கொசுக்களுக்கு வெண்டக்காய் ரொம்ப பிடிக்குமோ!! . . . . . . என் விரலை மட்டும் ஏன் இந்த கடி கடிக்குது!!
திடுதிப்பென்று வீட்டினுள் வருவார் இந்த அழையா விருந்தாளி திருப்பி வீட்டை விட்டு கிளம்புதற்கு முன் வீட்டில் உள்ள அத்தனை பேரையும் ஒருத்தர் மாத்தி ஒருத்தராய் கட்டி அரவணைத்து பிரியா விடை குடுத்தே செல்வார் இந்த பாசக்காரர் . . . . .Viral Infection!!
யாரொருவர் மிகுந்த துயரத்தில் விக்கி விக்கி அழுதாலும் நீங்கள் அவருடைய துயரை துடைக்க பெரியதாக எதுவும் செய்யாவிட்டாலும், ஒரு டம்ளர் தண்ணியாவது குடிக்க குடுங்கள் அவர் விக்கலை நிறுத்துவதற்கு!!
ஒரு திரைப்படத்தை கண்டு முடித்த பின்னரும் மூன்று நாட்கள் வரை தூக்கம் வரவில்லை என்றால் அது திகில் படம்.. அதே தூக்கம் ஒரு திரைப்படத்தை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே மூன்று தடவை வந்தால் அது துயில் படம்!!
இல்லாததை இருப்பதாக நினைத்து கற்பனை செய்வதும் ஒரு சுகம் தான்! அப்படி இல்லாத ஒன்று தான் பேய்!! இந்த பேய், பூச்சாண்டி எல்லாம் நாம் சிறு வயதில் இருந்தே பிறர் சொல்ல கேட்டும், புத்தகத்தில் படித்தும் அதற்கு ஒரு கற்பனை வடிவமும் குடுத்து உலாவ விட்டிருக்கிரோம்.. எப்போது இருந்து பேய் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன் என்று சரியாக நினைவில்லை. வீட்டை விட்டு சாயுங்காலம் விளையாட போகும் முன்னர், அம்மா எச்சரிக்கை செய்வார்களே, இருட்டுரதுக்கு முன்னாடி வந்துடு, இல்லை என்றால் பூச்சாண்டி பிடித்து கொண்டு போய் விடுவான்!! யார் இந்த பூச்சாண்டி, என்ன பெயர் இது? பூ வெச்சிருப்பானா?? முதல் பயம் மனதினுள் முளை விடும்.
அடுத்ததாக சாப்பிட வைப்பதற்காக சொல்லப்படும் கதைகளில் கண்டிப்பாக ஏதாவது ஒரு பூதம்(அதற்கு ஆயிரம் தலை இருக்கும்), இல்லை ஒரு சூனியகாரி(அவளுக்கு பற்கள் நீண்டு, நகங்கள் கூர்மையாக இருக்கும்), இல்லை ஒரு ஒற்றை கண் அரக்கனாவது இருப்பான்! அதை கதையில் வரும் ஹீரோ எப்படியாவது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஒரு பூவை இல்லை ஒரு நாகம் காத்த வைரக்கல்லை திருடி, இப்படி ஏதாவது ஒன்றை கஷ்டப்பட்டு கொண்டு வந்து இந்த பூதத்தை அழிக்க வேண்டும்! அப்போ என்னோட பிஞ்சு மனதில் சின்னதா ஒரு டவுட் வராமல் இல்லை! ஏற்கனவே யாரோ ஒரு தீயவர் இறந்து போய் தான் பூதம் ஆகி இருக்கிரார்! அதை எதுக்கு திரும்ப அழிக்கனும் என்று புத்தி ,கூர்மையோடு யோசித்தாலும் கேள்வி கேட்க தோன்றவில்லை! கதையில் என்ன நடந்தா என்ன, திரில்லிங்கா இருக்கில்ல!!
