொல்லலாமா என்று ஒரு குழப்பம். ஆன முழு பூசணிக்காயை எவ்வ்ளவு நேரம் சோற்றில் மறைத்து வைக்க முடியும்? ஆனது ஆகட்டும் இன்றே சொல்லி விடுவது என்று தீர்மானித்து சொல்லியும் விட்டேன்.
நீ எங்கேயாவது வைத்து தொலைச்சுடீயா எரிச்சலுடன் சொல்லி விட்டு பின் யோசித்து விட்டு சொன்னார், லேமினேசன் செய்ய எடுத்து போய் விட்டு திரும்ப வந்து குடுக்கவில்லையோ? அப்பாடி நல்ல வேளை இதாவது நியாபகம் வந்ததே என் மனது பெரு மூச்சு விட்டது. யாருக்கெல்லாமோ போன் அடித்து தெலுங்கில் வினவினார். ஒன்றும் பிரயோஜனபடவில்லை! போனை வைத்து விட்டு சொன்னார், ‘நீ கொஞ்சம் ஃபாலோ அப் செய்திருக்கனும்’. என் கணவர் எப்பொழுதுமே எதையும் மறந்ததிலை. அவர் Mr.Perfect இது நாள் வரை இந்த மாதிரி ஒரு பிரச்சனையை எதிர் கொண்டதே இல்லை. எப்பவும் வாங்கி கொண்டு போய் விட்டு பத்திரமாய் திருப்பி கொண்டு வந்து குடுப்பார். நேரம் இப்படி விழி பிதுங்க வைக்கிறது.

எனக்காவது சிறிது நியாபக மறதி உண்டு. என் போனில் மட்டும் ஒரு 1008 ரிமைண்டர் போட்டு வைப்பதுண்டு. ஏதோ இந்த முறை தவறி விட்டது. இருந்தாலும் இது என் தனிப்பட்ட தவறு இல்லை.. முழுதாய் அவருடைய தவறும் இல்லை.. எங்கேயோ ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஏங்கே போய் கண்டு பிடிப்பது. கணவருக்கு இருப்பு கொள்ளவில்லை வீட்டில் இருந்த அத்தனை ஷெல்ஃபையும் நோண்டி கொண்டிருந்தார். இரவு 11 மணி எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றி கொண்டு வந்தது. ஆதார் கார்டாவது ஒரு மண்ணாவது போனால் போகட்டும் என் போட்டோ அதில் நல்லாவே இல்லை என்று போய் படுத்தது தான் தெரியும், அசந்து தூங்கி போனேன். அதிகாலை 4:15 மணிக்கு எல்லாம் முழிப்பு தட்டி விட்டது. இங்கேயும் அங்கேயும் ஆதார் கார்ட் பறந்து செல்வது போல் ஒரு பிரமை. என்னதான் இரவு படுத்தவுடன் தூங்கி விட்டாலும் உள்மனதில் கார்ட் தொலைந்து போன துக்கம் நம் நிம்மதியை குலைத்து கொண்டே தான் இருக்கும் போல!

ஏதோ அலுவலக வேலை காரணமாக காலை வெகு சீக்கிரமே கிளம்பி விட்டார் கணவர். சிறிது ஆறுதலாக இருந்தது எனக்கு, இல்லையேல் போகும் போதும் வரும் போதும் என்னை முறைத்து கொண்டே இருப்பார். வழக்கம் போலவே காலையில் என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். ஒரு 10 மணிக்கு போன் செய்தார் கணவர். லேமினஷன் செய்பவரிடம் பேசினேன், அப்படி யாரும் குடுக்கவே இல்லை என்று சொல்கிறார் என்று என் மனதில் கவலை விதைகளை தூவினார். என்னை இன்னொரு முறை எல்லா இடமும் செக் செய்து விட்டு போன் பண்ண சொன்னர். ஒரு பத்து நிமிஷம் நிம்மதியாக இருக்க விட மாட்டரே என்று பிதற்றி கொண்டே இல்லாத ஒன்றை தேட ஆரம்பித்தேன். கார்ட் தொலைந்து போன புண்ணியத்தில் வீட்டின் சகல ஷெல்ஃபும் பளிச் என்று ஆனது.

