எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


16 பின்னூட்டங்கள்

என்னை இன்னொரு முறை திருமணம் செய்துகொள்வாயா!!!

படம்

இப்படியொரு கேள்வியை யாரு கேப்பா எனது அருமை கணவரை தவிர! அதுவும், இரவு 11 மணிக்கு, நான் பாதி தூக்கத்துக்கு சென்ற பிறகு, எழுப்பி கேட்டார், ‘WILL U MARRY ME FOR THE SECOND TIME?’ இப்படி பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டால், என்ன சொல்ல, மனதில் இருப்பதை தவிர! கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன்,’ அய்யயோ, முடியவே முடியாது, சான்சே இல்லை, மாட்டவே மாட்டேன், நடக்கவே நடக்காது, இப்படி எல்லாம் புலம்பி விட்டு, போர்வையை இழுத்து பொத்தி கொண்டு, ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றே விட்டேன்! அய்யோ பாவம் அவர், இப்படி ஒரு பதிலை, என்னிடம் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டார் !!

காலையில் எழுந்த போது தான் கவனித்தேன், பேப்பரும் கையுமாய்,சிறிது முகத்தை தூக்கி வைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்! சூடான,தேனீருடன், அவர் அருகில் சென்று அமர்ந்தேன்! நேற்று எதற்காக,அப்படி ஒரு கேள்வியை கேட்டீர்கள்,என்று சிரித்து கொண்டே கேட்டேன்! அவரும் மெல்ல வாயை திறந்தார், போன வாரம் ஒரு கறுத்தரங்கில், ஒருவர் பேசினார், ‘ யார் வேண்டுமானாலும், உங்கள் மனைவியிடம் கேட்டு பாருங்கள், ‘இன்னொரு முறை கடந்த காலத்துக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தால், சென்று,என்னையே மீண்டும் வாழ்க்கை துணையாக தேர்வு செய்து, திருமணம் செய்து கொள்வாயா??’ என்று, எந்த ஒரு மனைவியும், ‘கண்டிப்பாக உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூற மாட்டாள், என்று கூறினார்! என் கணவர் மிகுந்த மன வருத்ததோடு குறிப்பிட்டார்,’நீயும் இப்படி சொல்லுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!!’

இப்பவும் நான் அடித்து கூறினேன், கண்டிப்பா மாட்டவே மாட்டேன்! திருமணம் முடிந்து, இது ஒன்பதாவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது! பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்! எதிரும் புதிரும், எலியும் பூனையும், தென் துருவம் வட துருவம், இப்படி சொல்லி கொண்டே போகலாம், எங்கள் இருவரையும்!! மிக சிறந்த பக்திமான் அவர்! நானோ, கடவுள் பக்தி கிடையாதுனு சொல்ல முடியாது, ஒவராக கிடையாது!
அதுவே, அவருக்கு ஆரம்பத்தில் பெரிய ஷாக் தான்! போக, போக புரிந்தும் கொண்டார்! எனக்கு பேசாமல், இருக்கவே முடியாது, அவரோ அமைதியின் சின்னம்! எனக்கு பிடித்த எதுவுமே அவருக்கு புடிக்காது! ஆரம்ப காலங்களில், என் சமையல் எதுவுமே அவருக்கு புடிக்காது! அவருக்கு,என்ன புடிக்கும், என்ன புடிக்காது, எது அவருக்கு ஒத்து கொள்ளும்,எது ஒத்து கொள்ளாது, இப்படி ஒவ்வொரு விஷயமும், அவருடன் பழகி பார்த்து தான் அறிந்து கொள்ள முடிந்தது! ஆரம்பத்தில், சண்டை கோழியாய் இருந்த நாங்கள், அந்த சண்டைகளையே எங்களுக்கு சாதகமாய் ஆக்கிக் கொண்டோம்! ஒருவரை ஒருவர், நன்கு புரிந்து கொண்டோம்! கிட்டதட்ட, ஒவ்வொரு நாளும்,ஏதாவது ஒன்று புதிதாய் ஒருத்தரை ஒருத்தர் அறிந்து கொள்கிறோம், ஏதாவது ஒரு விதத்தில்! அனாவசிய சண்டைகள் குறைந்து, அன்பு கூடி கொண்டே செல்கிறது, வருடங்கள் செல்ல செல்ல! இது தான் காதலோ??

இப்போ சொல்கிறேன், நான் ஏன், என் கணவரிடம், ‘முடியவே முடியாது, மாட்டவே மாட்டேனு’சொன்னேன் என்று , இவ்வளவு வருட காலம், ஒருத்தரை, ஒருத்தர் புரிந்து, அவருக்காக நானும், எனக்காக அவரும், நிறையவே மாறி இருக்கிறோம், மாறியது கூட அறியாமல்! இவ்ளோ தூரம் வந்தாச்சு, இப்போ போய், திருப்பி முதலில் இருந்து, யாராவது ஆரம்பிப்பார்களா!! என்னங்க நான் சொல்லுரது ரைட்டு தான!!!!!!!


8 பின்னூட்டங்கள்

நாற்றம்

படம்

இது என்ன தலைப்பு, என்று நினைக்க தோன்றுகிறதா?? நாற்றம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்று தெரியுமா? வாசம், மணம்….. ஆனால் இந்த வார்த்தையை உபயோக படுத்தும் ஒவ்வொருத்தரும், துர் நாற்றம் என்று குறிப்பிடாமல், நாற்றத்தையே துர் நாற்றம் ஆக்கி விட்டார்கள்! அது போகட்டும், நாற்றம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமானதொன்று!!

எனது வாழ்க்கையில், ஒவ்வொரு நொடி மன நிலையையும் தீர்மானிப்பது இந்த நாற்றம்! காலையில் எழுந்து செய்யும் தேனீருடன், கலந்து வரும் ஏலக்காய் வாசம், அன்றைய நாளின் உற்சாக தொடக்கத்துக்கு வழி செய்கிறது! தாளிக்கும் போது கமழும் கறிவேப்பிலையின் வாசம், பெருஞ்சீரகம், கிராம்பு இவற்றின் அடங்காத வாசம், ஊரை கூட்டும் கொத்தமல்லியின் வாசம், மயக்கும் புதினாவின் வாசம், நெய் உருகும் போது வரும் திணறடிக்கும் வாசம், நன்கு வெந்த கம்பு சாதத்தின் சூடான வாசம், எட்டு ஊரை கை தட்டி கூப்பிடும் மீன் குழம்பின் வாசம், கனிந்த மாம்பழத்தின் அலுக்காத வாசம், அவித்த பனங்கிழங்கின் தீராத வாசம், மழை வர போவதை அறிவிக்கும் மண் வாசனை, சிறு குழந்தைகள் மேல் அடிக்கும் வசம்பு, மஞ்சள், சந்தனம் கலந்த வாசம், ஜவ்வாதின் கூர்மையான வாசம்…………. இப்படி எனக்கு பிடித்த நாற்றங்களை சொல்லி கொண்டே இருக்கலாம்!

இதே நாற்றம், என்னை ஒரு கால கட்டத்தில் ஓட, ஓட விரட்டியதுண்டு!! எப்போனு கேக்கரீங்களா, என் முதல் குழந்தையை கருவுற்று இருந்த அந்த நேரத்தில்! மசக்கையாய் இருந்த அந்த மூன்று மாத காலத்தை மறக்கவே முடியாது என் மூக்கின் மோப்ப சக்தி, ஒரு பழக்கபடுத்தப்பட்ட காவல் நாயை விட ஒரு படி அதிகமாகவே இருந்தது! கிட்டதட்ட ஒரு கி.மீ சுற்றளவில் எழும் அத்தனை நாற்றங்களும் எனக்கு அத்துபடி!

நாங்கள் அந்நேரம் குடியிருந்த வீடு , ஒரு மிக பிரபலமான, தேங்காய் எண்ணெய் கம்பெனிக்கு சொந்தமான, எண்ணெய் மில்லுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது!எனக்கு சிறு வயதில் இருந்தே, காயும் தேங்காய் எண்ணெயின் வாடை ஆகவே ஆகாது! என்னுடைய அம்மா, ஒவ்வொரு முறை பூரி, வடை சுடும் பொழுது எல்லாம், நான் பறந்து வெளியில் ஓடி விடுவேன்! எண்ணெய் வாடை அடங்கும் வரை, என் தரிசனம் வீட்டில் காண கிடைக்காது!

இப்போ, அருகிலேயே, எண்ணெய் மில், தேங்காய் எண்ணெய் வாசத்துக்கு என்ன பஞ்சமா, புதன் கிழமைதோறும், காயும் தேங்காய் எண்ணெயின் வாசம், காற்றில் நிறைந்து குப்பென்று வீச தொடங்கி விடும்! ஏற்கனவே, மசக்கையில் இருந்த எனக்கு, அந்த நாற்றம், என்னை அந்த நாள் முழுவதும் படுத்த படுக்கை ஆக்கி விடும்!! இது என்ன நாற்றம், தாங்க முடியவில்லை, என்று ஒவ்வொரு புதன் கிழமையும், என் கணவரிடம் சொல்லி , குழந்தை போல் அழுவதுண்டு!!

அவரோ, இந்த நாற்றம், புதன் கிழமைதோறும் வீச நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்! உனக்கு, உடம்பு சரி இல்லை என்று சொல்லி படுத்து கொள்வதற்கு, இது ஒரு சாக்கு, என்று வழக்கம் போல் வில்லன் முகத்தை காட்டி செல்வார்!! அவரையும் குறை சொல்ல கூடாது, அவர் என்ன நாலு தடவை கருவுற்றிருந்தாரா, மசக்கையின் துன்பங்களை அறிவதற்கு!!

அடுத்ததாக, வீட்டுக்குள்ளேயே என்னை ஒட ஒட விரட்டிய இன்னொரு வாசம், சாதம் கொதிக்கும் போது வரும் வாசம்! சாதம் வெந்து முடியும் வரை, சமையலறை கதவை மூடி வைத்து விட்டு பறந்து ஓடி விடுவேன்! முட்டைகோஸை வெறுத்தது கூட இந்த கால கட்டத்தில் தான்!

RICE BRAN OIL தெரியுமா?? இந்த எண்ணெய் ரொம்ப லைட், கொலஸ்டிராலை கட்டுபடுத்தும் என்று விளம்பர படுத்துவார்களே!! அது உண்மை தான் என்று, அந்த எண்ணெய்யை உபயோக படுத்திய போது தான் தெரிந்தது! அந்த எண்ணெய்யில் சமையல் செய்யும் பொழுது, அந்த எண்ணெய்யின் நாற்றம் தாங்க முடியாமல், சாப்பிடும் ஆசையே போய் விடும், இதை தான் அப்படி சொல்லி இருப்பார்களோ?? யார் கண்டார்!

இன்னும் சிறப்பாக என் மூக்கை பற்றி அறிய விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!!!