இது என்ன தலைப்பு, என்று நினைக்க தோன்றுகிறதா?? நாற்றம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்று தெரியுமா? வாசம், மணம்….. ஆனால் இந்த வார்த்தையை உபயோக படுத்தும் ஒவ்வொருத்தரும், துர் நாற்றம் என்று குறிப்பிடாமல், நாற்றத்தையே துர் நாற்றம் ஆக்கி விட்டார்கள்! அது போகட்டும், நாற்றம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமானதொன்று!!
எனது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடி மன நிலையையும் தீர்மானிப்பது இந்த நாற்றம்! காலையில் எழுந்து செய்யும் தேனீருடன், கலந்து வரும் ஏலக்காய் வாசம், அன்றைய நாளின் உற்சாக தொடக்கத்துக்கு வழி செய்கிறது! தாளிக்கும் போது கமழும் கறிவேப்பிலையின் வாசம், பெருஞ்சீரகம், கிராம்பு இவற்றின் அடங்காத வாசம், ஊரை கூட்டும் கொத்தமல்லியின் வாசம், மயக்கும் புதினாவின் வாசம், நெய் உருகும் போது வரும் திணறடிக்கும் வாசம், நன்கு வெந்த கம்பு சாதத்தின் சூடான வாசம், எட்டு ஊரை கை தட்டி கூப்பிடும் மீன் குழம்பின் வாசம், கனிந்த மாம்பழத்தின் அலுக்காத வாசம், அவித்த பனங்கிழங்கின் தீராத வாசம், மழை வர போவதை அறிவிக்கும் மண் வாசனை, சிறு குழந்தைகள் மேல் அடிக்கும் வசம்பு, மஞ்சள், சந்தனம் கலந்த வாசம், ஜவ்வாதின் கூர்மையான வாசம்…………. இப்படி எனக்கு பிடித்த நாற்றங்களை சொல்லி கொண்டே இருக்கலாம்!
இதே நாற்றம், என்னை ஒரு கால கட்டத்தில் ஓட, ஓட விரட்டியதுண்டு!! எப்போனு கேக்கரீங்களா, என் முதல் குழந்தையை கருவுற்று இருந்த அந்த நேரத்தில்! மசக்கையாய் இருந்த அந்த மூன்று மாத காலத்தை மறக்கவே முடியாது என் மூக்கின் மோப்ப சக்தி, ஒரு பழக்கபடுத்தப்பட்ட காவல் நாயை விட ஒரு படி அதிகமாகவே இருந்தது! கிட்டதட்ட ஒரு கி.மீ சுற்றளவில் எழும் அத்தனை நாற்றங்களும் எனக்கு அத்துபடி!
நாங்கள் அந்நேரம் குடியிருந்த வீடு , ஒரு மிக பிரபலமான, தேங்காய் எண்ணெய் கம்பெனிக்கு சொந்தமான, எண்ணெய் மில்லுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது!எனக்கு சிறு வயதில் இருந்தே, காயும் தேங்காய் எண்ணெயின் வாடை ஆகவே ஆகாது! என்னுடைய அம்மா, ஒவ்வொரு முறை பூரி, வடை சுடும் பொழுது எல்லாம், நான் பறந்து வெளியில் ஓடி விடுவேன்! எண்ணெய் வாடை அடங்கும் வரை, என் தரிசனம் வீட்டில் காண கிடைக்காது!
இப்போ, அருகிலேயே, எண்ணெய் மில், தேங்காய் எண்ணெய் வாசத்துக்கு என்ன பஞ்சமா, புதன் கிழமைதோறும், காயும் தேங்காய் எண்ணெயின் வாசம், காற்றில் நிறைந்து குப்பென்று வீச தொடங்கி விடும்! ஏற்கனவே, மசக்கையில் இருந்த எனக்கு, அந்த நாற்றம், என்னை அந்த நாள் முழுவதும் படுத்த படுக்கை ஆக்கி விடும்!! இது என்ன நாற்றம், தாங்க முடியவில்லை, என்று ஒவ்வொரு புதன் கிழமையும், என் கணவரிடம் சொல்லி , குழந்தை போல் அழுவதுண்டு!!
அவரோ, இந்த நாற்றம், புதன் கிழமைதோறும் வீச நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்! உனக்கு, உடம்பு சரி இல்லை என்று சொல்லி படுத்து கொள்வதற்கு, இது ஒரு சாக்கு, என்று வழக்கம் போல் வில்லன் முகத்தை காட்டி செல்வார்!! அவரையும் குறை சொல்ல கூடாது, அவர் என்ன நாலு தடவை கருவுற்றிருந்தாரா, மசக்கையின் துன்பங்களை அறிவதற்கு!!
அடுத்ததாக, வீட்டுக்குள்ளேயே என்னை ஒட ஒட விரட்டிய இன்னொரு வாசம், சாதம் கொதிக்கும் போது வரும் வாசம்! சாதம் வெந்து முடியும் வரை, சமையலறை கதவை மூடி வைத்து விட்டு பறந்து ஓடி விடுவேன்! முட்டைகோஸை வெறுத்தது கூட இந்த கால கட்டத்தில் தான்!
RICE BRAN OIL தெரியுமா?? இந்த எண்ணெய் ரொம்ப லைட், கொலஸ்டிராலை கட்டுபடுத்தும் என்று விளம்பர படுத்துவார்களே!! அது உண்மை தான் என்று, அந்த எண்ணெய்யை உபயோக படுத்திய போது தான் தெரிந்தது! அந்த எண்ணெய்யில் சமையல் செய்யும் பொழுது, அந்த எண்ணெய்யின் நாற்றம் தாங்க முடியாமல், சாப்பிடும் ஆசையே போய் விடும், இதை தான் அப்படி சொல்லி இருப்பார்களோ?? யார் கண்டார்!
இன்னும் சிறப்பாக என் மூக்கை பற்றி அறிய விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!!!
1:38 பிப இல் மார்ச் 7, 2013
உங்கள் மூக்கின் வாசனை பிடிக்கும் ஆற்றல் பற்றி மணக்க மணக்க சொல்லி விட்டீர்கள், போங்கள்! என்ன ஒரு மோப்ப சக்தி!
ரைஸ் பிரான் ஆயில் பற்றிய உங்கள் காமென்ட்…ஹா…ஹா….. தயாரிப்பாளர் இதைப் படித்தால் கடையை மூடிக் கொண்டு போக வேண்டியதுதான்.
எங்கள் வீட்டில் என் மகன் கதவைத் திறந்துகொண்டு வரும்போதே ‘இன்னிக்கு ஆலுவா?’ என்று மோப்பம் பிடித்துக் கொண்டே வருவான். ஆனாலும் உங்கள் முன்னால் அவன் தூசு!
என்ன அருமையான பதிவு, மஹா! ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டே இருந்தேன்.
உங்கள் நாயுடன் இன்று நிறைய விளையாடிவிட்டேன்.
5:02 முப இல் மார்ச் 8, 2013
வாங்க அம்மா! நீங்க வந்து கமெண்ட் குடுததுக்கப்புரம் தான் நான் அடுத்த பதிவு எழுத தயாராவேன்! அவ்ளோ உற்சாகம் கிடைக்கும் எனக்கு! நன்றி, நன்றி, நன்றி !!!
4:52 பிப இல் மார்ச் 9, 2013
வணக்கம்
மஹா(சகோதரி)
அருமையாக எழுதியுள்ளீர்கள் மோப்ப நாய்களை விட மனித மூக்குக்கு அப்படி சக்தியா? ஏன் என்றால் 1கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வாசனை சுகந்தத்தை உணரும் சக்தி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
5:03 முப இல் மார்ச் 10, 2013
வாங்க அண்ணா! இது மசக்கை நேரம் பெண்டிர் மட்டுமே உணர முடிந்த மாபெரும் மோப்ப சக்தி! உங்கள் வருகைக்கு நன்றி!!
9:52 முப இல் மார்ச் 10, 2013
அப்பப்பா என்ன ஓரு நாற்றமப்பா பிள்ளையின் மூக்கின் சக்தி.
நன்றாக இருந்ததடா பதிவு!!!!
மிக நாற்றமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் இது உண்டு.
அதை எடுத்து சொல்லுவது திறமை.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
9:44 முப இல் மார்ச் 11, 2013
உங்கள் வருகைக்கும், கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சகோதரி!
5:22 முப இல் மார்ச் 19, 2013
இந்த நாற்றம் பிடிக்கும், அதாவது உணரும் சக்தி உள்ள பெண்களுக்கு மசக்கையின் போது ரொம்பவே கஷ்டம். குழம்பு கொதிக்கும் வாஸனை கூட உவ்வேதான். யார் வீட்டிலோ பகோடா, மூக்கைத் துளைக்கிறது வாஸனை. நானும் ஸாயங்காலம் பண்றேன் என்று சொல்பவர்களும் உண்டு. உன்னுடைய மசக்கை காலம் பார்க்க முடிந்தது. நான் காட்மாண்டு போன புதிதில்,பஸ்,வேரு யாராவது வீடு , இப்படி எங்கு பார்த்தாலும் ஒரு வாஸனை. என்னவென்று் வெகு நாட்களுக்குப் பின் தெரிந்தது. அது
ஒருவித லிக்கரின் நெடி. ஜாட் jad என்று சொல்வார்கள். வீடுகளிலே தயாராவது. எல்லோரும் அதை குடிச்சுட்டு வரார்களென்று. அதனாலே அதை நான் நேபால் வாஸனை என்பேன் நன்ராக எழுதியுள்ளாய். சிரிப்பாக இருந்தது.
5:34 முப இல் மார்ச் 19, 2013
உங்கள் வருகைக்கு நன்றி அம்மா! அந்த நேபாள் வாசனையை உணருவதற்காகவாவது , ஒரு முறை நேபாள் சென்று வர வேண்டும் 🙂