எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


4 பின்னூட்டங்கள்

வாங்க பீட்சா வை ருசிக்கலாம்

படம் சூடாக பரிமாறப்பட்ட சில நிமிடங்களிலேயே , நமக்கு ஆர்வ பசியை தூண்டி விடுகிறது இந்த பீட்சா! ஆங்ஆங்கே சிரிப்பு வெடிகளை வேறு சொருகி நம் வயிற்றை சிறிது பதம் பார்க்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்! வெறும் டார்ச் லைட்டை மட்டும் பயன்படுத்தி இவ்வளவு பயமுருத்தமுடியுமா, ஆச்சரியம்தான்! இருட்டிலே நம் சொந்த வீட்டில் நடமாடுவதற்கே பயமாக இருக்கும், இதுல தெரியாத ஒரு வீட்டில், அதுவும் கரண்ட் இல்லாத நேரத்தில், யப்பப்பா திக் திக் நிமிடங்கள்!! ரொம்ப நாள் கழித்து ஒரு பயமுறுத்தும் திகில் படம், நாற்காலியோடு  ஒன்றி, கைகளால் அப்பப்ப கண்ணையும், வாயையும் பொத்தி பொத்தி ரசித்தேன்! இருட்டில் செல் போன்களும், லேன்ட்லைன் போன்களும் மாறி மாறி அலறி, என்னை உள்ளுக்குள் அலற வைத்து விட்டது! திரையில் போன் ரிங் அடித்த அதே நேரம் என் செல் போனும் அலறி , சிறிது என் வயற்றில் புளியை கரைத்து புளி குழம்பே வைத்து விட்டது! அந்த பேய் பங்களாவில் ஏன் அத்தனை மரபாச்சி பொம்மைகள், எல்லாம்  குச்சி கைகளை நீட்டி கொண்டு பயமுறுத்தியது ! ஒரு கட்டத்தில், கதையின் நாயகனுக்கு மன நிலை சரி இல்லையோ என்று நினைத்தால் , நமக்குதான் மனம் ஒரு நிலையில் இல்லை என்று சீக்கிரமே புரிய வைத்து விடுகிறார்கள்! ஒரு வழியாக பேய் கதையை முடித்து விட்டார்கள் என்று சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தால், படம் முடிய போகும் தருவாயில், நிஜமாகவே பேய் கதையை ஆரம்பிக்கிறார்கள்!!