எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


8 பின்னூட்டங்கள்

எங்க வீட்டு தொலைபேசி


சுமை தாங்கிக்கு மறு உதாரணம் எங்க வீட்டு தொலைபேசி தாங்க! கிட்டதட்ட ஒன்னரை வருடமாக எங்களுடன் இருக்கிறது.சும்மா சொல்லகூடாது செம பலசாலி இந்த தொலைபேசி, எத்தனையோ தடவை மேசை மேலே இருந்து கீழே விழுந்து இருக்கிறது, தர தர வென்று இழுக்கப்பட்டிருக்கிறது, சிதறு தேங்காய் விட்டு எறிவதை போல் எறியப்பட்டு இருக்கிறது! எங்கள் கடைகுட்டி பையனின் அத்தனை கோபங்களையும் தன் மேல் தாங்கி கொண்ட சுமைதாங்கி! சொன்னால் நம்ப மாட்டீர்கள், இது வரை ஒரு சிறு கீறல் கூட எங்கள் தொலைபேசியின் மேல் விழுந்ததில்லை!
ரொம்ப அதிர்ஷ்டமான தொலைபேசீங்க, மாதத்தில் ஒரு முறையாவது எங்கள் தொலைபேசி எண், தேர்ந்துஎடுக்க பட்டு விடும்! எங்கள் எண் தெர்ந்தெடுக்க பட்டு, எங்களை குடும்பத்தோடு கோவா அனுப்புவதில் நிறைய பேர் குறியாக இருப்பார்கள், அது என்ன, ஒவ்வொரு தடவையும், கோவா அனுப்புவதிலேயே இருக்கிறார்கள், இந்தியாவில் வேற ஊரே இல்லையா! இவ்வாறாக, எங்கள் காதில் பூ சுற்ற ஆரம்பிப்பவர்கள், அத்தோடு பேச்சையும் முடிக்க மாட்டார்கள், என் நேரத்தையும் வீணடித்து விடுவார்கள்! இந்த மாதிரி சமயங்களில், அவர்களிடம் தப்பித்து செல்ல, நான் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி, எங்கள் தொலைபேசியின் ரிசீவரை கழற்றி தனியே வைத்து விடுவதுதான்!
இப்படி ரிசீவரை தனியே கழற்றி வைப்பதை பார்த்த என் கடை குட்டி பையன், அதை அப்பப்ப எடுத்து காதில் வைத்து அவனாக பேசி கொண்டிருப்பான்! சில சமயம் ரிசீவர் காணாமல் போய் விடும், பதறி கொண்டு தேடினால், அது என் குட்டி பையனின் விளையாட்டு சாமான் வைக்கும் கூடையில் ஒளிந்து கொண்டு இருக்கும்!
ஒவ்வொரு தடவை எங்க தொலைபேசி கீழே விழும் போது, நெஞ்சம் பதறி அடித்து ஒடி வருவது நான் மட்டும்தான்! உயிரை விட்டிருக்குமோ என்று, மருத்துவர் நாடி பிடித்து பார்ப்பது போல், நானும் ரிசீவரை எடுத்து இன்ஸ்டுருமென்டில் சொருகி, ரிசீவரை காதில் வைத்து, தொலைபேசி வேலை செய்வது உறுதியான உடன் தான் எனக்கு இங்கே உயிர் வரும்! என் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டது இந்த தொலைபேசி!
முன்னாடி மாதிரி தொலைபேசியை  இப்பொழுது யாருங்க சுத்தம் செய்ய வருகிறார்கள், நாமாக சுத்தம் செய்தால் தான் உண்டு! என் பெரிய பையன், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, காலின் லிக்விட் கிளீனர் வைத்து நன்றாக தொலைபேசியை துடைத்து சும்மா பழ பழவென்று ஆக்கி விடுவான்! ஆனால் காலின் வைத்து துடைத்த பிறகு, எங்கள் தொலைபேசி இரண்டு நாள் மப்பிலேயே இருக்கும்! எப்போ ரிசீவரை காதில் வைத்தாலும், ‘நீங்கள் டையல் செய்த எண்ணை சரி பார்க்கவும்’ என்று, சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி கொண்டே இருக்கும்! ஒரு இரண்டு நாள் அதன் போக்கிலேயே விட்டு விட்டால், தானாகவே சரி ஆகிவிடும்!
வீட்டின் உள்ளே அடிக்கடி தொலைந்து போகும் எனது கை பேசியை கண்டுபிடித்து தருவதும் எனது அருமை தொலைபேசிதான்! நிஜமாகவே அருமையான தொலைபேசிதானே!!