எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்

37 பின்னூட்டங்கள்

images

சப்பாத்திக்கும், நாம புதிதாக தொடங்கும் வாழ்க்கைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு! புதிதாக சப்பாத்தி போட படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விஷயம் என்னவென்றால், முதல் தடவையிலேயே, சப்பாத்தி நல்ல வந்துடாது. நல்லா வரவில்லை, என்ற ஒரே காரணத்துக்காக, சப்பாத்தி போடுவதையே விட்டு விட கூடாது. ஒவ்வொரு முறையும் போட போட தான் வரும். இதே போல், புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களுக்கும், ஆரம்பத்தில், கற்பனை செய்ததை போல் எல்லாம் நடந்து விடாது! வாழ்க்கையை, வாழ வாழ தான், அதாவது அனுபவம் கூட கூட தான் வாழ்க்கை இனிக்கும்!

முதன் முதலில் சப்பாத்தி மாவ பிசைந்தது எல்லாருக்கும் நல்லாவே நியாபகம் இருக்கும்.. தண்ணீர் கூடி, இல்லை மாவு இறுகி இப்படி எதாவது ஒரு பிரச்சனை ஆகாம இருந்திருக்காது. மாவை கூட்டி, குறைத்து, உப்பு போட மறந்து, சப்பாத்தி செய்து முடிப்பதற்க்குள் போதும், போதும் என்று ஆகி இருக்கும். ஒழுங்காக எல்லாம் நடக்க வேண்டும் என்றால், முதலில் டென்ஷன் ஆக கூடாது. எவ்ளோ பேருக்கு சப்பாத்தி செய்ய போகிறோம் என்பதை முதலில் அறிந்து, அதுக்கு தக்கவாறு மாவு எடுக்க தெரியனும். மறக்காமல் உப்பு போடணும். ரொம்ப நிதானமாய், பொறுமையாய், தண்ணீர் விட்டு கிளறி, ரொம்பவும் தண்ணியாக ஆகி விடாமல், மாவை சிறிது கிளுகிளுவென பிசைந்து, கடைசியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, உருண்டைகள் இட வேண்டும். சப்பாத்தி அருமையாக வர வேண்டும் எனில், இந்த மாவின் பதம் அருமையாக இருக்க வேண்டும். இதே போல், நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையோடு, கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல், கூலாக வாழ பழகி கொள்ளுவது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையை கடை பிடித்தல் நலம். விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுதல் நல்லது.

சிலர், சப்பாத்தி மாவை, மிக கடினமாக பிசைந்து வைத்து விட்டு, டம் டம் என்று அதை போட்டு அடித்து கொண்டு இருப்பர். பாவம் அவர்களுக்கு தெரியாது,எப்படி அடித்தாலும்,அது வர்ர மாதிரி தான் வரும் என்று. அதே மாதிரி, நம் வாழ்க்கையிலும், நம் வாழ்க்கை துணையை அளவற்ற அன்பினால் கவர முயற்சி செய்ய வேண்டுமே ஒளிய வன்முறையாலோ, அடக்குமுறையாலோ, ஆதிக்கத்தாலோ அல்ல!! மென்மையான குணமும், அன்புக்கு கட்டுபடும் மனமும் இருந்தால் போதுமானது..

இப்போ உருண்டைகளை தேய்க்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு உருண்டையாய் எடுத்து, மாவில் தோய்த்து, சப்பாத்தி கட்டையில் வைத்து, உருளையால் மாவை அழுத்தி, வட்ட வடிவமாய் இழுக்க வேண்டும். இவ்வாறு தேய்க்கும் போது, நிதானம் மிகவும் அவசியம். அவசர பட்டு தேய்த்தோமேயானால், கட்டையில் மாவு ஒட்டி கொண்டு விடும். நேரம் வீணாகி, மாவும் இழுக்க வராமல் போய் விடும். இதே மாதிரி, வாழ்க்கையிலும், இன்பம் போல துன்பமும் அப்ப அப்ப தலை காட்டாமல் இருப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது. எந்த ஒரு சண்டை, சச்சரவு எல்லவற்றையும் மிக பொறுமையாய் கையாளுவது அவசியம். சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க தெரிந்து கொண்டால், வாழும் நிமிஷங்கள் ஒவ்வொன்றும் சந்தோஷத்தில் மட்டுமே கறைந்து செல்லும்.

அடுத்த முக்கியமான வேலை, தேய்த்த சப்பாத்தி ஒவ்வொன்றையும் சப்பாத்தி கல்லில் போட்டு எடுப்பது. இதற்கு முதலில் கல்லை காய வைக்க வேண்டும். கல் ரொம்பவும் காய்ந்து விட கூடாது, சரியான சூட்டில், சப்பாத்திகளை போட்டு எடுக்க வேண்டும். அப்ப அப்ப சப்பாத்தியை திருப்பி போடணும், ஒரே பக்கமாய் ரொம்ப நேரம் வேக விட்டு விட கூடாது, பிறகு வலுத்து கொண்டு வறட்டி போலாகிவிடும். திருப்பி போட்டு எடுப்பதற்க்கு முன்னால், எண்ணெய் சிறிது விட்டு எடுக்கலாம்.. இதே போல், வாழ்க்கை துணைவரோடு எழும் ஊடல்கள் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க விட கூடாது. அப்ப அப்ப, அவரவர் செய்த தவறுகளை ப்ரஸ்பரம் மறந்து, மன்னித்து, காதல் குறையாமல் பார்த்து கொள்வது நலம்.

