எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


6 பின்னூட்டங்கள்

டிசம்பர் 21, 2012 என்ன நடக்கும், என்னுடைய பார்வையில்

 

2012உலகத்தில் உள்ள கோடானு கோடி மக்களுக்கு இருக்கும் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று, ‘டிசம்பர் 21, 2012 அன்று என்ன நடக்கும்??’ நிறைய திகிலோடும், சின்ன பயத்தோடும், பன்மடங்கு ஆவலோடும், மக்கள் அந்த தினத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கிரார்கள், ரொம்ப ஆவலோடு வெளிவரும் திரைபடத்தை போல! சில நேரங்களில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தால், ஒன்றுமே நடக்காமல் கூட போய் விடும்!!
என்னங்க பெரியதாய் நடக்க போகிறது, வழக்கம் போல, காலையில் சந்திரன் மறைந்து, சூரியன் உதயமாகும்! நானும் வழக்கம் போல் பாலை சுட வைத்து, டீ போடுவேன்! வழக்கம் போல் என் கணவரும், டீ கிளாஸ்சை கையில் எடுக்கும் போது, இது டீ யா இல்லை கஷாயமா என்று கேட்டு கொண்டே எடுப்பார்! அன்றும் என் குக்கர் வெய்ட் காணாமல் போய் கடைசி நிமிடத்தில் கிடைக்கும், பதற்றதில் என் கேஸ் ஸ்டவ் லைட்டர், நூறாவது தடவையாய், என் கால் பெருவிரல் நகத்தின் மேல் விழுந்து, நான் இங்கே தான் இருக்கேனு தெரிய படுத்தும்!
அனேகமாக, அன்று விடுமுறை விட பட்டிருக்கும்! இன்னிக்கு ‘உலகம் அழியுமா, அழியாதா’ என்று சூடாக பட்டிமன்றம் தொலைகாட்சியில் நடந்து கொண்டிருக்கும்! மாயன் கேலண்டரில் கணித்து சொன்ன 11:11 ஆம், மணிக்கு, உலகம் அழிந்து கொண்டிருப்பதை தொலைகாட்சியில் காட்டி கொண்டிருப்பார்கள், அதாங்க 2012 திரைபடத்தை சொன்னேன், அதை ஒரு மூன்று அல்லது நான்கு சேனலில் போட்டி போட்டு கொண்டு காண்பிப்பார்கள்!
‘நாளை என்று ஒன்று இருந்தால் மீண்டும் சந்திப்போம்’ என்று முக புத்தகத்தில் உருகி உருகி நிறைய பேர் ஸ்டேட்டஸ் போடுவார்கள்! முந்தய தடவை, சுனாமி எச்சரிக்கை கொடுத்த நேரம் எப்படி சில ஆர்வ கோளாறுகள், கடற்கரையில் நின்று, சுனாமி வருமா, எப்படி வரும் என்று ஆசையாக பார்த்து கொண்டிருந்ததை போல, டிசம்பர் 21 அன்றும், பலர் வானத்தையே பார்த்தவாறு வலம் வருவர்!
அன்றைக்கு பீதியை கிளப்பி விடுவார்கள் என்று, முன்னெச்சரிக்கையாக நம் அரசு, குறுந்தகவல் சேவையை அன்று முழுவதும் தடை செய்து விடுவார்கள்!
ஈ.பீ வழக்கம் போல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கரண்ட்டை கொடுத்த வண்ணமும், எடுத்த வண்ணமுமாக இருப்பர்!
கடைசியாக, இரவு நேரம் , ஒளி பரப்பாகும் சிறப்பு நீயா நானா வில் , கண்டிப்பாக இப்போதைக்குள் உலகம் அழியாது என்று ஓங்கி கூறி அன்றைய எபிசோடை மகிழ்ச்சிகரமாக முடித்து வைப்பார்கள்! அதை கேட்ட நம் மக்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகளை கொழுத்தி போட்டு அன்றைய தினத்தை பண்டிகை நாள் போல் கொண்டாடுவார்கள்! எனக்கு ஒரே ஒரு ஆசைதான், அன்று இதை சாக்கு வைத்து விடுமுறை அளித்தால், அதிகாலையில் ஒரு ஒரு மணி நேரம் கூடுதலாக உறங்கலாம், பார்க்கலாம் என் கூற்று நிஜமாகுமா என்று!!