கிட்டதட்ட சிறு வயதில் எல்லா மரங்களின் மீதும் ஏறிய அனுபவம் உண்டு! ஆனால் புளிய மரம் பக்கத்தில் மட்டும் உச்சி வெயில் பொழுது போவது கிடையாது! ஏனென்றால் அந்த சமயம், பேய் உச்சாணி கொம்பில் பசியோடு உட்கார்ந்திருக்குமாம்!! யாராவது நிமிர்ந்து பார்த்தார்கள் ஒரே அடியா அடித்து சாய்த்து விடும் என்று சொல்ல கேட்டிருக்கிரேன்! நானும் அந்த பயத்தில், புளிய மரத்தை தாண்டி செல்லும் போது மட்டும் குனிந்த தலை நிமிராமல், நெஞ்சு தடதடக்க ஒடியே வந்து விடுவேன்!! இன்னொரு கதையும் உண்டு, மதிய நேரம் தோட்டத்து பக்கம் யாரேனும், கறி குழம்பு, மீன் குழம்பு என்று அசைவ வகைகளை தனியாக கொண்டு சென்றால், பின்னாடியே பேய் பேசி கொண்டே வருமாம், ‘ஏய் எனக்கு கொஞ்சம் தாயேன்?’ என்று!
இப்படி வகை வகையாய் கூட படிக்கும் பிள்ளைகள் கூறிய கதைகளால், பேய்கள் மனதினுள் நீக்கமர நிறைந்து இருக்கின்றது! சரியாக சொல்ல வேண்டும் என்றால், நம் மனதிற்கு நாமே குடுக்கும் ஒரு திரில்!
இப்படியாக, பேய் படங்களின் மீது கவனம் திரும்பியது! முதன் முதலில் விவரமறிந்து பார்த்தது ‘பதிமூன்றாம் நம்பர் வீடு’. அதை பார்த்ததிலிருந்து 13 நும்பர் மேல் ஒரு வெறுப்பு உண்டாயிற்று என்றால், அதில் ஆச்சரிய பட ஒன்றுமே இல்லை! என் தங்கை எனக்கும் மேல் த்ரில் விரும்பி! அந்த படத்தில் பேய் நிற்கிறது என்பதை மெய்பிக்க, கண்ணாடி முன் நிற்பவரின் பிம்பம் தெரியாது, புகை கிளம்புவதை காண்பிப்பார்கள்!! அதை பார்த்ததில் இருந்து, அவள் கண்ணாடி இருக்கும் அறைகளில் உறங்குவதையே விட்டு விட்டாள்!!
கொஞ்சம் வளர்ந்த பின்னர், தோழிகள் கூட்டாக சேர்ந்து ‘Evil Dead’ போன்ற பேய் படங்கள் பார்த்ததுண்டு!! அதில் பாதி பேர் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பர்! பேய் வருகின்ற ஓசை கேட்ட உடனே கண்ணை மூடி கொள்வார்கள்! பேய் வருகின்ற சீன் முடிந்து விட்டதா என்று கேட்டு விட்டே கண்களை திறப்பார்கள்! நான் ஒரு படி மேல் சென்று காதையும் பொத்தி கொள்வேன்!! இப்படி ஒருவாராக, பேயை காணாமலே பேய் படம் பார்த்து முடித்து விடுவோம்!! இந்த லட்சணத்தில் அந்த படத்தை இதுவரை பார்க்காதவர்களிடம், பெருமை வேறு அடித்து கொள்வோம்!!
சில காலங்களுக்கு பிறகு, இந்த கேபிள் டீவீ எல்லாம் வந்து சேர்ந்த பின்னர், HBO சேனலில், வியாழக்கிழமை தோறும் பேய் படங்கள் போடுவார்கள்! அதை ஆர்வத்தோடு பார்த்ததுண்டு! அதில் ‘The Ring’ என்ற படத்தை பார்த்து நிஜமாகவே பயந்தும் போனதுண்டு! நல்ல வேளை அன்று என் உடன்பிறந்த தம்பியும் அருகில் இருந்ததால் தப்பித்தேன்! நான் பார்த்த பேய் படங்களில், அது நிஜமாகவே பயங்கரமானது! அந்த படத்தில் ஒரு பேய், டீவீயிலிருந்து இறங்கி வருவது போல் காட்சி அமைத்திருப்பார்கள்!! படம் முடிந்த பின்னரும், பயம் தெளியாமல், நீ டீவீயை அணைத்து விடு, நான் டீவீயை ஆஃப் பண்ண மாட்டேன் என்று நெடு நேரம் சண்டை போட்டோம்!! சிறிது நாளைக்கு டீவீயை பார்த்தாலே பயமாக இருந்தது!! ரொம்பவும் ரசித்த இன்னொரு பேய் படம் ManojNiteShyamalanனின் ‘The Sixth Sense’. அது போக, மலையாள படமான ‘மணிசித்ர தாள்’ மிகவும் ரசித்த ஒன்று!