இப்போ என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை, நேரே போய் கூகிள் சாமியாரின் காலில் போய் விழுந்தேன்! சாமி என்னை காப்பாற்றுங்கள்.. What to do when Aadhaar card gets lost? என்று வினவினேன். நாலைந்து வழிகளை காட்டினார். அதன் வழியே போனதும் நாங்கள் ஆதார் கார்ட் ரெஜிஸ்டர் பண்ணிய நாள், நேரம், Acknowledgement copy நம்பர் போன்ற விவரங்களை கேட்டனர். நல்ல வேளை அவை எல்லாமே பத்திரமாய் என்னிடம் இருந்தன. இவை மட்டுமா 7 வருடம் முந்திய பேப்பர் பில், இந்த பில் அந்த பில், அது இது என்று பெரிய குப்பையே வைத்திருக்கிறேன். எல்லாம் என் கணவரின் குணம் அறிந்து தான்! ஒரு வழியாய் கேட்ட விவரங்களை குடுத்தவுடம் நம் மொபைல் நம்பரை கேட்கின்றனர். பின்னர் நம் மொபைலுக்கு ஒரு one time passwordஅனுப்புகிண்றனர். அந்த பாஸ்வோர்டை குடுத்தவுடன் நமக்கு நம் தொலைந்து போன ஆதார் கார்ட் லட்டு மாதிரி டௌன்லோட் ஆகி விடுகின்றது.

http://aadharcarduid.com/aadhaar-card-lost
இந்த லிங்க் கை சொடுக்கியவுடன் வரும் பக்கத்தில்
Download duplicate AADHAAR card copy online என்பதை சொடுக்கவும்
சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும்
http://aadharcarduid.com/download-duplicate-copy-online அதிலே
e-AADHAAR Portal என்பதை சொடுக்கவும்
சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும்
https://eaadhaar.uidai.gov.in/
அதிலே நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தவுடன் உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் :)

மனது சிறிது லேசானது. தெளிந்த மனத்துடன் பெர்க்கை ஒரு கடி கடித்தேன்!

15 thoughts on “வாழ்வின் ஆதாரத்தை தொலைத்து விட்டால்…

  1. அப்பாடா…! முடிவில் சுபம்…

    பலருக்கும் இந்த பகிர்வு உதவலாம்…!

  2. வாங்க தனபாலன் சார்!
    இந்த பதிவு பலருக்கும் உதவும் என்று தோன்றியதால் தான் இன்று இதை எழுதினேன் 🙂 வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் 🙂

  3. அப்பா! எத்தனை கவலை!
    கடைசியில் நல்லபடியாக முடிந்தது.

    உண்மையில் எத்தனை பேர்கள் இப்படி திண்டாடுகிரார்களோ! எல்லோருக்கும் இந்தப் பதிவு உதவும்.
    பெருமூச்சு விட்டுக்கொண்டே நானும் ஏன் சினேகிதி கொடுத்த சாக்லேட்டை சாப்பிடுகிறேன், மஹா!

    • வாங்க அம்மா! நாங்கள் செய்த பூர்வ ஜென்மத்து புண்ணியமோ என்னமோ நேற்று இரவு எங்களுக்கு எங்கள் தொலைந்து போன ஒரிஜினல் ஆதார் கார்ட் கைக்கு கிடைத்து விட்டது. ஒரு மாதம் லேமினஷன் செய்ய படும் இடத்தில் தான் இருந்திருக்கிரது 🙂

  4. மீண்ட சொர்க்கம்
    அட்டையை மீட்க உதவும் சுட்டியையும் பகிர்ந்திடுங்கள்.
    நன்றி