ஒரே மாதிரியே சப்பாத்தி போட்டாலும் போர் அடித்து விடும். ஒரு நாள், புல்கா, ஒரு நாள் காய்கரி ஸ்டஃப் செய்யபட்ட சப்பாத்தி, வாழைப்பழ சப்பாத்தி, பால் ஊற்றி பிசைந்த சப்பாத்தி, நெய் சப்பாத்தி என்று வித விதமாய் செய்தால் நல்லது. நாமும், அப்ப அப்ப, நம்ம ஸ்டைல மாத்தி, வாழ்க்கை துணையோட கண்களுக்கு ஃப்ரெஷா தெரிந்தல் நல்லது தானே, வாழ்க்கை போர் அடிக்காமல், ஒவ்வொரு நாளும் புதிதாகவும்,வாழ்க்கை அழகாகவும் இருக்கும்….

37 thoughts on “சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்

  1. அடாடா! என்ன தத்துவம், என்ன தத்துவம்! சப்பாத்தி சரியா வரலையா? அதனால தத்துவமா போட்டுத் தள்ளிட்டீங்களா?

    உங்களை ரொம்பவும் பாராட்டவேண்டும் – எத்தனை பொருத்தமாக சப்பாத்தி செய்வதன் ஒவ்வொரு stage யும் வாழ்வின் ஒரு பகுதியுடன் இணைத்து எழுதியிருக்கிறீர்கள்!

    அடுத்தாற்போல தோசை vs வாழ்க்கை எதிர்பார்க்கலாமா?

    Jokes apart! உண்மையில் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    • கரெக்டா கண்டு பிடித்து விட்டீர்கள் அம்மா!! சமையல் செய்யும் போது, நன்றாக வரவில்லை எனில்,அன்றைக்கு நாள் முழுவதுமே மூட் ரொம்ப மோசமாகி விடும். அப்புறம் இப்படி ஒரு பதிவை எழுதி, ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டியது தான்!!

  2. சப்பாத்தியிலும் தத்துவம் ..!

  3. சுவையான சப்பாத்தி அருமையான வாழ்க்கைப்பாடம் ஆகா ஓஹோ போட வைக்கிறது உங்கள் பகிர்வு

  4. சாதாரணமாக நினைக்கும் சப்பாத்திக்குள் – இத்தனை ரகசியங்களா!?..

    வலைச்சரத்தில் சரியாகத் தான் சொல்லியிருக்கின்றார்கள்!..

    மகிழ்ச்சி!..

  5. சப்பாத்தி சொல்லும் பாடம் அருமை.

  6. வலைச்சரம் வழியாக வந்தேன்…சப்பாத்தியையும், வாழ்க்கையும் நன்கு ரசித்து பழகியிருப்பது புரிகிறது உங்கள் வரிகளில் வாழ்த்துக்கள்

  7. சப்பாத்தியை வைத்துக் கொண்டு அழகாய் வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  8. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்ததுக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_24.html

    -நன்றி-
    -அன்படன்-
    -ரூபன்-

    • வணக்கம் சகோதரா!
      என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளதை ஓடோடி வந்து ஆசையுடன் அறிவித்து என்னை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂

  9. வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கும் சப்பாத்தி.
    மிக அருமை.எனக்கு முன் ரூபன் வந்து சொல்லி விட்டார்.ரூபனுக்கு நன்றி.

    • வணக்கம் மேடம்!
      இன்று என் பதிவை தேர்ந்தெடுத்து என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்!! எனக்கு இது மிக பெரிய ஊக்கம் குடுத்தது போல இருக்கிறது.. மென்மேலும் சிறப்பான பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகிறது. நன்றி 🙂

  10. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!

  11. வலைச் சரத்தில் உங்கள் சப்பாத்தி பெருமை தனை கண்டு,

    உங்கள் சப்பாத்தி பதிவை பார்க்க
    முப்பாத்தம்மன் கோவில் வரை சென்று,
    பிறகு
    மும்பை மகா லக்ஷ்மி கோவிலுக்கும்
    சென்று பின்னே
    இன்று தான் கண்டு பிடித்தேன்.

    கண் கொள்ளா சப்பாத்தி தனை.

    எண்ணிக்கை இல்லாமல்
    எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    திருச்சியில் அந்த காலத்தில் சூகா சப்பாத்தி என்று
    நேரடியாக அடுப்பிலே போட்டு எடுத்து
    சுடச் சுட தருவார்கள்.

    வாழ்க வளமுடன்.