இப்படியாக வளர்ந்து, திருமணம் முடிந்து குழந்தைகள் வந்து விட்ட பின்னர், இந்த பேய் பட மோகங்கள் அறவே இல்லாமல் போயிற்று!! கிட்டதட்ட நிறைய வருடங்கள் ஓடி விட்டது ஒரு அருமையான பேய் படத்தை ரசித்து!! என் நீண்ட நாள் ஆசையான , ஒரு த்ரில்லிங்கான பேய் படத்தை கண்டிப்பாக இன்று பார்த்து விடுவேன் என்று நினைக்கிரேன்!! பார்க்கலாம் ”The Conjuring’ Movie எப்படி இருக்கும் என்று!! ரசித்து விட்டு சொல்கிறேன்……..
அடேங்கப்பா! ‘Opposite poles attract each other’ என்று சும்மாவா சொன்னாங்க தன் கடைசி ஆவி பிரியும் வரை ரெண்டும் இந்த கடலை போடுது . . . . கடாயில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய்யை ஏதேச்சையாக சந்தித்த தண்ணீர் துளிகள்!!
அரிசி வாங்கும் பொழுது பழைய அரிசியா என்று கேட்டு வாங்குங்கள் இல்லையேல் புளியோதரை போட நினைக்கும் தினங்களில் தயிர் சாதம் மட்டுமே சாத்தியமாகும்!!
துவைத்து இரண்டு நாட்களே ஆன நிலையில் மீண்டும் உங்கள் வீட்டு மேஜை விரிப்பில் சாம்பார் சிந்தி கறையாகி விட்டதா…… கவலை வேண்டாம் ஒரிரு நாள் அப்படியே விட்டு விடுவீர்களாயின் கறை காய்ந்து ஒரே சுரண்டலில் உதிர்ந்து காணாமல் போய் விடும்!!
தயவு செய்து உங்கள் சமையலறையில் உள்ள உளுந்தம்பருப்பு டப்பாவை திறந்து நுகர்ந்து பார்த்து விடாதீர்கள் மீறினால் . . . . முனி அடித்து விடும்!!
பித்தத்தினால் ஏற்படும் தலை சுற்றல், உமட்டல் போன்ற நம் உடம்பில் தோன்றும் அறிகுறிகள் காணாமல் போவதற்காக தேனீரில் தட்டி சேர்க்கப்படும் இஞ்சியை சற்று நிதானத்தோடே தட்டுங்கள் இல்லையேல் தட்டிய தட்டில் இஞ்சி காணாமல் போவது நிச்சயம்!
எங்கோ இருக்கும் நெசவாளி தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான் என்று நினைத்து கொண்டே நெய்வார்.. கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு கேட்டுட போவுது!!
எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றாலும் அங்கே வரும் அழகான மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான் முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம் பெருமையடிக்கும் ஆண்களே…. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் மனைவி அந்த பெண்ணை பார்த்து பெருமூச்சு விட்டு கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள் தப்பிச்சிட்டியேடி!!!
பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி இருக்கும் போது தான் ஃபோன் வரும்.. கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட நீ எடுடா என்று பையனை கை நீட்ட அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை காதில் வைத்து விட்டு பொய்யான வருத்தம் குரலில் தொணிக்க சொன்னான் ‘என்னது ஸ்கூல் லேதா???’ அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு கொண்டு இருந்தார்….. அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!
‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க இல்லையா டொரேமான் ஸ்டிக்கர் வாங்கிடுங்க… எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு இந்த இரண்டும் தான் புடிக்கும்’ ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில் கொண்டாட போகும் என் பையன்!!
யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் இருப்பதற்க்காக அணிய படுகின்ற உடைகள் கூட பளிச் பளிச் என்று கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி பார்க்க வைக்கிறது . . . . வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பர்தாக்கள்!!!
இந்த தடவை எந்த ஒரு தவறும் நிகழ்ந்து விட கூடாது என்ற சூதானத்தோடு வீட்டை பூட்டி விட்டு மார்கெட் செல்லும் முன் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டேன்.. கைபையினுள் செல்போன் இருந்தது பர்ஸ் இருந்தது அதில் முக்கியமாக பணமும் இருந்தது பூமி தாய்க்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்ய கூடாது என்ற நோக்கில் எடுத்து வைக்கபட்ட துணி பைகள் கூட பத்திரமாய்.. சீப்பு எதுவும் பின்னந்தலையில் சொருகி இல்லை என்பதை கூட மறக்காமல் சரி பார்த்து கொண்டேன்.. மூன்று நான்கு தடவை வாசற்கதவை பூட்டி திறக்கும் வேலை இல்லை என்ற மன நிம்மதியோடு வீட்டை பூட்டி விட்டு சாவியை பத்திரமாய் கைபையினுள் போட்டு வைத்தேன்… மாடி படிகளில் சிட்டாய் பறந்த நான் யாரும் பார்த்து விடுவதற்குள் ஓடிய வேகத்திலேயே திரும்பவும் வந்து எப்போதும் போல் வீட்டை மறுபடியும் திறந்தேன் ஜோடி மாற்றி போட்டு விட்ட காலணிகளை கழற்றி மாற்றுவதற்காக!
குடும்பத்துகே தலைவியா இருந்து என்ன ப்ரயோஜனம் காலை நேரங்களில் சூடா ஒரு கப் தேனீர் குடிப்பதற்குள் ஒன்று ஆறி போய்விடுகிறது இல்லை அவசரத்தில் நாக்கு பொத்து போய் விடுகிறது!!!
இப்போதெல்லாம் காலை நேரங்களில் எனக்கு ப்ரஷர் செமையா எகிறிடுது . . . . . . . குக்கரில் ஒழுங்காக ப்ரஷர் ஏறாத ஒரே காரணத்தினால்!!
இந்த இதயம் நல்லெண்ணை இதயத்துக்கு நல்லது என்று யாரு சொன்னாங்க… பேக்கின் மீது அச்சடிக்கபட்ட விலையை ஒரே ஒரு தடவை கண் கொட்டி பார்த்தாலே நமது இதயம் டமார் என்று வெடித்து விடும் போலயே… அரை லிட்டர் பேக்கின் விலையே 153 ரூபாயாம்!!!
வாழ்க்கையில் சூடு பட்ட நெஞ்சமும் டீயால் சூடு பட்ட நாக்கும் சுவைகளை அறிய முற்படுவதில்லை!!
ஆவின் கண்கள் இவ்வளவு அழகா என்று ஆவென்று வாயை பிளந்து வியந்தால் அது Bulls Eye!!
பருப்பு வெந்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாக மசித்து விட்டு விடுதல் நலம் இல்லையேல் எவ்வளவு திறமையாக சாம்பார் வைத்தாலும் பருப்பு தனித்தனியாக முழித்து கொண்டு தான் நிற்கும்… படம் எடுத்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாய் ரீலீஸ் ஆக முடியாமல் தடை செய்யபட்டு பின்பு வெளி வருகின்ற திரைபடங்கள் போல!!
இளமை கொப்பளிக்கும் முகப்பருக்களுக்கு பாதுகாவலாய் கருப்பு பூனை படைகள் . . . . . . Black Heads!!
நம்ம ஆசை ஆசையா திருப்பி திருப்பி எத்தனவாட்டி கால் செய்தாலும் ஃபோனை கையில எடுப்பேனா என்று அடம் பிடிப்பவர் . . . . . கேஸ் புக் செய்பவர்!!
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் ஒரு காலம் இருக்குது என்று சொன்னால் புரியவா போகுது . . . . .
பகலிலும் என்னை சுற்றி சுற்றி கடிக்கும் மரமண்டை கொசுக்கள்!!
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை! ஏன் என்றால்…………. . . . . . . Whatsapp இருக்கே தூரமில்லை!!!
அதிகாலையிலே உங்கள் வீட்டின் சமையலறையில் பூக்கின்ற பளிச் வெள்ளை நிற பூக்கள் தீடீரென்று சற்றே சிவந்து சிவந்து பூத்தால் நீங்கள் தேங்காய் துறுவிய கையோடு தேங்காய் மூடியையும் சேர்த்து தூக்க கலக்கத்தில் துறுவுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
மிளகு இருக்கும் வறுத்த முந்திரி கிடக்கும் வெண்பொங்கல் அல்ல வேக வைத்த நிலகடலை அலங்கரிக்கும் புளியோதரை அல்ல ரொம்பவும் குழைவாக இருக்கும் தயிர் சாதமும் அல்ல ப்ரவுன் நிறத்தில் நெய்யில் வறுத்த முந்திரி மிளகு நிலகடலையால் அலங்கரிக்கபட்டு மிதமான காரத்துடன் கடைசி வாய் சாப்பிடும் வரை சூடு தாங்க முடியாமல் நாக்கு அலற அலற, என்னவாக இருக்கும் என்ற ஐயம் தீராமலேயே வயிற்றினுள் தள்ளினால் அதுவே குண்டூர் பெருமாள் கோவில் பிரசாதம்!
ஏழு ஸ்வரங்கள் உண்டு செய்யும் மாயங்களில் அவ்வபொழுது தொலைந்து போகும் எனக்கும்.. பள்ளியில் இருந்து பிள்ளைகள் வீடு திரும்ப தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் ஆட்டோவின் பேரிரைச்சலை தவிர மற்ற எல்லா வகை இசையும் நாராசமாகவே ஒலிக்கின்றது!
மிஸ் பண்ணவே கூடாத விஷயங்கள் இரண்டு… . . . . . . . . 1)கத்தி 2)குக்கர் வெயிட் இல்லாட்டி போனா அன்றைய நாள் முழுக்க சமையலறையினுள் நீங்கள் தொலைந்து போய் விடுவது நிச்சயம்!
எந்த கொம்பனாலையும் எடுக்க முடியாத வெள்ளை துணிகளில் படியும் கலர் சாய கரைகளை சும்மா அசால்ட்டா ஒரே சலவையில் நீக்கிடுவான் இந்த கும்கி AMWAYயின் SA8!!
பஸ்ஸில் சீட் இருப்பது போல் கண் கட்டு வித்தை காட்டினால் அவர் MAKE MY TRIP.COM பஸ்ஸில் சீட் இருக்குதா என்று நோட்டம் விட்டாலே போதும் அடுத்த நிமிஷமே கர்சீப் போடாத குறையாய் ஒரு சீட்டை பிடித்து நம்மை திக்குமுக்காட வைப்பார் TRAVELYAARI.COM!!
ஒரு பாவமும் அறியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தேமேனு இருக்கும் போதும் நீ இந்த தப்பு பண்ணிட்ட அந்த தப்பு பண்ணிட்ட என்று கூசாமல் பொய் சொல்லி கழுத்தை புடிக்காத குறையாய் வெளியே தள்ளி விட்டு அடுத்த நொடியே உள்ள வா வா என்று அழைக்கும் அவரின் சொல்லுக்கு உடன்பட்டு மானம் கெட்டு நாமும் உள்ளே நுழைந்தால் அவரே IRCTC!!
நேற்று இரவிலிருந்து எடுத்ததெற்கெல்லாம் சள் புள்ளு என்று எறிந்து விழும் என்னை பார்த்த பின் நிச்சயமாக என் கணவருக்கு புரிந்திருக்கும் நேற்று இரவு கோமா நிலைக்கு சென்ற ஸ்டெபிலைசர், இது நாள் வரை ஃப்ரிஜின் வோல்டேஜை மட்டும் கண்ட் ரோல் செய்யவில்லை தன் மனைவியின் மனநிலையையும்
சேர்த்து தான் என்று!!
ஸ்கூலுக்கு மட்டம் போட்டு விட்டு பிள்ளைகள் பந்தும் கையுமாய் விளையாட கிளம்பினால் . . . . . . . அன்று பந்த்!!
Alpenliebe Juzt Jelly ஒன்னு எடுத்து சாப்பிடுவதும் Rinogel மருந்து பாட்டிலை திறந்து ஒரு 10 மில்லி வாயில் ஊற்றிகொள்வதும் சாத் சாத் ஒன்று தான்!!
எதிர்பாராத தருணத்தில் அறியாமல் நடந்தது தான் அந்த உரசல் முதல் ஸ்பரிசமோ என்னவோ சற்றே சிவந்து தான் போனாள் அடுத்தடுத்து நடந்த பட்ட இடத்திலேயே படும் என்பது போன்ற உரசல்களால் உள்ளுக்குள் எரிய ஆரம்பித்த அவள் முதன் முறையாக தன் நிலைக்காக வருந்தினாள்…. கையில் சூடு பட்ட உடனேயே ஒரு BandAid ஆவது போட்டிருக்கலாம் என்று!!
என்னையும் ஒருவர் இவ்வளவு நேரம் நினைக்கிராரா… ஆச்சர்யம் தாங்க முடியாமல் இரு விரல்களால் என் மூக்கை அழுத்தி பிடித்து ஒரு நிமிடம் வரை மூச்சை நிறுத்தினேன்.. . . . . . அப்பாடா! ஒரு வழியாய் விக்கல் நின்று விட்டது!
அம்மா டீ போடுர குச்சி தரீங்களா என்று ஆர்வமாய் கேட்ட என் பையனை பார்த்து வியந்த நான், ‘என்னடா உங்க சைன்ஸ் மிஸ் கொண்டு வர சொன்னார்களா…. என்று கேட்டு கொண்டே டீ பாக்கெட்டுக்கு பின்னால் அச்சடிக்கபட்ட அஷ்வகந்தா, முல்லேத்தி, துளசி, ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை நோட்டமிட்டு விட்டு சொன்னேன், முல்லேத்தி ஒன்று தான் குச்சி மாதிரி இருக்கு அதுவாடா வேனும்…’ என்று படபடவென கூறிய என்னை வியப்போடு பார்த்த அவன் சொன்னான், அது இல்லை அம்மா, நான் சொல்வது டீ போடுர குச்சி, Fire வருமே… ஓ தீ குச்சியா!!
கண்கள் இமை கொட்ட மறந்து கருவிழிகள் நிலையில்லாமல் அலைந்து இன்றே முடித்து விட துடித்து அத்தகைய ஆர்வ வெறி தீரும் வரை கருக் முருக் என்று பசி இல்லாமலே நொறுக்கு தீனிகளை வெறியாய் கபளீகரம் செய்து கொண்டு ஒருவர் இருப்பாராயின் அவரே 100% புத்தக புழு!!
துன்பம் வரும் ஒவ்வொரு நொடியும் பூவாய் சிரித்து பிறரையும் மகிழ்விக்கும் பெருமை பொறியும் அத்தனை சோள முத்துகளையும் சாரும் பாப்கார்ன்!!
பேசா மடந்தையாய் கடை தெருவுக்கு சென்று வேலைகளை முடிக்கும் என்னையும்…. ‘சூடண்டி.. ஒக்க பாட்டிலுக்கு ஒக்க பாட்டில் ஃப்ரீ’ என்று பில் போடும் கடை பணியாளர் கவனிக்க தவறிய 1+1 ஆபரை… பேச தயங்கிய அந்நிய பாஷையில் ரௌண்டு கட்டி பேச வைத்தால் அதுவே ஆபர் செய்யும் மகிமை!!
ஆசை நரைக்கும் முன்னரே மீசை நரைத்து விடுகிரது . . . . கப்பில் பால் குடிக்கும் குழந்தைகள்!!
அம்மா : What do Hawkers sell in Railway Station? பையன்: Hawkers sell various things such as, Books….. Books…..Books……….!!! பொறுமை இழந்து போய் அம்மா சொல்லுவா…… ஆமா..புக்க மட்டும் எல்லாரும் வித்துட்டு இருந்தா அன்னைக்கு வியாபாரம் அவங்களுக்கு விளங்கினா மாதிரி தான்!!