எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


4 பின்னூட்டங்கள்

நானும் நான் படித்த விதமும்

ஆரம்ப காலத்தில் எனக்கு படிப்பது கொஞ்சம் கூட சுலபமே இல்லாத விஷயம்! புரிந்து படித்த நாட்களை விட, எப்படி படிக்காமல் தப்பிக்கலாம் என்று யோசித்த நாட்கள் தான் அதிகம்! சத்தியமாக நான் பிட்டு வைத்து எக்ஸாம் எழுதியதில்லை, அனால் பிட்டு வைத்து படித்ததுண்டு! அம்மாவிடம் எக்சாமுக்கு முந்தைய தினம் எப்படியாவது ஒப்பேத்தி விட்டு சென்று விடுவேன்! அனால் மார்க் வந்து என் முக திரையை கிழிக்காமல் இருந்ததில்லை! பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான், அது போல் என்னையும் ஒரு நாள் கையும் களவுமாய் பிடித்து துவைத்தார்கள் ! என்ன துவைத்து என்ன பிரயோஜனம் , இருபது தானே கூடத்தில் வரும்! குடியரசு தினத்தையும் , சுதந்திர தினத்தையும் குழப்பாமல் எக்ஸாம் எழுதியதே இல்லை!!

கணக்கு பாடம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது! ‘சி’ அல்லது ‘டி’ கிரேட் தான் எப்பொழுதும் வாங்குவேன்! கணக்கு ஆசிரியர்களுக்கு என்னை கண்டாலே ஆகாது, ஆனால் பத்தாவது கணக்கு தேர்வில் இருநூறுக்கு நூற்றிதொனுற்றி ஒன்பது மார்க் வாங்கிய போது கிட்டதட்ட அதிர்ச்சியில் மயங்கியே விழுந்து விட்டார்கள்! சில சமயம் அதிர்ஷ்டம் நம் கதவை தட்டும் என்பார்களே , அது போல நான் கணக்கு தேர்வின் முந்தைய நாள் எழுதி படித்த பழைய வினா தாள்களில் ஒன்று அப்படியே அச்சு கூட மாறாமல் அப்படியே வந்திருந்தது! எந்த புண்ணியவான் வினா தாளை செட் செய்தாரோ , அவருக்கு கோடி புண்ணியம்! அதை நம்பி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் கணக்கில் எடுத்து விடுவாள் என்று நம்பிய கணக்கு ஆசிரியை யை என்னவென்று சொல்வது!

இந்த வரலாறு, புவியியல் இருக்கு பாருங்க அது மிக பெரிய தலை வலி! அதுவும் அந்த வரலாறு பாடத்தில் வரும் மேப்பில் எப்பொழுதும் ஜீரோ மார்க்தான்! எந்த அரசர் , எவ்ளோ பெரிய ராஜ்ஜியம் வைத்து இருந்தால் எனக்கென்ன, சும்மாவே ஒன்றும் ஞாபகம் இருக்காது, இதில் இது வேற! ஆனால் மறக்காமல் முக்கடலையும் குறித்து விடுவேன் , அது எந்த மேப் என்றாலும்! உயிரியல் உயிரை வாங்கும்! பெரிபிளநேட்டா அமெரிக்கான தவிர ஒன்றும் ஞாபகம் இருக்காது! உயிரியல் பாடத்தில்  படம் வரைவது கொடுமையிலும்  கொடுமை! பார்த்து டினோசரை கூட வரைந்து விடுவேன், ஆனால் பார்க்காமல் சத்தியமாக ஒரு தவளையை கூட என்னால் வரைய முடியாது! பத்தாவது முடித்த கையோடு இந்த வரலாறு, புவியியல், உயிரியல் பாட புத்தகங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!

ஐயோ முக்கியமானதை மறந்துட்டேனே , அதான் நம்ம ஹிந்தி, அதற்கு ஒரு டியூஷன் வேறு! மத்யம்மா தேர்வின் போதெல்லாம், இப்பொழுது எழுதுவது போல் , சொந்த கதை, சோக கதைதான் எழுதினேன், சொன்ன நம்ப மாட்டீங்க , நான் அத்தேர்வை முதல் வகுப்பில் பாஸ் செய்தேன்!

                                                                                 இன்றைய காலத்தில் குழந்தைகள் சந்தோஷமாக படிக்கிறார்கள், அதிக வீட்டு பாடம் கிடையாது, ஸ்மார்ட் வகுப்பு செல்கிறார்கள் , வினாத்தாள் வடிவமைப்பு மாறி இருக்கிறது, ரொம்ப முக்கியமான விஷயம், ஆசிரியர்கள் அடிப்பதில்லை, முட்டி கால் போடும் அவலம் இல்லை, பெஞ்ச் மேல் ஏறி நிற்பதில்லை, விளையாட்டு திடலை மூன்று முறை சுற்றி ஓட வேண்டியதில்லை, முக்கியமாக இம்போசிசன் குடுப்பதில்லை! குடுத்து வைத்த குழந்தைகள்!!!