எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

பேய், பூதம்,பூச்சாண்டி

5 பின்னூட்டங்கள்

படம்
இல்லாததை இருப்பதாக நினைத்து கற்பனை செய்வதும் ஒரு சுகம் தான்! அப்படி இல்லாத ஒன்று தான் பேய்!! இந்த பேய், பூச்சாண்டி எல்லாம் நாம் சிறு வயதில் இருந்தே பிறர் சொல்ல கேட்டும், புத்தகத்தில் படித்தும் அதற்கு ஒரு கற்பனை வடிவமும் குடுத்து உலாவ விட்டிருக்கிரோம்.. எப்போது இருந்து பேய் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன் என்று சரியாக நினைவில்லை. வீட்டை விட்டு சாயுங்காலம் விளையாட போகும் முன்னர், அம்மா எச்சரிக்கை செய்வார்களே, இருட்டுரதுக்கு முன்னாடி வந்துடு, இல்லை என்றால் பூச்சாண்டி பிடித்து கொண்டு போய் விடுவான்!! யார் இந்த பூச்சாண்டி, என்ன பெயர் இது? பூ வெச்சிருப்பானா?? முதல் பயம் மனதினுள் முளை விடும்.

படம்
அடுத்ததாக சாப்பிட வைப்பதற்காக சொல்லப்படும் கதைகளில் கண்டிப்பாக ஏதாவது ஒரு பூதம்(அதற்கு ஆயிரம் தலை இருக்கும்), இல்லை ஒரு சூனியகாரி(அவளுக்கு பற்கள் நீண்டு, நகங்கள் கூர்மையாக இருக்கும்), இல்லை ஒரு ஒற்றை கண் அரக்கனாவது இருப்பான்! அதை கதையில் வரும் ஹீரோ எப்படியாவது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஒரு பூவை இல்லை ஒரு நாகம் காத்த வைரக்கல்லை திருடி, இப்படி ஏதாவது ஒன்றை கஷ்டப்பட்டு கொண்டு வந்து இந்த பூதத்தை அழிக்க வேண்டும்! அப்போ என்னோட பிஞ்சு மனதில் சின்னதா ஒரு டவுட் வராமல் இல்லை! ஏற்கனவே யாரோ ஒரு தீயவர் இறந்து போய் தான் பூதம் ஆகி இருக்கிரார்! அதை எதுக்கு திரும்ப அழிக்கனும் என்று புத்தி ,கூர்மையோடு யோசித்தாலும் கேள்வி கேட்க தோன்றவில்லை! கதையில் என்ன நடந்தா என்ன, திரில்லிங்கா இருக்கில்ல!!

படம்
கிட்டதட்ட சிறு வயதில் எல்லா மரங்களின் மீதும் ஏறிய அனுபவம் உண்டு! ஆனால் புளிய மரம் பக்கத்தில் மட்டும் உச்சி வெயில் பொழுது போவது கிடையாது! ஏனென்றால் அந்த சமயம், பேய் உச்சாணி கொம்பில் பசியோடு உட்கார்ந்திருக்குமாம்!! யாராவது நிமிர்ந்து பார்த்தார்கள் ஒரே அடியா அடித்து சாய்த்து விடும் என்று சொல்ல கேட்டிருக்கிரேன்! நானும் அந்த பயத்தில், புளிய மரத்தை தாண்டி செல்லும் போது மட்டும் குனிந்த தலை நிமிராமல், நெஞ்சு தடதடக்க ஒடியே வந்து விடுவேன்!! இன்னொரு கதையும் உண்டு, மதிய நேரம் தோட்டத்து பக்கம் யாரேனும், கறி குழம்பு, மீன் குழம்பு என்று அசைவ வகைகளை தனியாக கொண்டு சென்றால், பின்னாடியே பேய் பேசி கொண்டே வருமாம், ‘ஏய் எனக்கு கொஞ்சம் தாயேன்?’ என்று!
இப்படி வகை வகையாய் கூட படிக்கும் பிள்ளைகள் கூறிய கதைகளால், பேய்கள் மனதினுள் நீக்கமர நிறைந்து இருக்கின்றது! சரியாக சொல்ல வேண்டும் என்றால், நம் மனதிற்கு நாமே குடுக்கும் ஒரு திரில்!