    சுப்பு தாத்தா.
    http://www.menakasury.blogspot.com
    http://www.vazhvuneri.blogspot.com
    http://www.subbuthatha72.blogspot.com

    • வணக்கம் சுப்பு தாத்தா,
      உங்கள் வருகைக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவை படித்து, ரசித்து பாரட்டியமைக்கும் என் நன்றிகள். சில காலம் வெளியூர் சென்ற படியால் உடனே உங்களுக்கு பதில் குடுக்க முடியவில்லை. உங்கள் வலைதளத்தை குறித்து வைத்து கொண்டேன்! விரைவில் உங்கள் தளத்தில் சந்திக்கிறேன். உங்ககளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி 🙂 🙂 🙂

  12. அருமை!!!! 40 வருடத்துக்கு முந்தி யாராவது இதை சொல்லி இருந்தால் எத்தனை நல்லா இருந்திருக்கும். சப்பாத்தியே, பல வருடங்கள் கழித்து தான் சரியா வந்தது..;-))

    கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு.

    • நன்றி நன்றி 🙂
      கல்யாணம் ஆன புதிதில் தான் சமையல் கற்கவே ஆரம்பித்தேன். அதுவும் கணவருக்கு சப்பாத்தி தான் பிடிக்கும். மாவை பிசைந்து சப்பாத்தி போட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். பழக பழக தான் எல்லாமே சுலபமான விஷயம் ஆனது. இந்த பதிவை எழுதிய அன்று காலை கூட மாவை அவசரத்தில் சிறிது கெட்டியாக பிசைந்து விட்டேன், அதில் உருவானது இந்த பதிவு 🙂 உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

  13. கவிதை புரியாத எங்களைப் போன்ற பாமரர்களை மகிழ்விக்க அருமையான நிறைய உரைநடை எழுதியிருக்கீங்க என்று நினைக்கிறேன். அருமை.

  14. சப்பாத்திலக்ஷ்மி க்கு வாழ்த்துக்கள் ….சந்திப்போம் இன்னோர் dr kr.

  15. ஹிஹி, சப்பாத்தி என்றாலே எனக்கு ஒரே பிரச்சினை, எப்போது சப்பாத்தி செய்தாலும், முதல் மூன்று சப்பாத்திகள் ரவுண்டா வந்ததே இல்லை! அதுக்கு பிறகு மற்றதெல்லாம் நல்லா வருது, ஆனா முதல் மூன்று!!!

    • சரவணா… வாழ்க்கை என்பது வாழ வாழ தான் புரியும்! அதே மாதிரி தான் இந்த சப்பாத்தியும்.. செய்ய செய்ய எல்லாம் சரியாகி விடும் 🙂

      • ஹிஹி, இருக்கும் இருக்கும்! நமக்கு ரோவுண்டா வாறதா முக்கியம், சுவையா இருக்கணும் என்றதால இதை பத்தி கவலைப்படுறதில்லை 😀 நம்ம கைவண்ணம், நம்ம டிசைன்!

  16. “சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க தெரிந்து கொண்டால், வாழும் நிமிஷங்கள் ஒவ்வொன்றும் சந்தோஷத்தில் மட்டுமே கறைந்து செல்லும்.”

    இலங்கையில் சப்பாத்தியை ரொட்டி என்று சொல்லுவோம்.
    எதிர்பாராததை எதிர்பார்ப்பது தான் வாழ்க்கை.அது போல் விட்டுக் கொடுப்பவன் கெட்டப் போக மாட்டான்.மிகவும் வடிவாக ரொட்டியை வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளீர்கள்.
    நன்றி மஹா மேடம்.

    • ரொம்பவும் அழகாக பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் பிரபு சார்! நான் சமையல் கற்க ஆரம்பித்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டு படித்தது ரொட்டி தான்… வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரபு சார் 🙂

  17. கருத்துக்கு முதலில் ஒரு சபாஷ்!!

    நாங்கள் செய்யும் சப்பாத்தியில் உலக நாடுகளின் வரைபடம் அனைத்தும் வரும். வட்டமாக மட்டும் வரவே வராது. சில நாள் தேய்க்கும்போது ஆஸ்திரேலியா போல் மேல் கீழ் முனைகள் நீண்டுவிடும். இல்லன்னா பிலிப்பைன்ஸ் போல பிஞ்சு பிஞ்சு வரும். இப்படித்தான் நான் ஜியாக்ரஃபி படிச்சேன் 😜😜😜

    • நான் சமைக்க படிக்க ஆரம்பித்தது கல்யாணத்துக்கு பிறகு தான்! பாவம் என் கணவர் தான் நல்லா வசமா மாட்டிகிட்டார்! அவர் 10 வருடமாக வட இந்தியாவில் நாட்டில் வேலை பார்த்தவர்! சப்பாத்தி தவிர வேற எதுவும் உள்ள இறங்காது! லேப் எலி போல் ஆரம்பத்தில் என்னிடம் சிக்கி கொண்டாலும் , இப்போ நான் எக்ஸ்பெர்ட் தான் : பரவாயில்லை நீங்க இப்படியாவது ஜியாக்ரபி படிச்சுடீங்க 😀

Rajarajeswari jaghamani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி