எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


6 பின்னூட்டங்கள்

எங்க ஊரு ரயில்வே கிராசிங்

படம்                  ஏன் லேட்டுன்னு யாரவது ஸ்கூல்லயோ , அலுவலகங்களிலோ யாரவது கேட்டால் , சொல்வதற்கு இருக்கும் நூறு காரணங்களில், இதுவும் ஒன்று,’ ரயில்வே கிராசிங் மூடி இருந்தது!’ காலையில் அவசர அவசரமாக , மிகமிக சூடான இட்லியை , அம்மாவுக்காக வாயில் அடைத்து, மென்று, விழுங்கி, தண்ணீர் குடித்தும் குடிக்காமலும் , கணக்கு ஸ்பெஷல் வகுப்புக்காக , சைக்கிளில் பறந்து சென்றால், வழக்கம் போல் கேட் மூடி இருக்கும்! ரயில் வந்து, கேட்டை திறந்து , ஸ்கூல்லை அடைவதற்குள் , பாதி வகுப்பு நடந்து முடிந்து விடும்!

இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவே ஒரு சின்ன குறுக்கு பாதையை உருவாக்கி வைத்திருந்தார்கள்! கொஞ்சம் தில் இருந்தால் போதும், சைக்கிளை அலேக்காக தூக்கி, ரயில் தடத்தை தாண்டி அந்த பக்கம் சென்று விடலாம்! பத்து பேரில் கிட்டத்தட்ட எட்டு பேர் அந்த குறுக்கு பாதையை தான்  உபயோகிப்பார்கள். அதில் நானும் ஒருத்தி! ரயில் கேட்டை வந்து அடைவதற்கு ஒரு இருநூறு அடி முன்னால் ஒரு ஆற்று பாலம், அதனால் சிறிது மெதுவாகத்தான் ஊர்ந்து வரும். எத்தனையோ தடவை, ரயில் ஊர்ந்து வருவதை பார்த்து கொண்டே, தடத்தை தாண்டி சென்றிருக்கிறேன். நான் தனியாக சென்றவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஒரு தடவை , தெரியாத்தனமாக , நான் கெட்டது போதாதென்று , என் தங்கையையும். அந்த குறுக்கு பாதையில் அழைத்து சென்றேன். நான் எப்போதும் போல் தாண்டி சென்று விட்டேன், என் தங்கையோ, சைக்கிளை தூக்க முடியவில்லை என்று நட்ட நடு தடத்தில் நின்று விட்டாள்! ரயில் வேறு வந்து கொண்டிருந்தது , நான் என் சைக்கிளை கீழே போட்டு விட்டு , அவள் சைக்கிளை தூக்க சென்றேன், அடுத்த நொடி என் சித்தப்பா கண்களில் தீ பொறியுடன்  முறைத்து கொண்டே சைக்கிளை தூக்கி கொடுத்தார்கள்! அப்புறம் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே வேண்டியதில்லை!

ரயில்வே தடத்தில் பேலன்ஸ் செய்து நடந்து செல்வது , ரொம்பவம் பிடித்தமான ஒரு விஷயம்! எப்பொழுதும் ஒரு கிறுக்கு தனம் செய்யாமல் இருந்ததில்லை, ரயில் வருவதற்கு சற்று முன் , தடத்தின் மேல் சிறு கல்லை வைத்து விட்டு, அது ரயிலின் சக்கரத்தில் உடைந்து  பொடி ஆவதை ஆசையோடு பார்போம்! ஒரு நாள் மூன்று வெவ்வேறு அளவிலான கற்களை ஒன்றன் பின் ஒன்றாக தடத்தின் மேல் வைத்து வழக்கம் போல் காத்து கிடந்தோம்! எங்க ஊரு புகை வண்டி வழக்கம் போல் அக்கட்களை சுக்கு நூராக்கிவிட்டு சென்றது! கூடவே ரயிலின் ஓட்டுனரும் தன் நாக்கை மடக்கி , விரலை ஆட்டு ஆட்டென்று  ஆட்டி விட்டு சென்றார்! அதுக்கப்புறம் ரயில்வே தடத்தின் திசையில் கூட தலை வைத்து படுத்ததில்லை!