படம்

இப்படியாக, பேய் படங்களின் மீது கவனம் திரும்பியது! முதன் முதலில் விவரமறிந்து பார்த்தது ‘பதிமூன்றாம் நம்பர் வீடு’. அதை பார்த்ததிலிருந்து 13 நும்பர் மேல் ஒரு வெறுப்பு உண்டாயிற்று என்றால், அதில் ஆச்சரிய பட ஒன்றுமே இல்லை! என் தங்கை எனக்கும் மேல் த்ரில் விரும்பி! அந்த படத்தில் பேய் நிற்கிறது என்பதை மெய்பிக்க, கண்ணாடி முன் நிற்பவரின் பிம்பம் தெரியாது, புகை கிளம்புவதை காண்பிப்பார்கள்!! அதை பார்த்ததில் இருந்து, அவள் கண்ணாடி இருக்கும் அறைகளில் உறங்குவதையே விட்டு விட்டாள்!!
கொஞ்சம் வளர்ந்த பின்னர், தோழிகள் கூட்டாக சேர்ந்து ‘Evil Dead’ போன்ற பேய் படங்கள் பார்த்ததுண்டு!! அதில் பாதி பேர் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பர்! பேய் வருகின்ற ஓசை கேட்ட உடனே கண்ணை மூடி கொள்வார்கள்! பேய் வருகின்ற சீன் முடிந்து விட்டதா என்று கேட்டு விட்டே கண்களை திறப்பார்கள்! நான் ஒரு படி மேல் சென்று காதையும் பொத்தி கொள்வேன்!! இப்படி ஒருவாராக, பேயை காணாமலே பேய் படம் பார்த்து முடித்து விடுவோம்!! இந்த லட்சணத்தில் அந்த படத்தை இதுவரை பார்க்காதவர்களிடம், பெருமை வேறு அடித்து கொள்வோம்!!

படம்

படம்
சில காலங்களுக்கு பிறகு, இந்த கேபிள் டீவீ எல்லாம் வந்து சேர்ந்த பின்னர், HBO சேனலில், வியாழக்கிழமை தோறும் பேய் படங்கள் போடுவார்கள்! அதை ஆர்வத்தோடு பார்த்ததுண்டு! அதில் ‘The Ring’ என்ற படத்தை பார்த்து நிஜமாகவே பயந்தும் போனதுண்டு! நல்ல வேளை அன்று என் உடன்பிறந்த தம்பியும் அருகில் இருந்ததால் தப்பித்தேன்! நான் பார்த்த பேய் படங்களில், அது நிஜமாகவே பயங்கரமானது! அந்த படத்தில் ஒரு பேய், டீவீயிலிருந்து இறங்கி வருவது போல் காட்சி அமைத்திருப்பார்கள்!! படம் முடிந்த பின்னரும், பயம் தெளியாமல், நீ டீவீயை அணைத்து விடு, நான் டீவீயை ஆஃப் பண்ண மாட்டேன் என்று நெடு நேரம் சண்டை போட்டோம்!! சிறிது நாளைக்கு டீவீயை பார்த்தாலே பயமாக இருந்தது!! ரொம்பவும் ரசித்த இன்னொரு பேய் படம் ManojNiteShyamalanனின் ‘The Sixth Sense’. அது போக, மலையாள படமான ‘மணிசித்ர தாள்’ மிகவும் ரசித்த ஒன்று!