    • http://aadharcarduid.com/aadhaar-card-lost
      இந்த லிங்க் கை சொடுக்கியவுடன் வரும் பக்கத்தில்
      Download duplicate AADHAAR card copy online என்பதை சொடுக்கவும்
      சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும்
      http://aadharcarduid.com/download-duplicate-copy-online அதிலே
      e-AADHAAR Portal என்பதை சொடுக்கவும்
      சொடுக்கியவுடன் கீழே குடுக்கப்பட்ட லிங்க் பக்கம் திறக்கும்
      https://eaadhaar.uidai.gov.in/
      அதிலே நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தவுடன் உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 🙂

  5. வணக்கம்
    சகோதரி

    google சாமியாரிடம் முறையிட்டு பல தகவல் கொடுத்த பின்புதான் சரியான முடிவு வந்தது அந்த நேரத்தில் அடைந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் ஒரு சுகமாகத்தான் இருக்கும் … அனவைருக்கும் பயன் பெறும் வகையில் சுட்டிகளும் கொடுத்துள்ளிர்கள்..பதிவு நன்று வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்-2014

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  6. நன்றி மஹா சுட்டியெல்லாம் கொடுத்து வழிமுறையும் சொல்லிக் கொடுத்து விட்டீர்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மறதி வந்து விட்டு விட்டது போல் தோன்றுகிறது. திடீரென்று இரவு படுத்து தூக்கம் வராமல் இருக்கும் பொது இது எங்கே அது அங்கே வைத்தோம் என்று பயம் வரும். அது மாதிரி இரண்டு நாட்கள் முன்பு ஆதார் பயம் வந்தது. இரவு நேரத்தில் போய் பீரோவை திருடன் போல் திறப்பானேன் என்று விட்டு விட்டேன். உங்கள் பதிவு படித்தவுடன் மீண்டும் ஆதார் கார்ட் பயம் வந்தது. ஆனால் அதற்குத் தான் ஒரு தீர்வும் கொடுத்து விட்டீர்களே. மிக்க நன்றி மகா.

    • வாங்க ராஜி மேடம்,
      ஹா ஹா.. நானும் உங்களை மாதிரி தான்! எவற்றின் நியாபகம் வந்து திடீரென்று பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அது இரவு நேரம் என்றாலும் பொறுமை இருக்காது எனக்கு.. தூங்காமல் எப்போதுடா விடியும் என்று காத்து கொண்டிருப்பேன் 🙂

  7. என்னுடைய நாட்களில் அதை அப்போதே பார்த்து விட்டால்தான் தூக்கமே வரும். இப்போது டாக்டர் பிரிஸ்கிருப்ஷன் அப்படி பார்க்க வேண்டி இருக்கிறது.
    என்ன அழகாக ஆதாகர் கார்டிற்கு ரீப்ளேஶஸ்மென்ட் கிடைக்கவும் வழி சொல்லிவிட்டாய். விசாரமில்லை. பாராட்டுகள்தான் நிறைய உனக்கு. அன்புடன்

    • வாருங்கள் காமாட்சி அம்மா,
      எல்லா பெண்மணிகளும் இப்படி தான் இருப்பார்களோ தெரியவில்லை 🙂 நாம் எவ்வளவு பத்திரமாக வைத்து இருந்தாலும் சில நேரம் சந்தேகம் தோன்றிய பின் நிவர்த்தி செய்யா விட்டால் தூக்கம் வராது போல 🙂 வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அம்ம 🙂

  8. இவ்வளவு முக்கியமானதா ஆதார் அட்டை?!
    இலங்கையில் தேசிய அடையாள அட்டை தொலைந்தால் அதோ கதி தான். குறிப்பாக தமிழர்களுக்கு, உயிரும் தேசிய அடையாள அட்டையும் ஒன்று தான்.

    • ஆதார் அட்டை முக்கியமா முக்கியம் இல்லையா என்று சில நேரம் இந்திய மக்கள் எல்லோரும் குழம்பிதான் போகின்றனர்! நான் இந்த பதிவை எழுதும் போது முக்கியமாக இருந்தது, பதிவை எழுதி சிறிது நாட்களுக்கு பின்னே… ஆதார் கார்ட் தேவை இல்லை என்று கூறினர்.. பின்பு சமீப காலங்களில் மீண்டும் முக்கியமான ஒன்றாக கருத படுகிறது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s