எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


3 பின்னூட்டங்கள்

நான் வளர்த்த பூனைகள்

poonai

முதன் முதலில் ஒரு பூனை குட்டியை தூக்கி வர சென்றது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது! அப்பாவுக்கு எனது நன்றிகள்! நாங்கள் சென்ற வீட்டில் ஒரு ஐந்து, ஆறு பூனை குட்டிகள் இருந்தன, எதை எடுக்க, எதை விட்டு விட்டு வர, மனது ஒரு நிலையிலேயே இல்லை, எல்ல குட்டிகளும் ரொம்ப அழகாக இருந்தன! அத்தனையையும் தூக்கி செல்ல ஆசைதான், ஆனால் ஒன்றுக்கு மெல் எடுத்து செல்ல அனுமதி இல்லை! ஒரு கருப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் இருந்த குட்டியை ஒரு மஞ்ச பையில் போட்டு குடுத்தார்கள்! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது! வீட்டுக்கு அழைத்து வந்த கொஞ்ச நிமிடங்களிள், பூனை புது பெண்ணை போல் ஓடி ஒளிந்து கொண்டது! நானும் எனது அருமை தம்பியும், அதன் பயத்தை களையும் அத்தனை யுக்திகளையும் கையாள்வோம்! முதலில் ஒரு தட்டில் பாலை ஊற்றி, அது ஒளிந்திருக்கும் இடத்தின் அருகே சென்று வைப்போம்! அந்த அறையில் யாரும் இல்லாத நேரம், பூனை குட்டி, வெளியில் வந்து பாலை அருந்தி விட்டு செல்லும்! ஒரு இரண்டு மூன்று நாட்கள் இதே கதை தான்! பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வந்து அட்டை போல் ஒட்டி கொள்ளும்!
எனது அம்மாவுக்கு பூனைகளை கண்டாலே பிடிக்காது! இந்த வீட்டில் ஒன்று நான் இருக்கனும், இல்லை இந்த பூனைனு அடிக்கடி புலம்பி கொண்டே இருப்பார்கள், ஆனால் நாங்கள் அதை ஒரு போதும் காதில் வாங்கியதே இல்லை! அம்மாவுக்கு தன் குழந்தைகள் மேல் அக்கறை, எங்களுக்கு எங்கள் பூனை மேல்! நானும் எனது தம்பியும் நிறைய பூனை வளர்த்திருக்கிறோம், எனக்கும் எனது தம்பிக்கும் ஒத்து போகிர ஒரே விஷயம் இந்த பூனை வளர்ப்பு ஒன்றுதான்! நாங்கள் வளர்த்த ஒவ்வொரு பூனையும் ஒவ்வொரு மாதிரி! எல்லா பூனைகளும் குட்டி குழந்தைகள் போல தான், எல்லா விதமான சேட்டைகளும் செய்யும்!
ஒரு பூனை குட்டி நான் பூஸ் என்று அழைத்தால் மட்டும் ஹ்ம்ம் என்று பதில் கூறும், வேறு யார் அழைத்தாலும் கண்டு கொள்ளாது! கிட்டதட்ட நான் வளர்த்த எல்லா பூனை குட்டிகளும் எனக்கே செல்லம்! நான் படிக்கும் போது, வீட்டு பாடம் எழுதும் போது, என் மடியில் படுத்து உறங்கும்! கால் வலித்தாலும், பூனை குட்டி என் மடியில் உறங்கி முடித்து, எழும் வரை நான் எழுந்து கொள்ளாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பேன்! அம்மா  முறைத்து கொண்டே செல்வார்கள்! பசி வந்து விட்டால் மட்டும், நாங்க வளர்த்த அத்தனை பூனை குட்டிகளும், அம்மாவின் காலையே சுற்றி சுற்றி வரும்! அம்மா என்ன வைதாலும் பொருத்து கொள்ளும்! ஒரு நாள் வழக்கம் போல் அம்மா ஒரு பூனை குட்டியை கண்டபடி வைது கொண்டிருந்தார்கள், அந்த பூனை சரசர வென்று அவர்கள் உட்கார்ந்த் மூங்கில் நாட்காலியில் ஏறீ , ஒரு கால் நகத்தால், நாட்காலியை பற்றி கொண்டு, இன்னொரு காலால் அம்மாவை நன்கு அடித்தது! இப்பொழுது அந்த  நிகழ்ச்சியை  நினைத்தாலும், சிரிப்பு அள்ளிக் கொண்டு வரும்!
இன்னொரு பூனை குட்டிக்கு , கம்பளி , சாக்ஸ் இவற்றை கண்டு விட்டால் கிறுக்கு பிடித்து விடும்! எங்கள் வீட்டில் இருந்த அத்தனை துணிகளும், ஒன்றன் பின் ஒன்றாக கிளிய ஆரம்பித்தன! அம்மாவின் கோபத்துக்கோ அளவே இல்லை! பின்பு என்ன நடந்திருக்கும், கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு விட்டு வந்து விட்டார்கள்! நான்கு தாயில்லா , கண்ணை கூட திறக்காத பூனை குட்டிகளை வளர்ததுதான் மறக்கவே முடியாது! எல்லா பூனைகளையும் நல்லா வளர்த்து, பிரிய மனமில்லாமல் கொண்டு போய் வெளியே விடுவோம்! ரொம்ப சிறிய வயதிலேயே தாய்மை என்கிற அற்புதமான உணர்வை எங்களுக்கு உணர்த்திய எங்கள் பெற்றோருக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள்!