படம்

இப்படியாக வளர்ந்து, திருமணம் முடிந்து குழந்தைகள் வந்து விட்ட பின்னர், இந்த பேய் பட மோகங்கள் அறவே இல்லாமல் போயிற்று!! கிட்டதட்ட நிறைய வருடங்கள் ஓடி விட்டது ஒரு அருமையான பேய் படத்தை ரசித்து!! என் நீண்ட நாள் ஆசையான , ஒரு த்ரில்லிங்கான பேய் படத்தை கண்டிப்பாக இன்று  பார்த்து விடுவேன் என்று நினைக்கிரேன்!! பார்க்கலாம் ”The Conjuring’ Movie எப்படி இருக்கும் என்று!! ரசித்து விட்டு சொல்கிறேன்……..

5 thoughts on “பேய், பூதம்,பூச்சாண்டி

  1. The Conjuring Movie பார்த்தால் கண நேரத்தில் ஜுரம் வந்து விடும் போலயே!!!

  2. இருபது வருடங்களுக்கு முன்பாக 13ம் நம்பர் வீடு பார்க்கத் தொடங்கிய அனுபவம் இருக்கிறதே ,இப்ப நினைத்தாலும் பயமாக இருக்கும்.பத்து நிமிடம் கூத படம் ஓடியிருக்காது. கண்ணைத் திறக்கவே பயம். அப்பொழுதெல்லாம் ரிமோட் கிடையாது. டிவியை ஆப் செய்ய பயந்து உங்களைப் போலவே நான் என் பெண், பையன் எல்லோரும் ஒருவரை ஒருவர் ஆப் செய்ய நீபோ, நான் போ என்று துரத்த உள்ளேயிருந்து என் மாமியார் ஏன் இவ்வளவு சத்தம் என்று சொல்லிக் கொண்டே வந்து டப் என்று டீவியை ஆப் செய்து விட்டுப் போனது நினைவிற்கு வந்தது.
    அதிலிருந்து நாங்கள் பேய் படம் என்று சொல்வது கூட இல்லை.

    உங்கள் பேய் பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது. பயமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே படித்தேன். அப்படியெல்லாம் இல்லாமல் நடை வெகு அழகாக கொண்டு செல்கிறது.

    நன்றி மஹா , என் வயதில் இருபது வருடம் குறைத்து இளமையாக்கியதற்காக

    • நேற்று ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு திகில் படம் பார்த்தேன்! மிகுந்த ஆர்வத்தில், படம் பார்க்கும் முன் குடுத்த பில்டப் தான் இந்த பதிவு! உங்களுக்கு வயது ஆகி இருக்கலாம்,ஆனால் உங்கள் எழுத்து நடை உங்களை இளமையாகவே காண்பிக்கின்றது!! படித்து, ரசித்து, பின்னூட்டம் இட்டமைக்கு மிகுந்த நன்றிகள் ராஜி மேடம்! என் அம்மாவின் பெயரும் ராஜி தான் 😀

  3. “வீட்டை விட்டு சாயுங்காலம் விளையாட போகும் முன்னர், அம்மா எச்சரிக்கை செய்வார்களே, இருட்டுரதுக்கு முன்னாடி வந்துடு, இல்லை என்றால் பூச்சாண்டி பிடித்து கொண்டு போய் விடுவான்!! யார் இந்த பூச்சாண்டி, என்ன பெயர் இது? பூ வெச்சிருப்பானா?? முதல் பயம் மனதினுள் முளை விடும்.”

    பிள்ளைகளை ஒரு போதும் பேய்,பூதம் பிடிக்கும் என்று சொல்லி பயமுறுத்தவே கூடாது.அது அவர்களின் ஆழ் மனதில் அச்சத்தை உண்டு பண்ணி விடும். இவ்வாறான பிள்ளைகள் எதிர் காலத்தில் பயந்த சுபாவத்தை உடையவர்களாகவே இருப்பார்கள்.பிள்ளைகள் துணிச்சல் மிகுந்தவர்களாக இருக்கும் போதே வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிக்க முடியும்.
    நன்றி மஹா மேடம்.
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    • நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி பிரபு சார்! தேவை இல்லாத பயங்களை பிஞ்சு உள்ளங்களில் விதைப்பது கொடிய குற்றம்! உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙂

rajalakshmiparamasivam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி